Oct 4, 2025
“உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது!
கலகம் இதிலே தீருது
அச்சுக்கலையால் நிலைமை மாறுது!
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பயனில்லை!
அதை மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா
எதிர்த்துப் பேச ஆளில்லை!”
-
என்று ஒரு கவிஞர் செய்தித்தாளின் மேன்மையான
பயன்களை மக்களின் எண்ணங்களை தெளிவாகப் பாடி இருக்கிறார். உலகின் ஒரு முனையில்
நடப்பதை மற்றொரு முனையில் இருப்பவர் சிலமணி நேரத்தில் அறிந்து மகிழும் வாய்ப்பை
செய்தித்தாள் வழங்குகிறது. இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சி மூலம்
உடனுக்குடன் பல செய்திகளை நாம் அறிந்து
கொண்டாலும், காலையில் ஆர்வமோடு மக்கள் சமூகம் செய்தித்தாளைப் படிக்க விரும்பும் சுகமே
தனிதான்.
கிராமப்புறமானாலும் நகர்ப்புறமானாலும்,
தனியாகவும், கூட்டமாகவும், நூலகங்களிலும் மக்கள் செய்தித்தாள்களில் மூழ்கிக் கிடப்பதைக் காலங்காலமாக
நாம் பார்த்து வருகிறோம். மனிதன் தன் அன்றாட வாழக்கையைத் தொடங்குவதே செய்தித்தாள்களில்
இருந்துதான் என்று சொன்னால் அது மிகையாகாது!
மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் நாட்டு
முன்னேற்றத்திற்கும் செய்தித்தாள்கள் துணைபுரிகின்றன. 20-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் நம் நாட்டில் செய்தித்தாள்களையும், இதழ்களையும்
வெளியிடுதல் வளர்ச்சியடையத் தொடங்கியது. நம் நாட்டில் மொழி வளர்ச்சி, சமய
வளர்ச்சி, நாட்டுப்பற்று ஆகியவைகளைக் காரணமாகக் கொண்டே பெரும்பாலான செய்திதாள்கள்
வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன் பாரதியார்
போன்ற புலவர்களும், அறிஞர்களும் செய்தித்தாள்களின் மூலமாக விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டினர்.
மகாத்மா காந்தியடிகளும் தேசிய அளவில் ஒரு செய்தித்தாளை நடத்தி மக்களை ஒன்று
திரட்டினார்.
முதலில் ஆண்டுமலர்கள் என்னும் பெயரோடு
ஆண்டுக்கொருமுறை வெளிவரும் செய்தித்தாள்கள் தோன்றின. பிறகு, திங்கள் தோறும்
வெளிவரும் திங்களிதழ், கிழமைதோறும் வெளிவரும் கிழமையிதழ்கள், நாள்தோறும் வெளிவரும் நாளிதழ்கள் ஆகியன
தோன்றி வளர்ச்சியடைந்துள்ளன.
ஆண்டுமலர்கள், திங்களிதழ்கள் ஆகியன கட்டுரைகளையும், கதைகளையும்
வெளியிடுகின்றன. கிழமையிதழ்கள் சில கட்டுரைகளோடு நாட்டில் நிகழும் சிறப்பான
நிகழ்ச்சிகளையும் வெளியிடுகின்றன. நாளிதழ்கள் நாட்டிலும், உலகிலும்
அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகளை வெளியிடுகின்றன.
செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் நாம்
செய்திப் பரிமாற்றம், பொது அறிவு, கட்டுரை நுகர்வு, சமுதாய முன்னேற்றம், சமுதாயக் குறைகள், அரசியல் செய்திகள், வேலை வாய்ப்புச்
செய்திகள், மருத்துவச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், மாணவர்களுக்கு உதவும் கல்விக் குறிப்புகள்,
அயல்நாட்டுச் செய்திகள் ஆகியவற்றை அறிந்துகொள்கின்றோம்.
ஒருவர் அறிந்த செய்தியை மற்றொருவர் அறிந்து
கொள்வதற்கு அஞ்சல்முறை முதன்முதலில் பயன்பட்டது. செய்தியை மற்றவர்கட்கு அறிவித்து
அதனை நாடெங்கும் பரப்புதற்கு செய்தித்தாள்கள் உதவுகின்றன. பயிர்த்தொழில், வணிகம், படத்தொழில்
முதலிய சிறந்த துறைகளில் செய்திகளைப் பரிமாற்றம் செய்ய செய்தித்தாள்கள் பெரிதும்
துணைபுரிகின்றன.
பெரும்பாலான செய்தித்தாள்களில் பொதுஅறிவு
கட்டுரைகள், பொதுஅறிவு குறித்த சிந்தனைகள் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இவற்றின் மூலம் நாட்டில் அன்றாடம் நடக்கும் முக்கியச் செய்திகளை உடனடியாகத்
தெரிந்துகொள்ள முடிகின்றது. இதனால் இன்றைய மாணவச் சமுதாயத்தினருக்கும், உலக
மக்களுக்கும் பொதுஅறிவு வளர்கின்றது.
செய்தித்தாள்களில் வெளிவரும் கட்டுரைகள்
பலவகைப்படும். அறிவியல் கட்டுரைகள், பொதுஅறிவுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், கல்வியியல்
கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சமுதாய முன்னேற்றக் கட்டுரைகள் போன்றவை அவற்றுள் சில.
மாணவர்கள் இவற்றைப் படித்து அவரவர் விரும்பும் துறைகளில் உயரவும் செய்தித்தாள்கள்
உதவுகின்றன.
செய்தித்தாள்களுக்கு ஒருவர் தாமே ஒரு படைப்பை
அனுப்பி அதை பிரசுரிக்கச் செய்யலாம். அப்போது சமூகத்தில் ஒரு எழுத்தாளனோ, ஒரு கவிஞனோ,
ஒரு ஓவியனோ உருவாக்கப்படுகின்றான். ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு படைப்பாளி
உருவாக்கப்படும்போது அச்சமூகம் முன்னேற்றம் அடைகின்றது. செய்தித்தாள்களில்
வெளிவரும் செய்திகளைப் படித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகின்றனர். விழிப்புணர்வு
பெறுவதாலும் சமூகம் முன்னேற்றம் அடைகிறது. இவ்வாறு சமுதாய முன்னேற்றத்தில் செய்தித்தாள்கள்
பெரும்பங்கு வகிக்கின்றன.
செய்தித்தாள்களின் மூலம் மக்கள் தங்கள்
பகுதியிலுள்ள குறைகளை வெளியிடலாம். அவற்றைத் தீர்க்க வழி கேட்கலாம். இதனால் அவ்வப்போது
மக்களின் குறைகள் தீர்க்கப்படுகின்றன. ஆதலால், செய்தித்தாள்களை “சமுதாயக் குறைகளைத்
தீர்க்கும் களம்” என்றும் கூறலாம்.
செய்தித்தாள்களில் வெளிவரும் அரசியல்
கட்டுரைகள், அரசியல் துறைச் சார்ந்த கருத்துகள், அரசியல் தலைவர்களின் அனுபவங்கள்
ஆகியவற்றினால் நம் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். இதனால், அரசியல்
துறையிலும் முன்னேறி, பல எண்ணற்ற அரசியல் தலைவர்களை உருவாக்கலாம்.
செய்தித்தாள்கள் வேலைவாய்ப்புக் குறித்த
தகவல்களையும், விளம்பரங்களையும் தந்து நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல்
இருக்கும் எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற வழி செய்து வருகின்றது. இதனால்
வேலைதேடி அலையவேண்டிய அவசியமில்லை. வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரின்
எண்ணிக்கையும் குறைகின்றது. இவ்வாறு இளைய சமுதாயத்திற்கு உதவுவதாகவும் செய்தித்தாள்கள்
இருந்து வருகின்றன.
மருத்துவத் துறை உலகில் பழமையும், பெருமையும்
வாய்ந்தது. அதனை நாட்டு மக்களுக்கு நன்கு விளக்குவதோடு மருத்துவத்தின் சிறப்பை
அனைவரும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதையும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும்,
மருத்துவத்தின் இலக்கணம் முதலியச் செய்திகளை செய்தித்தாள்கள் வழங்கி மருத்துவத்
துறைக்கு துணைபுரிகின்றன.
பெண்கள் படித்து மகிழ்தற்பொருட்டும், அவர்கள்
முன்னேற்றம் அடைதற்பொருட்டும் செய்திதாள்கள் பெண்களுக்காக பல பயனுள்ள பகுதிகளையும்,
தகவல்களையும் அளித்து அவர்களுக்கும் துணைசெய்யும் ஒரு கருவியாய் அமைந்துள்ளன.
மாணவர்களின் முன்னேற்றங் கருதி, அவர்களுடைய
அறிவு வளர்வதற்கான பல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல்,
அவர்களுக்குத் தேர்வு சமயத்திற்குத் தேவையான பல அறியத் தகவல்களையும், தேர்வுக்
குறிப்புகளையும் வழங்கி அவர்களுக்கும் பயனுள்ளதாய் அமைகின்றன.
உலகம் இப்போது மிகவும் சுருங்கிவிட்டது.
வெளிநாடுகளில் அன்றாடம் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் நாம் தெரிந்துகொள்ள
மிகவும் பயனுள்ளதாய் இருப்பது செய்தித்தாள்களே ஆகும். எடுத்துக்காட்டாக, சுதந்திர
தின நிகழ்ச்சிகள், தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், இவற்றோடு அந்நாட்டுக் கலாச்சாரங்கள், சிறப்புகள், தலைவர்களின்
கருத்துகள் போன்ற பல குறிப்புகளையும் செய்தித்தாள்கள் நமக்குத் தந்து பயன்பெறச்
செய்கின்றது.
சில முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அவை பற்றிய
அரிய புகைப்படங்களையும் செய்திகளையும் தருபவை செய்தித்தாள்களே ஆகும். எடுத்துக்காட்டாக
கடல் கொந்தளிப்பு, எரிமலைச் சீற்றம், இயந்திரக் கண்டுபிடிப்புகள், புயல், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களின் போதும் அவை பற்றிய
குறிப்புகளோடு காண்பதற்கே அரிய புகைப்படங்களையும் தந்து உதவிபுரிகின்றன.
வெளிநாட்டிலும்,
உள்நாட்டிலும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை அதைப்பற்றிய கருத்துகளுடன் செய்தித்தாள்கள்
வெளியிடுகின்றன. இவ்வாறு வெளியிடுவதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளில்
ஈடுபட்டவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்கள் மேலும் முன்னேற உதவி செய்கின்றன. அயல்நாடுகளில்
நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை இங்கிருப்பவர்கள் நேரில் கண்டு களிப்பது அரிது.
ஆனால், செய்தித்தாள்களின் மூலம் அப்போட்டிகளின் முடிவுகளையும்,
புகைப்படங்களையும், செய்திகளையும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.
மக்களின் நன்மைக்காகச் செய்தித்தாள்கள் தொண்டு செய்கின்றன. அவை மனிதரின் வாழ்க்கைக்கு உதவி செய்கின்றன. மனிதரின் வாழ்க்கையோடு இணைந்து சமுதாய மேம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்குவது என்பதில் பெருமிதம் கொள்வோம்!
0 comments:
Post a Comment