Jun 9, 2022
காதர்...நம்ம பையன் தாங்க! ஒரு சராசரி யூத்! ஆனா; இவன் கிட்ட ஒரு speciality இருக்குங்க! ஆமாம்! இவன் யாரை பார்த்தாலும் காதலிக்க தொடங்கிடுவான். வாங்க, நாம காதரோட காதல்களை பாக்கலாம்.
அப்போ காதர் இரண்டாம் வகுப்புல படிச்சிட்டு இருந்தான். வசுந்தரா மிஸ் தான் இவன் கிளாஸ் டீச்சர். காதர் வசுந்தரா டீச்சரோட தினமும் டூயட் பாடிக்கிட்டே தன்னோட oneside லவ் -அ வளர்த்துட்டு இருந்தான். ஒருநாள், காதர் கனவுல இருந்தப்போ வசுந்தரா டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க. இவன் கனவுல இருக்கறத பாத்துட்டு நல்லா விளாசு விளாசு-னு விளாசிட்டாங்க! அன்னையில இருந்து காதர், வசுந்தரா டீச்சரை இனிமேல் காதலிக்க கூடாது-னு முடிவு பண்ணிட்டான். டீச்சருக்கும் விரைவிலே திருமணம் முடிந்தது.
நான்காம் வகுப்பு! காதர் பக்கத்து சேரில் இந்து அமர்வாள். இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் காதருக்கு குறுகுறு என்றிருக்கும். ஒருநாள் ஒரு சின்ன பேப்பரில் i love you என்று எழுதி, அவளிடம் இவன் கொடுக்க, அவளோ அழுது ஒப்பாரி வைக்க, இரு வீட்டு பெரியவர்களும் பஞ்சாயத்து செய்து இவர்களை சமாதானப் படுத்தினார்கள். அடுத்த வருடம் இந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டாள்!
எட்டாம் வகுப்பில்...முழங்கை தொடங்கி மணிக்கட்டு வரையில் 'மணிமேகலை' என பேனாவால் பெரிதாக எழுதி, டியுஷன் முடிந்து வீட்டுக்கு வந்தான். அப்பா அதை பார்த்துவிட்டு ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அன்றிலிருந்து டியூஷன் செல்வது நிறுத்தப் பட்டது.
பத்தாம் வகுப்பில், ... காதர் தன் இள வயது கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்த காலம் அது! காதருக்கு தன் வயதொத்த பிள்ளைகள் எல்லாம் கேர்ள் பிரண்ட்ஸ்-ஸோடு பிசியாக காலம் கழிப்பதை எண்ணி மிகக் கவலை உண்டாயிற்று! உடனே அவனும் தன் முயற்சிகளில் இறங்கினான். அப்போது தான் அவளை பார்த்தான். அந்த சிறுமி மஞ்சள் கலந்த ஒரு வெளிர் நிறத்தில் இருந்தாள். நம்ம காதருக்கு அவளை மிகவும் பிடித்து போயிற்று. அவள் பின்னாலயே கொஞ்ச காலம் சுற்றினான். அவள் போகுமிடமெல்லாம் இவனும் போனான். பள்ளி இறுதியில் அந்த பெண் காதரை அண்ணா என்று சொல்லி விட்டு போய் விட்டாள். காதருக்கு கவலையாகிப் போய்விட்டது!
இது காதர் பள்ளி இறுதி வகுப்பு படித்த போது! மீரா மீரா னு ஒரு பொண்ணு. நம்ம பயலை விட ரெண்டு வயசு பெரியவ. இவளது அப்பழுக்கற்ற அழகு நம்ம காதரை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. காதர் இவளிடம் தன் காதலை சொன்னவுடன் அவளும் ஒப்புக் கொண்டாள். 'பிரேமம்' படத்தில் வரும் மலர் டீச்சரைப் போல் அவள் தனது சகோதரனிடம் காதர் தனக்குத் தம்பி போல என்று சொல்லியவுடன், அவன் தனது காதலை முறித்துக் கொண்டான்.
அப்போதிருந்து காதர், தான் யாரையும் காதலிக்க போவதில்லை என்று உறுதி கொண்டான். ஆனால்,இரகசியமாக தனக்குள் ஒரு இலட்சியத்தை வளர்த்துக் கொண்டான். அது,... ஒரு அழகான பெண்ணை தன் பைக்கில் பின்னால் உட்கார வைத்து, சத்யம் தியேட்டரில் எல்லாரும் பார்க்கும்படி பெருமையாக சென்று இறங்க வேண்டும் என்பது தான்.
இங்த உயர்ந்த இலட்சியத்தோடு நாமம் காதர் பல வருடங்களாக சென்னை மாநகரில் உலாவிக் கொண்டிருக்கிறான். நீங்கள் எங்காவது அவன் மனதுக்கு பிடித்த மாதிரியோ, அவன் இலட்சியத்திற்கு பொருந்தும் படியாகவோ, ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்தால் தயவு செய்து அவனிடம் தெரிவியுங்கள்! காதரின் காதல்கள் வாழட்டும்!