Jun 29, 2014

சென்னை மாநகர் - 2

குறிப்புதவி நூல்: “சென்னை மாநகர்” ஆசிரியர்: மா.சு.சம்பந்தன்
பதிப்பாண்டு: (1978) இரண்டாம் பதிப்பு

(நூலிலிருந்து ஒரு பகுதி)

சென்னையின் சுற்றுப்புறத்து ஊர்கள்: 


நமது சென்னை நகரம் முற்காலத்தில் தொண்டை நாடு என்று சொல்லப்பட்ட தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்ட இடத்தினுள் அடங்கி இருக்கிறது. மேற்சொன்ன தொண்டை மண்டலம் அக்காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதை முன்பே குறித்திருக்கிறோம். கி.பி.1647-இல் எழுதப்பட்ட பத்திரம் (Document) ஒன்றில் தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து-ஞாயிறு நாட்டு சென்னப்பட்டினம்என்று காணப்படுவதிலிருந்தே இது உறுதியாகிறது.

இன்று பெரும் நகரமாக வளர்ச்சியடைந்துள்ள சென்னை நகரம் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு குப்பமாக இருந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள். காவிரிப்பூம்பட்டினம், மதுரை, முசிறி, தொண்டி, காயல், புதுச்சேரி போன்ற நகரங்களே அக்காலத்தில் வாணிபத்திற்கும் மற்றவற்றுக்கும் முக்கிய இடமாக இருந்தன. சென்னைப்பட்டினம் அன்று முகவரி தெரியாத ஊராக இருந்திருக்கிறது!

ஆனால் அதே சமயத்தில் சென்னையை அடுத்திருந்த பகுதிகள் பழஞ்சிறப்பு வாய்ந்தனவாகத் திகழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் யாவை என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
  
மயிலாப்பூர்:  நம் காலத்தில் சென்னையின் ஒரு பகுதியாகவுள்ள  மயிலாப்பூர் கிறிஸ்து பிறந்த முதலாம் நூற்றாண்டிலிருந்தே வெளியுலகிற்குத் தெரிந்த ஊராகவும் சிறந்த இடமாகவும் விளங்கியிருக்கிறது. ஏசுநாதரின் அடியாரான செயிண்டு தாமஸ் (St.Thomas) மேலைக்கடல் வழியாகக் கி.பி. 52-இல் இந்தியாவிற்கு வந்து, தம் அறவுரைகளை இச்சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலே வழங்கினதாகச் சொல்லப்படுகிறது. செந்தோம் கோயிலும், பரங்கிமலையைச் சார்ந்த சிறுமலையும், பெருமலையும் இதற்குச் சான்றாக இருக்கின்றன என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.

இதன்படி பார்த்தால் கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே மேனாட்டோடு சென்னைக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று அறியலாம். கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாலமி (Ptolemy) என்னும் பூகோள ஆசிரியனால், அவன் எழுதிய உலகப் படத்தில், இப்போது சென்னை இருக்கும் இடத்தில் மயிலை-மல்லியர்பா (தமிழ் மயிலாப்பூர்)என்ற பெயரால் ஒரு துறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வூரில்தான் உலகம் வியந்து போற்றும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வாழ்ந்ததாகவும் கூறுகின்றார்கள்.

இதே மயிலாப்பூர் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் ஏற்ற  நல்லிடமாகவும் இருந்திருக்கிறது. கபாலீசுவரர் கோயில் முதன் முதலில் கடலுக்கு அருகில் கட்டப்பட்டிருந்தது என்றும், பின்னர் கடல் உட்புக நேர்ந்ததால் அழிந்து தற்போதுள்ள இடத்தில் புதியதாகக் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை என்னும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினரான திருஞானசம்பந்தர் கூற்று இதனை வலியுறுத்துகிறது. தீர்த்தங்கர நேமிநாதர் கோயில் என்னும் சமணக்கோயில் முன்பு இங்கு இருந்தது என்றும், பின்பு இதுவும் கடலால் விழுங்கப்பட்டது என்றும் தெரிகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 24 கோட்டங்களில் மயிலாப்பூர் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்ததாகும்.

திருவல்லிக்கேணி: மயிலாப்பூருடன் இணைத்தே திருவல்லிக்கேணி கூறப்படுகிறது. இதுஒரு சிறந்த வைணவத் திருப்பதி. பேயாழ்வார், திருமங்கையாழ்வார் இதனை புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே திருவல்லிக்கேணி சிறப்புற்றிருந்தது என்பதை நந்திவர்ம பல்லவ மன்னன் காலத்துக் கல்வெட்டினால் அறியலாம். அக்காலத்தில் அல்லிக்குளம் ஒன்று இங்கு இருந்தது. அது இருந்த இடத்தில் இப்பொழுது புதிய கட்டிடங்கள் எழும்பியுள்ளன. கேணி என்றால் தமிழ்நாட்டுப் பிற பகுதிகளில் கிணறு என்று பொருள். ஆனால் அருவா நாட்டார் குலத்தினைக் கேணிஎன்று வழங்கி வந்துள்ளனர். இந்த அருவா நாட்டுத் தமிழ் பற்றிய இலக்கணச் சிறப்பை இங்கு கவனித்தல் நலம் பயக்கும்.


திருவொற்றியூர்: இது கி.பி. 7-ஆம் நூற்றாண்டினரான அப்பர் சம்பந்தரால் பாடப்பட்ட இடமாகும். இங்கு எழுத்தறியும் மண்டபம் என ஒன்று இருக்கிறது; முன்பு இங்கு பலவகையான வகுப்புகள் நடந்ததால் மக்கள் அறிவு பெற முடிந்தது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் இங்குச் சங்கிலியாரைத் திருமணஞ்செய்து கொண்டார். அதன் காரணமாகத்தான் மகிழடி சேவைஎன்ற விழா ஆண்டுதோறும் இங்கு நடைபெற்று வருகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சதுரான பண்டிதர் என்பவர் தலைமையில் சிறந்த மடம் ஒன்று இங்கு சமயத் தொண்டு செய்து வந்திருக்கிறது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான பட்டினத்தடிகள் இவ்வூரில்தான் அடைக்கலமானார்.

இவைகளால் சென்னைப்பட்டினத்தை ஒட்டியுள்ள மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும், திருவொற்றியூரும் மிகத் தொன்று தொட்டே தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்று, தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன என்ற முடிவுக்கு வரலாம்.

மேற்சொன்ன மூன்று ஊர்கள் மட்டுமல்ல, இன்னும் பல ஊர்கள், சென்னை பெருமை பெறுவதற்கு முன்பே சிறப்புப் பெற்றிருக்கின்றன. அவைகளில் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

நுங்கம்பாக்கம், எழுமூர் என்னும் இவ்விரண்டு ஊர்களும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. தங்கச்சாலைத் தெருமுனையில் இருந்த ஒரு கோவிலில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பார்த்திவேந்திர கரிகால சோழன் கல்வெட்டு ஒன்று இருந்தது. அதன் உடைந்த பகுதியைச் சென்னைப் பொருட்காட்சி நிலையத்தில் இன்றும் காணலாம்.

24 கோட்டங்களில் ஒன்றான புழல் கோட்டத்தில் எழுமூர் நாடுஎன்பது பெரியது. அதன் தலைநகரம் எழுமூர். சேற்றுப்பட்டு (Chetput) எழுமூர் நாட்டைச் சேர்ந்ததாகும். மாம்பலம் என்பது சைதாப்பேட்டை வரை பரவியிருந்த சிற்றூராகும். பிரம்பூர், அயன்புரம் (ஐயனாவரம்) ஆகிய இரண்டும் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வடமொழி நூலில் குறிக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் பழைய காலத்தில் வில்லிபாக்கம்என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது புழல் கோட்டத்து-அம்பத்தூர் நாட்டு-வில்லிபாக்கம்எனப்பட்டது. வேப்பேரி, புரசைப் பாக்கம், புதுப் பாக்கம் என்பன கிழக்கிந்திய ஆங்கில வணிகக் கழகம் வருவதற்கு முன்பே இங்கிருந்த சிற்றூர்கள் என்பது அவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

இன்னும் ஒவ்வோர் ஊருக்கும் பல சிற்றூர்கள் சொந்தமாய் இருந்தன.

இதில் மயிலாப்பூரைச் சேர்ந்திருந்த பழைய சிற்றூர்கள்: பல்லாவரம், நன்மங்கலம், ஆலந்தூர், நந்தம் பாக்கம், மாம்பலம் முதலியன.

திருவொற்றியூரைச் சேர்ந்த சிற்றூர்கள்: சாத்தங்குடி, சடையன் குப்பம், ஏலஞ்சேரி, எர்ணாவூர், கத்திப்பாக்கம் முதலியன.

எழும்பூரைச் சேர்ந்த பழைய சிற்றூர்கள்: புரசைப் பாக்கம், புதுப்பாக்கம், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், ரோசனப்பாக்கம் (இது சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கும் செங்கற்பட்டு மாவட்ட அதிகாரி (Collector) அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிற்றூர்), அகரம் முதலியனவாகும். இவை யாவும் பிற்காலத்தில் வெள்ளையரால் விலை கொடுத்து வாங்கப்பட்ட பழைய சிற்றூர்கள்.

நம்முடைய சென்னை மாநகரைப் பற்றிய அரிய மற்றும் சுவையான தகவல்களை கொண்டிருக்கும் இந்நூல் சிறந்த ஒரு வரலாற்று ஆவணமாகும். இச்சீர்மிகு சென்னையை இன்னமும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக்கிட எண்ணம் கொள்வோம்! சென்னை மாநகரின் இன்றைய நவீன உருமாற்றங்களைப் பற்றியும் அடுத்த பதிவுகளில் விரைவில் பகிர முயல்கிறேன்.

1 comments:

Rathnavel Natarajan said...

அருமையான, விரிவான பதிவு.
நன்றி.