Oct 3, 2025

அன்பு மதம்!

 மனிதன் மனத்தால் உயர்வடைய

மனிதம் உலகில் செழிப்படைய

மாண்புறு கொள்கை தருவதுதான்

மதங்கள் என்னும் நெறிமுறையாம்!

 

இறைநெறி வழியில் நாமெல்லாம்

முறையொடு வாழ்வில் நடந்திட்டால்

அருள்நெறி உலகில் தழைத்திடுமே – பொது

நெறியொடு உலகம் திகழ்ந்திடுமே!

 

மனிதனை மனிதன் நேசிக்கும்

மாண்பை சொல்லிய மாமனிதர்

காட்டிய நெறியே மதமாகும் – உலக

மாந்தர் தழுவிடும் வழியாகும்!

 

புத்தர் இயேசு காந்தி என்ற

இத்தரை வியக்கும் வினைஞரொடு...

அன்னை தெரசா என்றொரு தாயும்

நம்மில் விதைத்தது அன்பாகும்!

 

இன்பம் துன்பம் எதுவரினும்

மனிதர்க்கெல்லாம் ஆறுதலை

அளிப்பதே சான்றோர் நெறியாகும்

அதுவே அன்பு மதமாகும்!

 

அன்பு மதத்தை மாந்தரெல்லாம் – நாடி

வணங்கிடச் செய்திடுவோம்! – மண்ணில்

மனிதரை மனிதர் நேசித்து

மனத்தால் அனைவரும் ஒன்றாவோம்!

0 comments: