Oct 31, 2023

பிச்சைக்காரன்!

 பிச்..சைக்...கா...ரன்ன்ன்.....என்னடா இது! தொடக்கமே பயங்கரமா இருக்கே-னு பாக்குறிங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. வழக்கம் போல தான்... ரொம்ப நாளைக்கு அப்புறம் blog பக்கம் வரோமே... அதுனால ஒரு மாஸ் entry குடுக்கலாம்-னு தான்!


பகுதி 1:

கார் அடையார் சிக்னலில் நின்றது! ச்சை! என்ன கஷ்டம் டா இதுங்களோட போராடுறது! வரிசையா வந்து நிக்குதுங்க. இந்த சிக்னல்-ல மாட்டினாலே இது ஒரு பிரச்சனை. அநியாயத்துக்கு பதினஞ்சு நிமிஷம் நிக்க வெக்குறான்! தலையில் அடித்துக்கொண்டேன்! எம்மா...துட்டு இல்ல... அப்டி போமா...போ... கார் கண்ணாடியை இறக்காமலே கத்தினேன். அடுத்து ஒரு நொண்டி பரதேசி வந்தான். கார் கதவை தன் தடியினால் மெல்லத் தட்டினான்...நான் வேறு பக்கம் திரும்பி கொண்டேன். பின்னர் ஒரு பெண் கையில் பேனாக்களோடு வந்து யாசகம் கேட்டாள். பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் பெண் காசை வாங்கிக் கொண்டு பேனாவைக் கொடுக்காமலே வேறு வண்டியைப் பார்த்துக் கொண்டு போய் விட்டது. எனக்குக் பத்து ரூபாய் போய் விட்டதே என்ற ஏக்கம் தீருவதற்குள் அடுத்தவள்,....என் கார் கண்ணாடியின் மேல் சோப்பு நீரைத் தெளித்து சுத்தம் செய்தாள்! நான் சிக்னலுக்காக கோவமாய் காத்திருந்தேன். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை... பத்து ரூபாய் பறிபோனதன் விளைவு. அவள் என் காரின் பின் பக்க கண்ணாடியின் மேல் துப்பிவிட்டு ஓடிவிட்டாள்! சிக்னல் விழுந்தது.... விர்ரென்று காரை எடுத்துகொண்டு நகர்ந்து விட்டேன். ச்சை... நாட்டில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகி விட்டது... இதுகள் ஒழிந்தால் தான் நாடு முன்னேறும்!...


 பகுதி 2:

சிக்னல் விழுந்ததும் அரக்கப் பறக்க ஓடிய வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக கடந்து ஒன்று சேர்ந்தது ஒரு சிறிய பரதேசிக் கூட்டம். “எக்கா...உனுக்கு எவ்ளோ கட்சிது இந்தக் கூட்டத்துல...? ஒரு பரதேசி பய கூட பிச்ச போட மாட்றானுங்ககா”... “ஏண்டி ராணி... உன் கொயந்தய பாத்து கூடவா போடல...?” “அட போக்கா... இப்போ எல்லா பயலுகளும் முழுச்சிக்கினானுங்கோ... அதான் ஒரு பைசா பெர்ல...” “இந்த நொண்டி காலோட எவ்ளோ நேரம் தான் நடிக்குறது.... பேமானி பயலுங்க.. துட்டு இல்லாம எதுக்கு வெளிய வரானுங்க!!...” “வூடு தாத்தா...அத்த சிக்குனலுல பாத்துக்கலாம்....”


பகுதி 3:

மஞ்சள் விளக்கு எரிந்தது! (இவர்களின் வயிற்றுக்குள்ளும்!!)

இத பாத்தா எனக்கு கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருதுங்க!

“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”


நீங்க என்ன நெனைக்குறீங்க???!!

0 comments: