Apr 18, 2025
அக்கா...அக்கா... வீட்ல யாராது இருக்கியளா?,...
“யாரது?”
நாந்தேன் மேனகா வந்துருக்கேன் கா...
“வாம்மா உள்ள...என்ன வேணும்?”
அக்கா,...அந்தாளு ஊருக்குப் போய் இத்தோட ரெண்டு வாரம் ஆவுது க்கா... ஊட்ல பொங்க
சோறுக்கு அரிசி கூட இல்ல... அதான் உங்க கிட்ட கொஞ்சம் சோறு வங்கியாறலாம்-னு
வந்தேனுங்க க்கா...- உதட்டைச் சுழித்து
சுழித்துப் பேசினாள்.
“இதப் பாரு மேனகா... இப்டியே தெனமும் ஒவ்வொரு
வூட்லயும் போய் சோத்துக்கு நிக்கப் போறியா? அப்டி என்னதான் பண்ணுவானோ உன் ஊட்டுக்காரன்
ஊருல! போன் எதுவும் பேசினானா?”
எங்க க்கா!... மீண்டும் உதட்டைச் சுழித்தாள்.
அந்தாளு போன தெச தெரியல. அந்தாளோட மொத தாரம் அவன மந்தரம் போட்டு கட்டி வெச்சுட்டா-னு
சொல்றாங்க ஊர்காரங்க. எனக்கென்ன பண்றதுனே தெரில க்கா- உதடு கொஞ்சம் அதிகமாகவே சுழன்றது!
ஆம்! இந்த மேனகையின் கணவர் எனச்
சொல்லப்படுபவர் இன்னொருவளின் கணவர். மேனகை கட்டுமான தொழில் செய்துவரும் சங்கரன்
மேஸ்திரியின் கீழ் சித்தாளாக வேலை பார்த்து வந்து வந்தாள். அவளது கணவனாக
சொல்லப்படும் கோபாலு அதே மேஸ்திரியிடம் பெரியாள் வேலை செய்து வந்தான். மேனகையின்
உதட்டுச் சுழிப்பில் கிறங்கி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஊரை விட்டு ஓடி வந்து
விட்டனர். இந்த கோபாலு கொஞ்சமாக தண்ணி அடித்தால் கூட தன் சம்சாரம் நினைவு வந்து
ஊருக்கு ஓடி விடுவான். பின் மேனகையின் நினைவு வந்ததும் இங்கு ஓடி வந்து விடுவான்.
இந்த முறை ஊருக்குச் சென்றவனை குல தெய்வத்துக்கு கட்டிப் போட்டு அங்கேயே வைத்து விட்டனர். இதனால் மேனகைக்கு ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இப்போது வேலை செய்யும் பெரியாள் சந்துரு-விடம் உதட்டைச் சுழித்துச் சுழித்துப் பார்த்தும் பேசியும் கொண்டுதானிருந்தாள். இருந்தாலும் மழைக்காலம் ஆதலால் கால் வயிறு அரை வயிறு கஞ்சி தான்.
“இத பாரு மேனகா... நீ இப்படி கோபாலு கூடவும்
சந்துரு கூடவும் நெருங்கிப் பழகுறது இங்க தெருவுல யாருக்கும் சரியா படல. நீ இப்போ
வேல பாக்குற மேஸ்திரி ரங்கனுக்கு இதெல்லாம் புடிக்காது. நானே சொல்லக் கூடாது... எனக்கு
நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பொம்பள-னா எப்படி வேணா இருக்கலாம்-னு சொல்ற
மாதிரி இருக்கு நீ பண்றது. இத கோபாலு-வோட நிறுத்திக்கோ நீ. சந்துருவை விட்டுரு.
என்ன க்கா நீங்களே இப்படி சொல்லிட்டிங்களே...
ரங்கன் மேஸ்திரி ரொம்ப நல்லவருக்கா... சரி சரி... இப்டியே பேசிகிட்டே நிக்காத...
சோறு பொங்கினதும் நானே குடுத்தனுப்பறேன்,...”
அடுத்தநாள் காலை...
“ஐயோ...போய்ட்டானே போய்ட்டானே... நேத்து
வரைக்கும் என் கூட ஒன்னும் மண்ணுமா இருந்த என்கூட்டுக்காரன் என்ன விட்டுட்டு அந்த
மேனகா கூட ஓடிப் போய்ட்டானே....”
மேஸ்திரி ரங்கனின் மனைவி தெருவில் கூவி கூவி
ஊரைக் கூட்டி அழுது கொண்டிருந்தாள்.... மேனகை கூட்டு ரோட்டுக்கு போகும் பஸ்ஸில்
மேஸ்திரி ரங்கனோடு எந்த களங்கமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாள்.
Mar 4, 2023
“நமக்கு பொறக்கப்போற புள்ள மேல சத்தியமா நா இனிமே குடிக்க மாட்டேன் டீ!”....
Jun 9, 2022
காதர்...நம்ம பையன் தாங்க! ஒரு சராசரி யூத்! ஆனா; இவன் கிட்ட ஒரு speciality இருக்குங்க! ஆமாம்! இவன் யாரை பார்த்தாலும் காதலிக்க தொடங்கிடுவான். வாங்க, நாம காதரோட காதல்களை பாக்கலாம்.
அப்போ காதர் இரண்டாம் வகுப்புல படிச்சிட்டு இருந்தான். வசுந்தரா மிஸ் தான் இவன் கிளாஸ் டீச்சர். காதர் வசுந்தரா டீச்சரோட தினமும் டூயட் பாடிக்கிட்டே தன்னோட oneside லவ் -அ வளர்த்துட்டு இருந்தான். ஒருநாள், காதர் கனவுல இருந்தப்போ வசுந்தரா டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க. இவன் கனவுல இருக்கறத பாத்துட்டு நல்லா விளாசு விளாசு-னு விளாசிட்டாங்க! அன்னையில இருந்து காதர், வசுந்தரா டீச்சரை இனிமேல் காதலிக்க கூடாது-னு முடிவு பண்ணிட்டான். டீச்சருக்கும் விரைவிலே திருமணம் முடிந்தது.
நான்காம் வகுப்பு! காதர் பக்கத்து சேரில் இந்து அமர்வாள். இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் காதருக்கு குறுகுறு என்றிருக்கும். ஒருநாள் ஒரு சின்ன பேப்பரில் i love you என்று எழுதி, அவளிடம் இவன் கொடுக்க, அவளோ அழுது ஒப்பாரி வைக்க, இரு வீட்டு பெரியவர்களும் பஞ்சாயத்து செய்து இவர்களை சமாதானப் படுத்தினார்கள். அடுத்த வருடம் இந்து வேறு பள்ளிக்கு சென்று விட்டாள்!
எட்டாம் வகுப்பில்...முழங்கை தொடங்கி மணிக்கட்டு வரையில் 'மணிமேகலை' என பேனாவால் பெரிதாக எழுதி, டியுஷன் முடிந்து வீட்டுக்கு வந்தான். அப்பா அதை பார்த்துவிட்டு ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அன்றிலிருந்து டியூஷன் செல்வது நிறுத்தப் பட்டது.
பத்தாம் வகுப்பில், ... காதர் தன் இள வயது கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்த காலம் அது! காதருக்கு தன் வயதொத்த பிள்ளைகள் எல்லாம் கேர்ள் பிரண்ட்ஸ்-ஸோடு பிசியாக காலம் கழிப்பதை எண்ணி மிகக் கவலை உண்டாயிற்று! உடனே அவனும் தன் முயற்சிகளில் இறங்கினான். அப்போது தான் அவளை பார்த்தான். அந்த சிறுமி மஞ்சள் கலந்த ஒரு வெளிர் நிறத்தில் இருந்தாள். நம்ம காதருக்கு அவளை மிகவும் பிடித்து போயிற்று. அவள் பின்னாலயே கொஞ்ச காலம் சுற்றினான். அவள் போகுமிடமெல்லாம் இவனும் போனான். பள்ளி இறுதியில் அந்த பெண் காதரை அண்ணா என்று சொல்லி விட்டு போய் விட்டாள். காதருக்கு கவலையாகிப் போய்விட்டது!
இது காதர் பள்ளி இறுதி வகுப்பு படித்த போது! மீரா மீரா னு ஒரு பொண்ணு. நம்ம பயலை விட ரெண்டு வயசு பெரியவ. இவளது அப்பழுக்கற்ற அழகு நம்ம காதரை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. காதர் இவளிடம் தன் காதலை சொன்னவுடன் அவளும் ஒப்புக் கொண்டாள். 'பிரேமம்' படத்தில் வரும் மலர் டீச்சரைப் போல் அவள் தனது சகோதரனிடம் காதர் தனக்குத் தம்பி போல என்று சொல்லியவுடன், அவன் தனது காதலை முறித்துக் கொண்டான்.
அப்போதிருந்து காதர், தான் யாரையும் காதலிக்க போவதில்லை என்று உறுதி கொண்டான். ஆனால்,இரகசியமாக தனக்குள் ஒரு இலட்சியத்தை வளர்த்துக் கொண்டான். அது,... ஒரு அழகான பெண்ணை தன் பைக்கில் பின்னால் உட்கார வைத்து, சத்யம் தியேட்டரில் எல்லாரும் பார்க்கும்படி பெருமையாக சென்று இறங்க வேண்டும் என்பது தான்.
இங்த உயர்ந்த இலட்சியத்தோடு நாமம் காதர் பல வருடங்களாக சென்னை மாநகரில் உலாவிக் கொண்டிருக்கிறான். நீங்கள் எங்காவது அவன் மனதுக்கு பிடித்த மாதிரியோ, அவன் இலட்சியத்திற்கு பொருந்தும் படியாகவோ, ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்தால் தயவு செய்து அவனிடம் தெரிவியுங்கள்! காதரின் காதல்கள் வாழட்டும்!

