Oct 17, 2025
(இக்கட்டுரை திரு. M.G. இராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளான
டிசம்பர் 24-ஆம் நாள், எங்கள் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சியில் 2008-ஆம் ஆண்டு ‘கேப்டன் விஜயகாந்த்’ அவர்களின்
முன்னிலையில் வாசிக்கப்பட்டது.)
நமது பரந்த பாரத மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்னும் ஏழை எளியோர் மற்றும் நல்லோர்
நெஞ்சங்களிலே ஒளியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, “பாரதரத்னா” டாக்டர்.எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு இன்று நினைவு நாள்!
உலகில் பலருக்கும் நினைவுநாள் வருவது இயல்பு. ஆனால், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழை எளியோர்களும், ஏன்? நடைபாதையிலே வசிக்கின்ற கைவண்டி இழுப்பவரும் கூட தங்களது தெய்வமாக எண்ணி, ஒரு புகைப்படத்தைச் சுவரிலே ஒட்டிவைத்து கற்பூரத் தீபமேற்றி, மெழுகுவர்த்தி ஏற்றி கோயில் தெய்வத்தை வணங்குவது போல வணங்கி மகிழ்வது, ‘பரங்கிமலை பாரி’ என்றும் ‘ஏழைகளின் வள்ளல்’ என்றும் ‘மக்கள் திலகம்’ என்றும் ‘புரட்சித்தலைவர்’ என்றும் ‘பாரதரத்னா’ என்றும், இன்றும் அழைக்கப்படுகின்ற எம்.ஜி.ஆர்.ஒருவரை மட்டுமே.
வாழ்வின் நல்லதொரு நிலையில், இலங்கை, கண்டியில் பிறந்தாலும் தமிழ் மண்ணில் வறுமையோடுதான் அவரது வாழ்வு தொடங்கியிருக்கிறது. கலைத்தாய் அவரை மகனாகத் தத்தெடுத்து கொண்ட போது அவருக்கே கூட தெரியாது, இந்தத் தமிழ்நாட்டின் செல்லமகனாக, செல்வமகனாக தாம் ஆவோம் என்று! நாடக உலகிலும், திரை உலகிலும், தொடர்ந்த அவரது இளமைப் பயணத்தில், காந்திய கொள்கைகளும், கதராடையும் அவரை ஆட்கொண்டு விரிந்ததொரு தேசிய உள்ளத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தார். திரைத்துறையிலே அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்களிலே உண்மை, நேர்மை, பொதுவுடைமை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் இவை அத்தனையையும் நிலை நிறுத்தும் கொள்கை முழக்கத்தோடு, மக்களைச் சென்றடைய வைத்தார்.
அவர் பாடலொன்று என் காதுகளிலே அடிக்கடி ஒலிப்பது வழக்கம்:
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழ வேண்டும்!
ஒரு மாற்று குறையாத மன்னவன் – இவன்
என்று போற்றி புகழவேண்டும்!”
-என்ற அந்தப் பாடல் வரிகள், சோர்ந்து போன என்னைப் பலமுறை தூக்கி
நிறுத்தியிருக்கிறது. என்னை மட்டுமல்ல! தென்னிந்தியாவின் பல இலட்சக்கணக்கான மக்களை,
உயர்ந்த குறிக்கோளை நோக்கித் தூக்கி நிறுத்தியிருகிறது!
‘அறிவுஜீவி’ என்று சொல்லப்படுகிற நாடகக்கலைஞரும், எழுத்தாளருமான திரு.சோ.ராமசாமி அவர்கள் தமது ‘துக்ளக்’ இதழிலே, மக்கள் திலகத்தைப் பற்றி எழுதுகின்ற பொழுது, “ அடுப்பிலே பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உலை வைத்து விட்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்றால், நிச்சயமாக அரிசிவாங்கி, உலையிலிட்டுச் சோறு பொங்கி விடலாம், என்ற நம்பிக்கையோடு பலபேர் எம்.ஜி.ஆர்.-ஐ நம்பிச் சென்று வாழ்ந்திருக்கிறார்கள்; அந்த விஷயத்தில் அவர் நிகரற்றவர்”, என்று கூறியிருக்கிறார்.
ஆசியா வியக்கும் வண்ணம் தமிழ்மக்கள் அவரைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கியபோது, பல்லோரும் வியக்கும் வண்ணம் ‘சத்துணவு திட்டம்’ என்னும் ஏழைக் குழந்தைகளுக்கான ஆதாரத் திட்டத்தைத் தந்தார். இன்று அந்தத் திட்டத்தினுடைய வளர்ச்சி என்ன தெரியுமா? வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக்கூடிய பல இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகள் , ஏறத்தாழ சுமார் கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்தச் சத்துணவு திட்டத்தின் மூலம், தங்கள் பகல்நேர உணவை, நிறைவு செய்து கொள்கிறார்கள்; இந்தச் சத்துணவு திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக சுமார் ஒரு இலட்சம் சத்துணவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் வீட்டு வறுமை நீங்கியிருக்கிறது!
தமிழகத்தினுடைய ஏழை மக்களின் நாடித்துடிப்பை, உளமாற உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் அவரது அமைச்சரவை கொண்டுவந்த எல்லாமே, ஏழைகளுக்கான திட்டங்களாக அங்கீகாரம் செய்யப்பட்டு, பிற மாநிலத்து முதல்வர்கள் எல்லாம், எடுத்து ஆள்கிற திட்டங்களாகப் பெருமை பெற்றன. எம்.ஜி.ஆர்.-இன் திருவுருவமோ, எளியோர் நெஞ்சகளிலே நிரந்தரமாக இடம்பிடித்தது. எத்தனையோ இடர்ப்பாடுகள், தடைகள், கருத்து மோதல்கள் அத்தனையும் தாண்டி வாழ்ந்து காட்டியவர். “காலன் கூட அவர் மன உறுதியைக் கண்டு பல நேரங்களில் காத தூரம் ஓடி மறைந்திருக்கிறான்.” பாரதி சொன்னது தான் எனக்கு மீண்டும் நினைவு வருகிறது,...
“தேடிச்
சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு
கதைகள் பேசி – மனம்
வாடித்
துன்பமிக வுழன்று – பிறர்
வாடப்பல
செயல்கள் செய்து – நரைக்
கூடிக்கிழப்
பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு
இரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை
மனிதரைப் போல – நான்
வீழ்வேன்
என்று நினைத்தாயோ?”
-என்று பாரதி, தான் சாமான்யமாக மறைந்து
போகின்றவன் அல்ல; நித்தியமாக சாதனை பல செய்து, இந்த மண்ணில் வாழ்ந்து மறைவேன் என்று
சாதித்து வாழ்ந்து மறைந்தானே, அதைப்போலவே மக்கள் மனதில் வாழ்ந்திருந்த
எம்.ஜி.ஆர்-ரும், எதிர்த்து வந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, தமிழ்க்கூறும் நல்லுலகத்து தமிழர்களெல்லாம்
வியக்கும் வண்ணம், போற்றும் வண்ணம், வாழ்த்தும் வண்ணம் வாழ்ந்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு
எடுத்துக்காட்டாகி,
“இருந்தாலும்
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,
இவர்
போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!”
-என்று ஒரு திரை இலக்கிய கவிஞன் சொன்னானே, அதற்கு ஒப்ப ‘இவர் போல யார்?’ என்று இன்றளவும் சான்றோர்களும், ஆன்றோர்களும், நல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்து, மக்கள் நெஞ்சிலே வீற்றிருக்கிறார். அவரது நினைவு நாளில், அவரது ஒளிநிறை குன்றுநிகர் புகழைப் போற்றி, வணங்குவோம்!
0 comments:
Post a Comment