Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts
Jul 10, 2015
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Friday, July 10, 2015
Labels:
கட்டுரை,
புத்தகம்,
வரலாறு
0
comments
அந்தப் பெரிய இரு மரக்கதவுகளுக்குப் பின்னாலுள்ள
கண்ணாடிக் கதவுகளையும் கடந்து வெள்ளையும் கருப்புமாக கலந்த கட்டங்கள் பளபளக்கும்
தரைத்தளத்தில் கால்களைப் பதித்ததும் எங்கிருந்தோவொரு புத்துணர்வு பற்றிக்
கொள்கிறது நம்மை!
ரம்யமான ஒரு அமைதி... இந்தோ-சர்சானிக்
முறைப்படி கட்டப்பட்ட பழங்கால தேவாலயங்களை ஒத்த ஒரு மாளிகை அது... கட்டிடத்தின்
நாற்புற மேற்கூரைகளுக்கு கீழும் பலவித வண்ணங்கள் மெருகேற்றப்பட்ட கண்ணாடி
சாளரங்கள்... அவற்றிலிருந்து காற்றினைக் கிழித்துக்கொண்டு மெல்லிய சூரிய
ஒளிக்கற்றைகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. உயரே பல கனவான்களின் வண்ண
ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்தன.
சென்னையின் மிக முக்கியமான ஒரு
இடமாகிய, போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையின் தூசி காற்றுக்கு சற்றும்
ஒட்டிவராமல், இந்த விக்டோரிய ஆட்சி கால கட்டிடம் மிடுக்காய் நிற்கிறது. ஆம். அது Higginbothams
என்னும் பழமையான புத்தகக்கடை தான்!
‘ஹிக்கின்பாதம்ஸ்’ 1844-இல் ஏபெல்
ஜோஷுவா ஹிக்கின்பாதம் (Abel Joshua Higginbotham) என்பவரால் சிறு அளவில்
தொடங்கப்பட்டது. யார் இந்த ஏபெல் ஜோஷுவா?
அன்றைய மதராஸ் மாகாணத்தின் தெருவில்
தன்னுடைய கப்பல் தளபதியால் கைவிடப்பட்ட நிலையில் வந்திறங்கியவர் இந்த ஏபெல் ஜோஷுவா.
(பிற்காலத்தில் இவர் சென்னை மாநகரின் ஷெரிப் ஆக உயர்ந்தது வேறு கதை)... இவ்வாறு
நிர்க்கதியான ஜோஷுவா தொடக்க நாட்களில் இராணுவ வீரர்களுக்கு புனித பைபிள் நூலின்
பிரதிகளை விற்கத் தொடங்கினார். பின்னர் கிறிஸ்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டுவந்த
வெஸ்லியன் நூலகத்தில் (Wesleyan Book Depository) நூலகராகப் பணிசெய்தார்.
சில வருடங்களில் இந்த வெஸ்லியன்
நூலகம் மூடப்பட்டதும் அங்கிருந்த புத்தகங்களையெல்லாம் ஜோஷ்வா-விடம் குறைந்த
விலைக்கு ஒப்படைக்கப்பட்டன. இவற்றையே மூலதனமாகக் கொண்டு சென்னையின் மவுண்ட் ரோட்-ல்
சிறு புத்தகக் கடை ஒன்றைத் துவக்கினார். ஜோஷ்வா-வின் புத்தக ஆர்வமும், வாசிப்பின்
மீதான ஈடுபாடும் விற்பனையைப் பெருக்கி தொழிலை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவியது.
1869-ல் சூயஸ் கால்வாய் (Suez Canal) போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பல்வேறு பதிப்பக நூல்களையும்
சென்னை கொண்டு வரவும், மற்றும் ஹிக்கின்பாதம்ஸ்-ன் கிளைகளை மற்ற நகரங்களில்
நிறுவவும் ஏபெல் ஜோஷ்வா முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டார். இதனைத் தொடர்ந்து,
தென்னிந்தியாவின் முக்கிய ரயிலடிகளிலும் ஹிக்கின்பாதம்ஸ்-ன் சிறு கிளை கடைகள் பயணிகளின்
சேவைக்காக நிறுவப்பட்டன. மேலும் அதன் பெயரிலேயே அச்சகமும், பதிப்பகமும்
தொடங்கப்பட்டன.
1859-ல் அன்றைய கவர்னர் லார்டு ட்ரெவேலியன்
(Lord Trevelyan) அவர்கள், லார்டு மெக்காலே (Lord
Macaulay) அவர்களுக்கு
எழுதிய கடிதத்தில் சென்னை மாநகரில் தான் பெரிதும் கண்டு வியந்த ஒரு புத்தக கடையாக
ஹிக்கின்பாதம்ஸ்-ஐ குறிப்பிடுகிறார். அதன் பின்னர் 1875-ல் வேல்ஸ் இளவரசர் (HRH Edward, Prince of Wales) அவர்களின் சென்னை வருகையின்போது ஹிக்கின்பாதம்ஸ்-கு
பெருமை சேர்க்கும்படியாக அதனை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையாளராக தனது
ராஜமுத்திரையுடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநில மைய நூலகமான ‘கன்னிமாரா’
நூலகத்திற்கு 1890 முதல் 1920 வரை ஹிக்கின்பாதம்ஸ் குழுமம் மட்டுமே
நூலக சேவைக்கான புத்தகங்களை வழங்கிவந்துள்ளது.
1891-ல் ஏபெல் ஜோஷ்வா ஹிக்கின்பாதம்
அவர்களின் இறப்புக்குப் பின்னர் இந்தக் குழுமம் அவரின் மகனான C.H. Higginbotham அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இக்காலகட்டத்தில் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் மேலும் விரிவு செய்யப்பட்டு, இப்போதிருக்கும்
பெரிய வளைவுகளைக் கொண்ட வெள்ளை மாளிகையாக புதுப்பொலிவு பெற்றது.
இருபதாம் நூற்றாண்டுகளின்
தொடக்கங்களிலேயே இந்த ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் சென்னை மாநகரின் புகழ்பெற்ற ஓர்
அடையாளமாக விளங்கியது.
இதுவரையில் ஆங்கிலேய ஹிக்கின்பாதம் குடும்பத்துக்கு
சொந்தமாக இருந்துவந்த இந்த நிறுவனம் 1949-ல் அனந்தராமகிருஷ்ணன் என்பவரிடம்
ஒப்படைக்கப்பட்டது. எனினும், அதன் தொன்மையும் புகழும் மாறாமல் இந்நாள் வரையில் தொடர்ந்து
மெருகேற்றப்பட்டு வந்துள்ளது.
காலங்கள் பல கடந்தும் உயர்ந்து
நிற்கும் இந்த பிரம்மாண்ட கட்டிடத்துடன் புத்தகங்களால் பிணைக்கப்பட்டோர்
எண்ணற்றவர்கள். பல்வேறு வகையான காலவெளிகளில் சமகாலத்தில் பயணம் செய்யும் பேறு
புத்தக ஆர்வலர்களுக்கே கிடைக்குமெனக் கூறுவார்கள். அவ்வகையில், தொழில்நுட்ப
வளர்ச்சிகள் எவ்வகையிலும் பாதிக்காதவாறு இருகரங்களிலும் புத்தகப் பிரியர்களை அள்ளி
அள்ளி தன்னுள்ளே சேர்த்துக்கொள்ளும் இந்த வெள்ளை மாளிகை நிச்சயம் சென்னையின்
சின்னமே!
Jun 29, 2014
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Sunday, June 29, 2014
Labels:
கட்டுரை,
புத்தகம்,
வரலாறு
1 comments
குறிப்புதவி நூல்: “சென்னை மாநகர்” ஆசிரியர்: மா.சு.சம்பந்தன்
பதிப்பாண்டு: (1978) இரண்டாம் பதிப்பு
(நூலிலிருந்து ஒரு பகுதி)
நமது சென்னை நகரம் முற்காலத்தில் தொண்டை நாடு என்று சொல்லப்பட்ட – தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்ட இடத்தினுள் அடங்கி இருக்கிறது. மேற்சொன்ன தொண்டை மண்டலம் அக்காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதை முன்பே குறித்திருக்கிறோம். கி.பி.1647-இல் எழுதப்பட்ட பத்திரம் (Document) ஒன்றில் “தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து-ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம்” என்று காணப்படுவதிலிருந்தே இது உறுதியாகிறது.
சென்னையின் சுற்றுப்புறத்து ஊர்கள்:
நமது சென்னை நகரம் முற்காலத்தில் தொண்டை நாடு என்று சொல்லப்பட்ட – தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்ட இடத்தினுள் அடங்கி இருக்கிறது. மேற்சொன்ன தொண்டை மண்டலம் அக்காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதை முன்பே குறித்திருக்கிறோம். கி.பி.1647-இல் எழுதப்பட்ட பத்திரம் (Document) ஒன்றில் “தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து-ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம்” என்று காணப்படுவதிலிருந்தே இது உறுதியாகிறது.
இன்று பெரும்
நகரமாக வளர்ச்சியடைந்துள்ள சென்னை நகரம் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு குப்பமாக
இருந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள். காவிரிப்பூம்பட்டினம், மதுரை, முசிறி, தொண்டி, காயல், புதுச்சேரி
போன்ற நகரங்களே அக்காலத்தில் வாணிபத்திற்கும் மற்றவற்றுக்கும் முக்கிய இடமாக
இருந்தன. சென்னைப்பட்டினம் அன்று முகவரி தெரியாத ஊராக இருந்திருக்கிறது!
ஆனால் அதே
சமயத்தில் சென்னையை அடுத்திருந்த பகுதிகள் பழஞ்சிறப்பு வாய்ந்தனவாகத் திகழ்ந்து
கொண்டிருந்தன. அவைகள் யாவை என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
மயிலாப்பூர்: நம் காலத்தில்
சென்னையின் ஒரு பகுதியாகவுள்ள மயிலாப்பூர் கிறிஸ்து பிறந்த முதலாம்
நூற்றாண்டிலிருந்தே வெளியுலகிற்குத் தெரிந்த ஊராகவும் சிறந்த இடமாகவும்
விளங்கியிருக்கிறது. ஏசுநாதரின் அடியாரான செயிண்டு தாமஸ் (St.Thomas) மேலைக்கடல்
வழியாகக் கி.பி. 52-இல் இந்தியாவிற்கு வந்து, தம் அறவுரைகளை
இச்சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலே வழங்கினதாகச் சொல்லப்படுகிறது. செந்தோம்
கோயிலும், பரங்கிமலையைச்
சார்ந்த சிறுமலையும், பெருமலையும் இதற்குச் சான்றாக இருக்கின்றன என்றும்
எடுத்துக் காட்டப்படுகிறது.
இதன்படி பார்த்தால் கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே
மேனாட்டோடு சென்னைக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறியலாம். கி.பி. 2-ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த தாலமி (Ptolemy) என்னும் பூகோள
ஆசிரியனால், அவன் எழுதிய உலகப் படத்தில், இப்போது சென்னை
இருக்கும் இடத்தில் மயிலை-மல்லியர்பா (தமிழ் மயிலாப்பூர்)என்ற பெயரால் ஒரு துறைமுகமாகக்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வூரில்தான் உலகம் வியந்து போற்றும்
திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்ந்ததாகவும் கூறுகின்றார்கள்.
இதே மயிலாப்பூர் சைவர்களுக்கும்
சமணர்களுக்கும் ஏற்ற
நல்லிடமாகவும் இருந்திருக்கிறது. கபாலீசுவரர் கோயில்
முதன் முதலில் கடலுக்கு அருகில் கட்டப்பட்டிருந்தது என்றும், பின்னர்
கடல் உட்புக நேர்ந்ததால் அழிந்து தற்போதுள்ள இடத்தில் புதியதாகக் கட்டப்பட்டது
என்றும் கூறுகிறார்கள்.
“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை” என்னும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினரான
திருஞானசம்பந்தர் கூற்று இதனை வலியுறுத்துகிறது. தீர்த்தங்கர நேமிநாதர் கோயில்
என்னும் சமணக்கோயில் முன்பு இங்கு இருந்தது என்றும், பின்பு
இதுவும் கடலால் விழுங்கப்பட்டது என்றும் தெரிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 24 கோட்டங்களில்
மயிலாப்பூர் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்ததாகும்.
திருவல்லிக்கேணி: மயிலாப்பூருடன்
இணைத்தே திருவல்லிக்கேணி கூறப்படுகிறது. இதுஒரு சிறந்த வைணவத் திருப்பதி.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் – இதனை புகழ்ந்து பாடியிருக்கின்றனர்.
கி.பி. 8-ஆம்
நூற்றாண்டிற்கு முன்னரே திருவல்லிக்கேணி சிறப்புற்றிருந்தது என்பதை நந்திவர்ம
பல்லவ மன்னன் காலத்துக் கல்வெட்டினால் அறியலாம். அக்காலத்தில் அல்லிக்குளம் ஒன்று
இங்கு இருந்தது. அது இருந்த இடத்தில் இப்பொழுது புதிய கட்டிடங்கள் எழும்பியுள்ளன.
கேணி என்றால் தமிழ்நாட்டுப் பிற பகுதிகளில் கிணறு என்று பொருள். ஆனால் அருவா
நாட்டார் குலத்தினைக் “கேணி”
என்று வழங்கி வந்துள்ளனர். இந்த அருவா நாட்டுத் தமிழ்
பற்றிய இலக்கணச் சிறப்பை இங்கு கவனித்தல் நலம் பயக்கும்.
திருவொற்றியூர்:
இது கி.பி. 7-ஆம்
நூற்றாண்டினரான அப்பர் சம்பந்தரால் பாடப்பட்ட இடமாகும். இங்கு எழுத்தறியும்
மண்டபம் என ஒன்று இருக்கிறது;
முன்பு இங்கு பலவகையான வகுப்புகள் நடந்ததால் மக்கள் அறிவு
பெற முடிந்தது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் இங்குச் சங்கிலியாரைத்
திருமணஞ்செய்து கொண்டார். அதன் காரணமாகத்தான் ‘மகிழடி சேவை’ என்ற
விழா ஆண்டுதோறும் இங்கு நடைபெற்று வருகிறது. கி.பி. 9-ஆம்
நூற்றாண்டில் சதுரான பண்டிதர் என்பவர் தலைமையில் சிறந்த மடம் ஒன்று இங்கு சமயத்
தொண்டு செய்து வந்திருக்கிறது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான
பட்டினத்தடிகள் இவ்வூரில்தான் அடைக்கலமானார்.
இவைகளால் சென்னைப்பட்டினத்தை
ஒட்டியுள்ள மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும், திருவொற்றியூரும் மிகத் தொன்று
தொட்டே தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்று, தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய
தொடர்பு கொண்டுள்ளன என்ற முடிவுக்கு வரலாம்.
மேற்சொன்ன மூன்று ஊர்கள்
மட்டுமல்ல, இன்னும் பல ஊர்கள், சென்னை பெருமை பெறுவதற்கு முன்பே
சிறப்புப் பெற்றிருக்கின்றன. அவைகளில் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்குக்
குறிப்பிடுகிறோம்.
நுங்கம்பாக்கம், எழுமூர்
என்னும் இவ்விரண்டு ஊர்களும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில்
குறிக்கப்படுகின்றன. தங்கச்சாலைத் தெருமுனையில் இருந்த ஒரு கோவிலில் கி.பி. 10-ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த பார்த்திவேந்திர கரிகால சோழன் கல்வெட்டு ஒன்று இருந்தது.
அதன் உடைந்த பகுதியைச் சென்னைப் பொருட்காட்சி நிலையத்தில் இன்றும் காணலாம்.
24 கோட்டங்களில் ஒன்றான புழல் கோட்டத்தில் ‘எழுமூர்
நாடு’ என்பது
பெரியது. அதன் தலைநகரம் எழுமூர். சேற்றுப்பட்டு (Chetput) எழுமூர்
நாட்டைச் சேர்ந்ததாகும். மாம்பலம் என்பது சைதாப்பேட்டை வரை பரவியிருந்த
சிற்றூராகும். பிரம்பூர், அயன்புரம் (ஐயனாவரம்) ஆகிய இரண்டும் கி.பி. 17-ஆம்
நூற்றாண்டு வடமொழி நூலில் குறிக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் பழைய காலத்தில் ‘வில்லிபாக்கம்’ என்றே
அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது “புழல் கோட்டத்து-அம்பத்தூர்
நாட்டு-வில்லிபாக்கம்” எனப்பட்டது. வேப்பேரி, புரசைப் பாக்கம், புதுப்
பாக்கம் என்பன கிழக்கிந்திய ஆங்கில வணிகக் கழகம் வருவதற்கு முன்பே இங்கிருந்த
சிற்றூர்கள் என்பது அவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.
இன்னும் ஒவ்வோர் ஊருக்கும் பல
சிற்றூர்கள் சொந்தமாய் இருந்தன.
இதில் மயிலாப்பூரைச்
சேர்ந்திருந்த பழைய சிற்றூர்கள்: பல்லாவரம், நன்மங்கலம், ஆலந்தூர், நந்தம்
பாக்கம், மாம்பலம்
முதலியன.
திருவொற்றியூரைச் சேர்ந்த
சிற்றூர்கள்: சாத்தங்குடி, சடையன் குப்பம், ஏலஞ்சேரி, எர்ணாவூர், கத்திப்பாக்கம்
முதலியன.
எழும்பூரைச் சேர்ந்த பழைய
சிற்றூர்கள்: புரசைப் பாக்கம், புதுப்பாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், ரோசனப்பாக்கம்
(இது சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கும் செங்கற்பட்டு மாவட்ட அதிகாரி
(Collector) அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிற்றூர்), அகரம்
முதலியனவாகும். இவை யாவும் பிற்காலத்தில் வெள்ளையரால் விலை கொடுத்து வாங்கப்பட்ட
பழைய சிற்றூர்கள்.
நம்முடைய சென்னை மாநகரைப்
பற்றிய அரிய மற்றும் சுவையான தகவல்களை கொண்டிருக்கும் இந்நூல் சிறந்த ஒரு வரலாற்று
ஆவணமாகும். இச்சீர்மிகு சென்னையை இன்னமும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்கிட எண்ணம்
கொள்வோம்! சென்னை மாநகரின் இன்றைய நவீன உருமாற்றங்களைப் பற்றியும்
அடுத்த பதிவுகளில் விரைவில் பகிர முயல்கிறேன்.
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Sunday, June 29, 2014
Labels:
கட்டுரை,
புத்தகம்,
வரலாறு
2
comments
குறிப்புதவி நூல்: “சென்னை மாநகர்” ஆசிரியர்: மா.சு.சம்பந்தன்
பதிப்பாண்டு: (1978) இரண்டாம்
பதிப்பு
(நூலிலிருந்து ஒரு பகுதி)
சென்னையின் வரலாற்றுக் காலம்:
சென்னையின்
பழம் வரலாற்றை அறிவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கும் பழைய நூல் தொல்காப்பியம்.
இதன் காலம் ஏறக்குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டாகும். இந்நூலுக்கு பாயிரம் எழுதிய
பனம்பாரனார், தமிழகத்தின் பண்டைய எல்லையைக் குறிக்கும் சிறு
குறிப்பு ஒன்று தந்துள்ளார். அது, “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும்
நல்லுலகத்து” என்பதாகும். இதனால் தமிழகத்தின் வடவெல்லை
வடவேங்கட மலையும், தென்னெல்லை தென்குமரியும் என்றறிகிறோம்.
மேற்கிலும் கிழக்கிலும் கடல் இருப்பதால் அவை கூறப்படவில்லை.
மேலே சொன்ன “தமிழ் கூறும் நல்லுலகம்” என்னும் தொடர் பண்டைக்காலத்தே தமிழ்நாடு பன்னிரண்டு
சிறு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததைக் குறிப்பதாகும். அவை: தென்பாண்டி நாடு, குட்டநாடு
குடாநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவா
வடதலைநாடு, சீதநாடு, மலாடு, புனல் நாடு என்பனவாகும். இவைகளையே
தொல்காப்பியரும் “செந்தமிழ்
சேர்ந்த பன்னிருநிலம்” என்று
கூறினார்.
தமிழகம்
மேற்சொன்ன பன்னிரண்டு சிறு சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுக் குறுநில
மன்னர்களாலும், பெருநில மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்துள்ளது.
அவைகளையே சேரநாடு, பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடு என்ற பெரும் பிரிவுக்குள் அடக்கி
பண்டை வேந்தர்களான சேர சோழ பாண்டிய தொண்டையர் ஆண்டு வந்தனர்.
தற்போதைய
கொச்சி--திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேரநாடு. புதுக்கோட்டை
பகுதியிலுள்ள வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டிய நாடு. தென் வெள்ளாற்றுக்கும்
வட வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ள நிலமே சோழநாடு.
வெள்ளாற்றுக்கு
வடக்கிலும், வேங்கடத்துக்கு தெற்கிலும் உள்ள பகுதியே அருவா வடதலை, அருவா நாடு
என்பனவற்றின் எல்லையாகும். அருவா நாடு என்பதில் காஞ்சி நகரம் உட்பட்டது. காஞ்சி
முதல் வட பெண்ணை வரை பரவியிருந்த நிலப்பகுதியே அருவா வடதலை என்பது. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்குமுன் அருவா வடதலை நாட்டைத் ‘திரையன்’ என்பவன் ஆண்டு வந்தான். அவனது தலைநகர் ‘பவத்திரி’ என்பது.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ‘இளந்திரையன்’ என்பவன் அருவா நாட்டை முன்னவனின்
பிரதிநிதியாக இருந்து ஆண்டுவந்துள்ளான். இவர்களைத் தவிர ‘புல்லி’ என்பவன் வேங்கட
மலைப்பகுதியை ஆண்டுவந்தான். மேற்கூறிய இரு பகுதிகளும் சேர்ந்து பிற்காலத்தில்
தொண்டை நாடு எனப்பட்டது.
கரிகாலன்
தொண்டை நாட்டில் “காடு கெடுத்து
நாடாக்கினான்” என்னும் நூல் வழக்கு இருப்பதால், தொண்டை
நாட்டின் பெரும்பகுதி காடாகவே இருந்தது என்று தெரிகிறது. சங்ககாலத்தின் கடைசியில்
வாழ்ந்த சோழர் தொண்டை நாட்டை இரு கூறாக்கினர். 1. நடு நாடு 2. தொண்டை நாடு. இதற்கு பின்னரே தொண்டை நாடு 24 கோட்டங்களாகவும், சிறு சிறு உள்
நாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர்களால் ஆளப்பட்டது.
இனி 24 கோட்டங்கள்
யாவை என்பதைக் கவனிப்போம்.
1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,4. செங்காட்டுக்
கோட்டம், 5. பையூர்க்
கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக்
கோட்டம், 9. களத்தூர்க்
கோட்டம், 10. செம்பூர்க்
கோட்டம், 11. ஆம்பூர்க்
கோட்டம், 12. வெண்குன்றக்
கோட்டம், 13. பல்குன்றக்
கோட்டம், 14. இளங்காட்டுக்
கோட்டம், 15. காலியூர்க்கோட்டம், 16. செங்கரைக்
கோட்டம், 17. பழுவூர்க்
கோட்டம், 18. கடிகூர்க்
கோட்டம், 19. செந்திருக்கைக்
கோட்டம், 20. குன்றவர்த்தனக்
கோட்டம், 21. வேங்கடக்
கோட்டம், 22. சேத்தூர்க்
கோட்டம், 23. வேலூர்க்
கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்
என்பவையே அவை.
இக்கோட்டங்களில்
சென்னையையும் அதைச் சூழ்ந்துள்ள ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கினவை புழல், புலியூர், மணவில்
என்னும் மூன்று கோட்டங்களாகும்.
இத்தகைய தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள நமது சென்னை
மாநகரின் சுற்றுப் புறத்து ஊர்களைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
Subscribe to:
Comments (Atom)






