Mar 22, 2023

பெண்மையை போற்றுவோம்!

 வையத்து மாந்தரெல்லாம்

வளமுடனே வாழுதற்கு

நலமான சிந்தனை வேண்டும்...

சிந்தனைக்கேற்ற செயலும் வேண்டும்!

 

நாட்டுநலனும் வீட்டுநலனும்

நன்றாய் ஓங்கிச் செழித்திடவே

நல்லோர் வாக்கைத் தொழுதிடல் வேண்டும்...

நாளும் அதன்வழி நடந்திடல் வேண்டும்!

 

பெண்கள் உயர்வதை உலகுக்குக் காட்டிய

பெரியோர் மண்ணில் பலருண்டு...

இதை உணர்ந்து நடந்தால்

பெண்கள் வாழ்வில் ஒளியுண்டு!

 

அகிலம் போற்றும் அன்னை தெரசா

அருள்நெறி வழியைக் காட்டியவர்!

இருட்டு வாழ்வில் மூழ்கிடுவோர்க்கு

புது வாழ்வாம் ஒளியைக் கூட்டியவர்!

 

வீரமும் அறிவும் பெண்கள் பெற்றால்

தீரமும் உயர்வும் ஓங்கிடுமே!

நல்ல சேவையும் பெருகித் தழைத்திடுமே!

 

மேத்தா பட்கர், நம் கிரண்பேடி

நாட்டுக் குழைக்கும் நங்கையராம்

நம் பாரதம் போற்றும் தனி மங்கையராம்!

 

பாரதி சொன்ன புதுமைப் பெண்ணாய்

பாரின் மீதில் வலம்வர வேண்டும்!

நாளும் நாளும் நாம் கற்று

நாட்டை உயர்த்தி நலம் தர வேண்டும்!

 

பெண்ணின் பெருமை உயர்ந்து நின்றால்

நம் மண்ணின் பெருமையும் உயர்ந்திடுமே!

 

இதை எண்ணத்தில் கொள்வோம்...

பொது நெறி சொல்வோம்...

பெண் உரிமை தன்னையே காத்திடுவோம்!

 

வள்ளுவன் வழியில் சமநெறி பாடி

பெண்மை தன்னையே போற்றிடுவோம்!

தமிழின் பெருமை!

 அகமோடு அன்புஅதை, புறமோடு வீரமதை

நெகிழ்வோடு தந்த தமிழாம்!

முப்பாலை குறளிலே முறையாகக் கூறியே – முன்

நிற்கும் மூத்த மறையாம்!

 

பண்டுபுகழ் நாடெலாம் பணிவோடு நாடியே

பல்வளம் பாடும் மொழியாம்!

அன்புநெறி வாழ்வின்பொருள் எடுத்துச்சொல்லியம்பிடும்

காப்பியம் தந்த தமிழாம்! – தொல்

காப்பியம் தந்த தமிழாம்!

 

இனிமையால் எளிமையால் இளகிடும் தன்மையால்

ஈர்த்திடும் திறன் கொண்டதால்...

தனித்ததாய், சுவைத்ததாய், ஆய்வினுக்கருமையாய்,

இலக்கியம் சொன்ன தமிழாம்!

 

மன்னர்தம் கொடைத்திறம், களம்கண்ட படைத்திறம்

பாடிடும் பண்டு தமிழாம்!...

இன்னருள் இறைபுகழ் இதையத்தில் ஏற்றிடும்

இணையிலா மறையின் தமிழாம்!

 

அறிவியல், பொறியியல், ஆகாயவெளியியல்

ஆற்றலை ஆய்ந்த தமிழாம்!...

அப்துல் கலாமெனும் இணையிலா மனிதனை

உலகுக்கு தந்த தமிழாம்!

 

நீதிநெறி பாடியே நிலையாமை கூறியே

வாழ்வின் பொருளான தமிழாம்!

தமிழ்விடு தூதெனும் தனிநிகர் பாட்டுக்கு

பாடு பொருளான தமிழாம்!

 

இயல், இசை, கூத்தெனும் முத்தமிழ்

வடிவினில் மூன்று தமிழான தமிழாம்...

அயலாரின் ஆட்சியில் அவலங்கள் போக்கியே

தேசியம் காத்த தமிழாம்!

 

கம்பனை பாரதியை பொதுமறைதந்த வள்ளுவனை

உலகுக்கு தந்த தமிழாம்! – புது

அறிஞரை, ஆன்றோரை, அறிவியல் சான்றோரை

இனியும் தந்திடும் எங்கள் தமிழாம்!

Mar 4, 2023

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!

    “நமக்கு பொறக்கப்போற புள்ள மேல சத்தியமா நா இனிமே குடிக்க மாட்டேன் டீ!”.... 


    ஒவ்வொரு வார்த்தையும் மென்மெதுவாக காதினில் கேட்டுக்கொண்டே இருக்கிறது அவளுக்கு. கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருப்பதை விழி மூடிய இமைகள் அப்பட்டமாய் காட்டிக்கொண்டிருந்தன. உடல் மட்டும் அசைவற்று கிடந்தது. முந்தைய இரவு நடந்ததை மனம் மென்று கொண்டே இருக்கிறது. 


     யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டு மெல்ல நடந்து போய் திறந்தாள். நிறைமாதம்! குப்பையை அள்ளிக் மொண்டு வந்து கொட்டுவதைப் போல அவனை யாரோ இரண்டு பேர் கொண்டு வந்து கதவுக்குள்ளே தள்ளிவிட்டுச் சென்றனர். அவன் இரையை விழுங்கிய பாம்பு போல மது போதையில் நெளிந்து கொண்டிருந்தான். 


    பயத்தில் முகம் வெளிரியவளாய் மெல்ல அவனைப் பார்த்தாள்! தன்னால் அவனை தூக்கிச் செல்ல முடியாது என்று உணர்ந்தவளாய் அவனை அங்கேயே விட்டுச் செல்ல முனைந்தவளுக்கு வலி தெரிய தொடங்கி விட்டது. தானே நேரம் வந்துவிட்டதை அறிந்து அண்டை வீட்டு தோழியின் உதவியுடன் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகிவிட்டாள்! 


    விடிகாலையில் பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்றறியாத வண்ணம் குலைந்து போயிருந்தது! ஆம்! அவளுக்கு அழ கூட திராணி இல்லை. மயக்கம் இன்னும் தெளியவில்லை. 

    போதை தெளிந்து எழுந்தவன் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு ஓடினான். மருத்துவமனை அறையில் அவள் மட்டும் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் தொட்டில் காலியாக இருந்தது. அவன் மெல்ல அவளின் பக்கத்தில் குனிந்து அவள் கையைத் தொட்டான். மது வாடை மெலிதாக வீசியது. அவன் ஸ்பரிசம் கண்டதும் அவளின் கை விரல்கள் மெதுவாக அசைந்தன. மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். விழிகளின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. அவனும் அழுதான்! 


    கண்ணீரினூடே அவன் மீண்டும் சொன்னான்,... “நமக்கு பொறக்கப்போற புள்ள மேல சத்தியமா நா இனிமே குடிக்க மாட்டேன் டீ!”....