Oct 4, 2025
“உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது!
கலகம் இதிலே தீருது
அச்சுக்கலையால் நிலைமை மாறுது!
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பயனில்லை!
அதை மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா
எதிர்த்துப் பேச ஆளில்லை!”
-
என்று ஒரு கவிஞர் செய்தித்தாளின் மேன்மையான
பயன்களை மக்களின் எண்ணங்களை தெளிவாகப் பாடி இருக்கிறார். உலகின் ஒரு முனையில்
நடப்பதை மற்றொரு முனையில் இருப்பவர் சிலமணி நேரத்தில் அறிந்து மகிழும் வாய்ப்பை
செய்தித்தாள் வழங்குகிறது. இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சி மூலம்
உடனுக்குடன் பல செய்திகளை நாம் அறிந்து
கொண்டாலும், காலையில் ஆர்வமோடு மக்கள் சமூகம் செய்தித்தாளைப் படிக்க விரும்பும் சுகமே
தனிதான்.
கிராமப்புறமானாலும் நகர்ப்புறமானாலும்,
தனியாகவும், கூட்டமாகவும், நூலகங்களிலும் மக்கள் செய்தித்தாள்களில் மூழ்கிக் கிடப்பதைக் காலங்காலமாக
நாம் பார்த்து வருகிறோம். மனிதன் தன் அன்றாட வாழக்கையைத் தொடங்குவதே செய்தித்தாள்களில்
இருந்துதான் என்று சொன்னால் அது மிகையாகாது!
மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் நாட்டு
முன்னேற்றத்திற்கும் செய்தித்தாள்கள் துணைபுரிகின்றன. 20-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் நம் நாட்டில் செய்தித்தாள்களையும், இதழ்களையும்
வெளியிடுதல் வளர்ச்சியடையத் தொடங்கியது. நம் நாட்டில் மொழி வளர்ச்சி, சமய
வளர்ச்சி, நாட்டுப்பற்று ஆகியவைகளைக் காரணமாகக் கொண்டே பெரும்பாலான செய்திதாள்கள்
வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன் பாரதியார்
போன்ற புலவர்களும், அறிஞர்களும் செய்தித்தாள்களின் மூலமாக விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டினர்.
மகாத்மா காந்தியடிகளும் தேசிய அளவில் ஒரு செய்தித்தாளை நடத்தி மக்களை ஒன்று
திரட்டினார்.
முதலில் ஆண்டுமலர்கள் என்னும் பெயரோடு
ஆண்டுக்கொருமுறை வெளிவரும் செய்தித்தாள்கள் தோன்றின. பிறகு, திங்கள் தோறும்
வெளிவரும் திங்களிதழ், கிழமைதோறும் வெளிவரும் கிழமையிதழ்கள், நாள்தோறும் வெளிவரும் நாளிதழ்கள் ஆகியன
தோன்றி வளர்ச்சியடைந்துள்ளன.
ஆண்டுமலர்கள், திங்களிதழ்கள் ஆகியன கட்டுரைகளையும், கதைகளையும்
வெளியிடுகின்றன. கிழமையிதழ்கள் சில கட்டுரைகளோடு நாட்டில் நிகழும் சிறப்பான
நிகழ்ச்சிகளையும் வெளியிடுகின்றன. நாளிதழ்கள் நாட்டிலும், உலகிலும்
அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகளை வெளியிடுகின்றன.
செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் நாம்
செய்திப் பரிமாற்றம், பொது அறிவு, கட்டுரை நுகர்வு, சமுதாய முன்னேற்றம், சமுதாயக் குறைகள், அரசியல் செய்திகள், வேலை வாய்ப்புச்
செய்திகள், மருத்துவச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், மாணவர்களுக்கு உதவும் கல்விக் குறிப்புகள்,
அயல்நாட்டுச் செய்திகள் ஆகியவற்றை அறிந்துகொள்கின்றோம்.
ஒருவர் அறிந்த செய்தியை மற்றொருவர் அறிந்து
கொள்வதற்கு அஞ்சல்முறை முதன்முதலில் பயன்பட்டது. செய்தியை மற்றவர்கட்கு அறிவித்து
அதனை நாடெங்கும் பரப்புதற்கு செய்தித்தாள்கள் உதவுகின்றன. பயிர்த்தொழில், வணிகம், படத்தொழில்
முதலிய சிறந்த துறைகளில் செய்திகளைப் பரிமாற்றம் செய்ய செய்தித்தாள்கள் பெரிதும்
துணைபுரிகின்றன.
பெரும்பாலான செய்தித்தாள்களில் பொதுஅறிவு
கட்டுரைகள், பொதுஅறிவு குறித்த சிந்தனைகள் தொடர்பான செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இவற்றின் மூலம் நாட்டில் அன்றாடம் நடக்கும் முக்கியச் செய்திகளை உடனடியாகத்
தெரிந்துகொள்ள முடிகின்றது. இதனால் இன்றைய மாணவச் சமுதாயத்தினருக்கும், உலக
மக்களுக்கும் பொதுஅறிவு வளர்கின்றது.
செய்தித்தாள்களில் வெளிவரும் கட்டுரைகள்
பலவகைப்படும். அறிவியல் கட்டுரைகள், பொதுஅறிவுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், கல்வியியல்
கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், சமுதாய முன்னேற்றக் கட்டுரைகள் போன்றவை அவற்றுள் சில.
மாணவர்கள் இவற்றைப் படித்து அவரவர் விரும்பும் துறைகளில் உயரவும் செய்தித்தாள்கள்
உதவுகின்றன.
செய்தித்தாள்களுக்கு ஒருவர் தாமே ஒரு படைப்பை
அனுப்பி அதை பிரசுரிக்கச் செய்யலாம். அப்போது சமூகத்தில் ஒரு எழுத்தாளனோ, ஒரு கவிஞனோ,
ஒரு ஓவியனோ உருவாக்கப்படுகின்றான். ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு படைப்பாளி
உருவாக்கப்படும்போது அச்சமூகம் முன்னேற்றம் அடைகின்றது. செய்தித்தாள்களில்
வெளிவரும் செய்திகளைப் படித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகின்றனர். விழிப்புணர்வு
பெறுவதாலும் சமூகம் முன்னேற்றம் அடைகிறது. இவ்வாறு சமுதாய முன்னேற்றத்தில் செய்தித்தாள்கள்
பெரும்பங்கு வகிக்கின்றன.
செய்தித்தாள்களின் மூலம் மக்கள் தங்கள்
பகுதியிலுள்ள குறைகளை வெளியிடலாம். அவற்றைத் தீர்க்க வழி கேட்கலாம். இதனால் அவ்வப்போது
மக்களின் குறைகள் தீர்க்கப்படுகின்றன. ஆதலால், செய்தித்தாள்களை “சமுதாயக் குறைகளைத்
தீர்க்கும் களம்” என்றும் கூறலாம்.
செய்தித்தாள்களில் வெளிவரும் அரசியல்
கட்டுரைகள், அரசியல் துறைச் சார்ந்த கருத்துகள், அரசியல் தலைவர்களின் அனுபவங்கள்
ஆகியவற்றினால் நம் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். இதனால், அரசியல்
துறையிலும் முன்னேறி, பல எண்ணற்ற அரசியல் தலைவர்களை உருவாக்கலாம்.
செய்தித்தாள்கள் வேலைவாய்ப்புக் குறித்த
தகவல்களையும், விளம்பரங்களையும் தந்து நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல்
இருக்கும் எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற வழி செய்து வருகின்றது. இதனால்
வேலைதேடி அலையவேண்டிய அவசியமில்லை. வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரின்
எண்ணிக்கையும் குறைகின்றது. இவ்வாறு இளைய சமுதாயத்திற்கு உதவுவதாகவும் செய்தித்தாள்கள்
இருந்து வருகின்றன.
மருத்துவத் துறை உலகில் பழமையும், பெருமையும்
வாய்ந்தது. அதனை நாட்டு மக்களுக்கு நன்கு விளக்குவதோடு மருத்துவத்தின் சிறப்பை
அனைவரும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதையும், மருத்துவர்களின் ஆலோசனைகளையும்,
மருத்துவத்தின் இலக்கணம் முதலியச் செய்திகளை செய்தித்தாள்கள் வழங்கி மருத்துவத்
துறைக்கு துணைபுரிகின்றன.
பெண்கள் படித்து மகிழ்தற்பொருட்டும், அவர்கள்
முன்னேற்றம் அடைதற்பொருட்டும் செய்திதாள்கள் பெண்களுக்காக பல பயனுள்ள பகுதிகளையும்,
தகவல்களையும் அளித்து அவர்களுக்கும் துணைசெய்யும் ஒரு கருவியாய் அமைந்துள்ளன.
மாணவர்களின் முன்னேற்றங் கருதி, அவர்களுடைய
அறிவு வளர்வதற்கான பல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல்,
அவர்களுக்குத் தேர்வு சமயத்திற்குத் தேவையான பல அறியத் தகவல்களையும், தேர்வுக்
குறிப்புகளையும் வழங்கி அவர்களுக்கும் பயனுள்ளதாய் அமைகின்றன.
உலகம் இப்போது மிகவும் சுருங்கிவிட்டது.
வெளிநாடுகளில் அன்றாடம் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் நாம் தெரிந்துகொள்ள
மிகவும் பயனுள்ளதாய் இருப்பது செய்தித்தாள்களே ஆகும். எடுத்துக்காட்டாக, சுதந்திர
தின நிகழ்ச்சிகள், தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள், இவற்றோடு அந்நாட்டுக் கலாச்சாரங்கள், சிறப்புகள், தலைவர்களின்
கருத்துகள் போன்ற பல குறிப்புகளையும் செய்தித்தாள்கள் நமக்குத் தந்து பயன்பெறச்
செய்கின்றது.
சில முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அவை பற்றிய
அரிய புகைப்படங்களையும் செய்திகளையும் தருபவை செய்தித்தாள்களே ஆகும். எடுத்துக்காட்டாக
கடல் கொந்தளிப்பு, எரிமலைச் சீற்றம், இயந்திரக் கண்டுபிடிப்புகள், புயல், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களின் போதும் அவை பற்றிய
குறிப்புகளோடு காண்பதற்கே அரிய புகைப்படங்களையும் தந்து உதவிபுரிகின்றன.
வெளிநாட்டிலும்,
உள்நாட்டிலும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை அதைப்பற்றிய கருத்துகளுடன் செய்தித்தாள்கள்
வெளியிடுகின்றன. இவ்வாறு வெளியிடுவதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளில்
ஈடுபட்டவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்கள் மேலும் முன்னேற உதவி செய்கின்றன. அயல்நாடுகளில்
நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை இங்கிருப்பவர்கள் நேரில் கண்டு களிப்பது அரிது.
ஆனால், செய்தித்தாள்களின் மூலம் அப்போட்டிகளின் முடிவுகளையும்,
புகைப்படங்களையும், செய்திகளையும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.
மக்களின் நன்மைக்காகச் செய்தித்தாள்கள் தொண்டு செய்கின்றன. அவை மனிதரின் வாழ்க்கைக்கு உதவி செய்கின்றன. மனிதரின் வாழ்க்கையோடு இணைந்து சமுதாய மேம்பாட்டுக்கு உறுதுணையாக விளங்குவது என்பதில் பெருமிதம் கொள்வோம்!
Oct 3, 2025
“உலகமெங்கும் அமைதிநெறி நிலவ வேண்டும்” – என்ற உயர்தரம நெறியினை இந்த உலகில் பிறந்த பல சான்றோர் பெருமக்களும் தங்கள் கொள்கையாக வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்! ஆனால், மிக வேகமாக வளர்ந்துவரும் இன்றைய நாகரிக உலகில் மனிதகுலம் ஒவ்வொரு வினாடியும் பல்வேறு வகையான வடிவங்களில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சான்றோர்கள் கூறிய உலக அமைதி கேள்விக் குறியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அயராத பணியின் மூலம் உலக அமைதிக்கு வழிகோலவும் செய்யப்படுகிறது.
இன்றைய உலகை
வழிநடத்திச் செல்வது விஞ்ஞானமே ஆகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலக
நாடுகளிடையே எல்லா வகையான பிரச்சனைகளும் தலைத்தூக்கியுள்ளன. குறிப்பாக:
1. பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனை
2. பொருளாதாரத் தொடர்பான பிரச்சனை
3. கல்வித் தொடர்பான பிரச்சனை
4. மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனை
- மேற்கண்ட பிரச்சனைகளை அமைதி வழியில் தீர்ப்பதற்காகவும்
ஒற்றுமையை ஏற்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பே
ஐ.நா சபையாகும்.
பாதுகாப்பு:
உலகம்
தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் நாடுகளிடையே தங்கள் சக்தியை காட்டும் விதமாக
போர்கள் நடந்து வருகின்றன. சில நாடுகள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தவும், சில நாடுகள் தனது எல்லையையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ளவும்
போர்களில் ஈடுபடுகின்றன. இந்த பிரச்சனை மிகவும் பெரிதாகும் பொழுது பல உயிர்களை
பலியாக்கும் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. சபை தனது அவையில்
விவாதித்தும், நேரடியாக
தலையிட்டு சமாதானம் செய்தும் தனது கடமையைச் செய்கிறது. கட்டுப்பாட்டை மீறி
நடக்கும் நாடுகளைத் தனது ஐ.நா. அமைதிப் படைமூலம் கட்டுப்படுத்தவும் செய்கிறது.
இன்றைய சூழலில் மூன்றாவது உலகப்போர் இன்னும் ஏற்படாமல் இருப்பதற்கு ஐ.நா. சபையின்
அமைதி முயற்சிகளே உண்மையான காரணமாகும்.
பொருளாதாரம் மற்றும் உணவு:
உலகில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என பொருளாதார, சமூக வளர்ச்சி,
அறிவியல் வளர்ச்சி ஆகிய அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள்
தங்களின் வியாபரத் தளமாக ஏழை நாடுகளை உறிஞ்சுகின்றன. ஆனால், வளரும் நாடுகளோ தங்களின் அடிப்படை
வளர்ச்சிக்காக பணம் கொழிக்கும் நாடுகளை நம்பி உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வினை
நீக்கவும், கல்வி, உணவு, உறைவிடம் ஆகியவற்றை ஏற்படுத்தவும்,
வறுமையையும், நோயையும்
நீக்கவும் ஐ.நா. பெருமுயற்சி மேற்கொள்கிறது.
கல்வி:
ஏழை நாடுகளின்
எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக விளங்குவது அறியாமையே ஆகும். இதற்குக் காரணம்
போதிய கல்வி அறிவு அளிக்கப்படாததே ஆகும். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கல்விக்
கூடங்களும், கல்விச்
சாதனங்களும் இல்லாததாலும், வறுமையிலிருந்து விடுபட இளமையிலேயே வேலை தேடிச் சென்று
விடுவதாலும் அறியாமை நாடுகளில் நிலைப்பெற்றுவிட்டது. இத்தகைய நாடுகளில் கல்வி
வளர்ச்சி மேம்பட ஐ.நா. சபை வளர்ந்த நாடுகளிடம் பரிந்துரைச் செய்து ஏழை நாடுகளுக்கு
உதவி செய்கிறது.
மனித உரிமை:
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு சூழல்களில்
மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. உழைப்பாளி மக்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஏழை மக்களும், பத்திகையாளர்களும், எழுத்துப் பணியிலுள்ள சமூக நல விரும்பிகளும்
அரசுகளால் முடக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டு அச்சநிலை
நிலவுகிறது. இதுபோன்ற சூழல்களில் ஐ.நா. சபை தலையிட்டு, நெறிப்படுத்தி மக்கள் உரிமைகளை மீட்டு நிலைநாட்டுகிறது.
இவ்வாறு, உலகம் முழுதுமே பல்வேறு வகையில் பிரச்சனைகள்
தலைதூக்கி ஆபத்தை அறிவிக்கின்றன. புதிய 21-ஆம் நூற்றாண்டில் நம்முன் உள்ள
பிரச்சனைகளின் வடிவம் மாறலாம். ஆனால்,...தொடரும்!
ஐ.நா.
சபை இந்த பிரச்சனைகளை கனிவுடன் பார்த்து ஆராய்ந்து, தலையிட்டு, உலகில் போர், வறுமை, பிணி, ஆகியன நீங்கவும், அமைதி, இன்பம், நலம், செல்வம் முதலியன பெருகவும் பாடுபட்டு
வருகிறது.
ஐ.நா.வின்
பணி சிறந்து, உலகம்
அமைதியில் தவழ, மக்கள்
சமூகத்தினரான நாமும் ஒத்துழைப்பு நல்குவோம்.
உலகில்
அன்பும், அமைதியும் தழைக்கட்டும்!
எங்கும்
இன்பமும், வளமும்
செழிக்கட்டும்!
Oct 31, 2023
பிச்..சைக்...கா...ரன்ன்ன்.....என்னடா இது! தொடக்கமே பயங்கரமா இருக்கே-னு பாக்குறிங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. வழக்கம் போல தான்... ரொம்ப நாளைக்கு அப்புறம் blog பக்கம் வரோமே... அதுனால ஒரு மாஸ் entry குடுக்கலாம்-னு தான்!
பகுதி 1:
கார் அடையார் சிக்னலில் நின்றது! ச்சை! என்ன கஷ்டம் டா இதுங்களோட போராடுறது! வரிசையா
வந்து நிக்குதுங்க. இந்த சிக்னல்-ல மாட்டினாலே இது ஒரு பிரச்சனை. அநியாயத்துக்கு
பதினஞ்சு நிமிஷம் நிக்க வெக்குறான்! தலையில் அடித்துக்கொண்டேன்! எம்மா...துட்டு
இல்ல... அப்டி போமா...போ... கார் கண்ணாடியை இறக்காமலே கத்தினேன். அடுத்து ஒரு நொண்டி
பரதேசி வந்தான். கார் கதவை தன் தடியினால் மெல்லத் தட்டினான்...நான் வேறு பக்கம்
திரும்பி கொண்டேன். பின்னர் ஒரு பெண் கையில் பேனாக்களோடு வந்து யாசகம் கேட்டாள்.
பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் பெண் காசை வாங்கிக் கொண்டு பேனாவைக்
கொடுக்காமலே வேறு வண்டியைப் பார்த்துக் கொண்டு போய் விட்டது. எனக்குக் பத்து
ரூபாய் போய் விட்டதே என்ற ஏக்கம் தீருவதற்குள் அடுத்தவள்,....என் கார் கண்ணாடியின் மேல் சோப்பு நீரைத்
தெளித்து சுத்தம் செய்தாள்! நான் சிக்னலுக்காக கோவமாய் காத்திருந்தேன். அந்தப்
பெண்ணுக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை... பத்து ரூபாய் பறிபோனதன் விளைவு. அவள்
என் காரின் பின் பக்க கண்ணாடியின் மேல் துப்பிவிட்டு ஓடிவிட்டாள்! சிக்னல்
விழுந்தது.... விர்ரென்று காரை எடுத்துகொண்டு நகர்ந்து விட்டேன். ச்சை... நாட்டில்
பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகி விட்டது... இதுகள் ஒழிந்தால் தான் நாடு
முன்னேறும்!...
பகுதி 2:
சிக்னல் விழுந்ததும் அரக்கப் பறக்க ஓடிய வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக
கடந்து ஒன்று சேர்ந்தது ஒரு சிறிய பரதேசிக் கூட்டம். “எக்கா...உனுக்கு எவ்ளோ
கட்சிது இந்தக் கூட்டத்துல...? ஒரு பரதேசி பய கூட பிச்ச போட மாட்றானுங்ககா”... “ஏண்டி
ராணி... உன் கொயந்தய பாத்து கூடவா போடல...?” “அட போக்கா... இப்போ எல்லா பயலுகளும்
முழுச்சிக்கினானுங்கோ... அதான் ஒரு பைசா பெர்ல...” “இந்த நொண்டி காலோட எவ்ளோ நேரம்
தான் நடிக்குறது.... பேமானி பயலுங்க.. துட்டு இல்லாம எதுக்கு வெளிய வரானுங்க!!...” “வூடு
தாத்தா...அத்த சிக்குனலுல பாத்துக்கலாம்....”
பகுதி 3:
மஞ்சள் விளக்கு எரிந்தது! (இவர்களின் வயிற்றுக்குள்ளும்!!)
இத பாத்தா எனக்கு கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருதுங்க!
“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
Dec 15, 2021
காலையில் கண்ணைப் பிட்டுக் கொண்டது முதலே எல்லாமே அவசரம் தான். குளித்து முடித்து உடையணிவதிலும் ஒரு குழப்பம். எப்போதும் போல் ஜீன்ஸ் -க்கு குர்தி போடுவதா அல்லது சட்டை போடுவதா என்பதில் ஆரம்பிக்கிறது அந்த ஒருநாள். இறுதியில் ஒரு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு கிளம்பியாகிவிட்டது.
அந்த மூன்றெழுத்து டாக்ஸி கம்பெனி ஆப்-ஐ திறந்து ஆட்டோ புக் செய்தேன். அது மூன்று நிமிடங்களில் ஆட்டோ வரும் என சொல்லியது. சரி, மூன்று நிமிடம் தானே, வாசலில் போய் நிற்கலாம் என்று பையை தூக்கிக் கொண்டு கீழே வந்து நின்றேன். ஒருவழியாக ஆட்டோ பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வந்து நின்றது. ஏறிக் கொண்டேன். ஆட்டோ நேரே அலுவலகம் சென்றது.
சென்னை மாநகரின் மைய்யப் பிரதேசமான கடற்கரை ஓரத்தில் அமைந்து இருந்தது என் அலுவலகம். மத்திய அரசு அலுவலகம். மீன் ஆபீஸ் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். வழக்கம் போல் பத்து நிமிடம் லேட். லிப்ட்-கு காத்திருக்காமல் இரண்டாம் மாடிக்கு படிக்கட்டில் ஓடிச் சென்று வருகையை பதிந்து விட்டு மீண்டும் ஓடி வந்து என்னுடைய சீட்டில் அமர்ந்தேன். அது முதல் மாடியில் இருந்தது.
வந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவசர அவசரமாக வேலைகளை முடித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன். தூக்கம் கண்ணைக் கட்டியது. சேரில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டிருந்தேன். திடீரென யாரோ உரக்க கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன். ஆபீஸ் பையன் நின்று கொண்டிருந்தான்.
'என்ன?' என்றேன்.
'உங்களை சூப்பிரிண்டு ஐயா கூப்பிடுறாங்க மேடம்' என்றான்.
லேசாக மனம் பதறியது. ஒருவேளை தூங்கினதை பார்த்து விட்டாரோ! எழுந்து மேலே சென்றேன். சூப்பிரிண்டு மேஜையின் மேல் கட்டுக் காட்டாக பழைய தாள்கள், படிவங்கள் மேலும் பல நிரம்பி இருந்தன. நான் சென்றதும் எதிரில் அமரச் சொன்னார். சில நிமிடங்கள் மௌனங்களில் கழிந்தது.
பின்னர் கேட்டார், 'காலையில் லேட் ஆக வந்தாய் போல!'. 'இல்லை சார்! கிண்டி-யில் டிராபிக் சார்!' முன்பே யோசித்து வைத்திருந்த பொய்யை சொல்லி வைத்தேன்.
'இது என்ன?' -ஒரு கட்டு பேப்பரை என் முன்னே தள்ளியபடி கேட்டார்.
நான் அதை பார்த்தபடியே 'income tax பேப்பர்ஸ் சார்!' -என்றேன்.
'அது தெரியுது. அதை ஏன் இவ்வளவு தப்பு தப்பாக எழுதி வைத்துள்ளாய்? எனக்கு சரியான விளக்கம் வேண்டும் இப்போ. இது ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அடித்து வைத்திருக்கிறாய்! சம்பளம் மட்டும் வாங்க தெரியுதுல்ல. இதையும் சரியாய் செய்ய தெரியணும். புரியுதா?' என்றார்.
நான், 'ஓகே சார்! அப்படியே செய்றேன் சார்!' என்றபடி அங்கிருந்து அகன்று என் டேபிளுக்கு வந்தேன். மனதில் புகைச்சல்.
மதிய வேளைக்குப் பின் உடல் கொஞ்சம் அசதியாய் இருந்தது. அலுவலகத்திலிருந்து 5 மணிக்கெல்லாம் கிளம்பலாம் என முடிவு செய்து எழுந்தேன். காலார நடந்து வெளியே வந்தேன். சில்லென லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது. மீண்டும் டாக்ஸி ஆப்-ஐ திறந்து ஆட்டோ புக் செய்தேன். ஆட்டோ இரண்டு நிமிடத்தில் வரும் எனச் சொல்லியது அது. காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் ஓடிற்று. ஆட்டோ வரவில்லை. போன் செய்து பார்க்கலாம். 'ஹலோ! மேடம் எங்க இருக்கீங்க? லொகேஷன் சரியாய் இருக்கா? சரி. இதோ வந்திடுறேன்!' -எதிர்முனை என்னை பேச விடாமல் அதுவே பேசி கட் செய்து விட்டது.
ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவர் பக்கத்தில் வந்து 'போரூர் பஸ் இங்க நிக்குமா?' -எனக் கேட்டார். நான் திரும்பி, 'எதிர்த்த பஸ் ஸ்டாப்-பில் போய் நில்லுங்க சார்' என்றேன். அவர் என்னை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு, 'சே! பொண்ணா!!?? நான் ஆம்பிளைனு நெனச்சேன்! காலம் கேட்டுக் கெடக்குது!' என்கிறார், என் கிராப் செய்த முடியைப் பார்த்து!
தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது. அது மெல்ல என் பக்கம் வந்து நின்று 'நீங்க தானே ஆட்டோ புக் செய்திங்க? -என்றார். நான் ஒருமுறை ஆட்டோ நம்பரை செக் செய்துவிட்டு, 'நான் தான்! ஆனால் இந்த நம்பர் இல்லையே' என்றேன். அந்த ஆட்டோ போய் விட்டது.
ஐந்து நிமிடத்துக்கெல்லாம் இன்னோர் ஆட்டோ குலுங்கியபடி வந்தது. அதன் ஹெட் லைட் எல்லாம் தொங்கியபடி, 'கடகட' என்ற நாராசமான சத்தத்துடன் வந்து பக்கத்தில் நின்றது. அது தான் நான் புக் செய்த வண்டி. மனம் ஒரு நொடி அதில் ஏறலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்கும் போதே ஏறி உட்கார்ந்து விட்டேன்.
ஆட்டோ ஒரு திருப்பத்தில் சிக்னல்-லில் நின்றது. பக்கத்தில் ஒரு பைக் அந்த ஆட்டோ-வை உரசுவது போல் வந்து நின்றது. ஆட்டோ ஓட்டுநருக்கு வந்ததே கோபம். 'டேய், தே..,ஓ...மூ...சாவுகிராக்கி' என்று வாயில் வந்தபடிக்கு கத்த ஆரம்பித்து விட்டார். அந்த பைக்-காரன் முகத்தைச் சுழித்துக் கொண்டு தள்ளி சென்று நின்றான். சிக்னல் விழுந்ததும் வண்டி பறக்கத் தொடங்கியது.
சற்றைக்கெல்லாம் ஆட்டோ ஓட்டுநர் யாருக்கோ போன் செய்து பேசிக் கொண்டே வண்டி ஓட்டினார். அப்போதும் அவர் வாயிலிருந்து முன்பு சொன்ன வார்த்தைகளே அதிகம் வந்தன. அனாயசமாக அந்த 'தே..,ஓ...மூ...சா-க்கள் வந்து விழுந்தன.
மணி ஆறாகி நன்றாக இருட்டி விட்டது. வண்டி இன்னும் கிண்டியில் தான் போய்க் கொண்டிருந்தது. வழியில் ஒரு கன்றுக்குட்டி பாலிதீன் பையை பாதி விழுங்கி கொண்டிருந்தது. பார்க்க பாவமாக இருந்தது. இடையில் வண்டி கேஸ் போட ஒரு பெட்ரோல் பூத்-ல் நின்றது. என் மனம் அந்த கன்றையே நினைத்துக் கொண்டிருந்தது.
ஒருவழியாக என் வீடு இருக்கும் தெரு முனைக்கு வந்தாகி விட்டது. ஆட்டோக்காரன் 'பாப்பா, இங்கதான் லொகேஷன் முடியுது, இறங்கு' -என்று சொன்னார். (நான் பாப்பா வயதைக் கடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன).
தெரு இருள் மண்டிக் கிடந்தது. நான் வீட்டு வாசலில் இறக்கி விடும்படி அவரிடம் கேட்கலாமா என எண்ணி அந்த முயற்சியைக் கைவிட்டேன். வண்டியில் இருந்து இறங்கி 'எத்தனை ரூபாய்' எனக் கேட்டேன்.
அவர், '220 ஆச்சு மா. 250-ஆ கொடுங்க' -என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகி போனது. இருந்தும் மீண்டும் நான் அந்த 'தே..,ஓ...மூ...சா...' -வை வாங்கி கட்டிக் கொள்ள விரும்ப வில்லை. மனமும் சோர்ந்து விட்டிருந்தது. எனவே அவர் கேட்டத் தொகையை கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடையைக் கட்டினேன். ஆட்டோ என்னைக் கடந்து மெல்ல மெல்ல இருட்டில் கரைந்து கொண்டே போனது.
