May 24, 2013
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Friday, May 24, 2013
Labels:
எழுத்தாளர்கள்,
புத்தக விரிவுரை,
புத்தகம்
விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி
1945-ல் வெளியிடப்பட்ட நூல் ஜார்ஜ் ஆர்வெல்-ன் Animal Farm. அக்காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களில் மிக முக்கியமானது இந்த Animal Farm. தற்போது கிழக்கு பதிப்பகத்தார் "விலங்குப் பண்ணை" எனத் தமிழில், பி.வி.ராமஸ்வாமி-யின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள்.
கதைகள் மூலம் மிகப்பெரிய சமூகவியல் மாற்றங்கள், மானுடவியல் மாற்றங்கள், வரலாற்று மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்ததை உலகம் பார்த்திருக்கிறது. அந்த வகையில், உலகின் ஒட்டுமொத்த பார்வையும் வீழ்ந்த ஒரு நிகழ்வை, அந்நிகழ்வின் வீழ்ச்சியை கதை வடிவில் கொடுத்திருக்கிறார் George Orwell. ஆம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மீது சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய மிகப்பெரும் மாற்றமான ஜார் (Tzar) ஆட்சி ஒழிப்பும், கம்யூனிசக் கொள்கைகளின் வளர்ச்சியும், அதுபோலவே அதன் வீழ்ச்சியுமே தான் ஜார்ஜ்-ன் விலங்குப் பண்ணை-யின் கதைக்களம். ஓர் உண்மையான நிகழ்வினில், விலங்கினிடத்தில் மனிதனைப் பொருத்திப் பார்த்து கதை சொல்லும் உத்தியின் பயன்பாடு விலங்குப் பண்ணையின் வெற்றிக்குப் பெரும்பங்களித்துள்ளது.
கதையின் தொடக்கத்தில் வரும் 'மேனார்' பண்ணையாளர் ஜோன்ஸ்-ன் பாத்திரப் படைப்பு ஜார் நிக்கோலஸ்-II மன்னனை ஒத்துப் படைக்கப்பட்டுள்ளது. [இப்புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாரை, எதை எதைக் குறிக்கின்றன என்பதை படிப்பவரே அனுமானித்துக் கொள்ள வேண்டும். கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எளிதில் விளங்கும். மற்றவர்க்கு இணையம் கைக்கொடுக்கிறது]. ஓல்டு மேஜர் என்னும் வெள்ளைப் பன்றியின் மனிதர்க்கு எதிரான கிளர்ச்சியை விலங்குகளிடையே உண்டுபண்ணும் உரையுடன், அந்த நள்ளிரவில், கதை தொடங்குகிறது.
ஓல்டு மேஜர் தனது உரையில், மற்ற விலங்குகளைப் பார்த்து " மனிதனை ஒழிக்க கிளர்ச்சி செய்யுங்கள் தோழர்களே! ஆம். மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி; இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே, எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது; ஆனால் அவன் நமக்கெல்லாம் எசமான். எல்லா மனிதர்களுமே விரோதிகள்தாம் எல்லா விலங்கினமும் தோழர்கள்தாம்!" என்று கூறும் கருத்துகளில் ஒரு தெளிவும், மனிதர் மீதான விலங்குகளின் கோபமும் வெளிப்பட, அவை அப்படியே [Animalism-விலங்கியம்] "அனிமலிச கருத்து"களாக ஏற்றுக்கொள்ளக் கூடியன.
ஓல்டு மேஜர் தனது உரையின் முடிவில் தான் ஒரு வினோதமான கனவினைக் கண்டதாகக் கூறி அதிலே வந்த பாடலைப் பாடுகிறது.
"இங்கிலாந்தின் விலங்கினமே, அயர்லாந்தின் விலங்கினமே..." [Beasts of England, beasts of Ireland, Beasts of every land and clime,...] என்பதாக வரும் அந்த பாடல் உண்மையில் விலங்கினத்தில் புரட்சி சிந்தனையைத் தோற்றுவிப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் - விலங்கியத்தின் 7 கட்டளைகள், 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் விலங்கிய கீதமாகவும், மற்றும் "நான்கு கால் நல்லது, இரண்டு கால் கெட்டது" என்பதை விலங்கிய கொள்கையாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஒரு அக்டோபர் மாதத்தில் ஜோன்ஸ் ஆட்களுடன் விலங்குப் பண்ணையைத் தாக்க வர, ஸ்நோபால் என்னும் காட்டுப்பன்றி "ஜூலியஸ் சீசரின் போர்முனை உத்திகள்"-எனும் பழைய நூலைப் படித்து, தளபதியாக நின்று போரிட்டு, முதுகில் குண்டடிப்பட்டு வெற்றிகண்டது. அந்த யுத்தத்திற்கு "மாட்டுத்தொழுவ யுத்தம்" [உண்மையில் குறிப்பது-Bolshevic Revolution/Red October Revolution] எனப் பெயரிட்டு ஸ்நோபால்-கு விலங்கு நாயகன் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பண்ணையில் காற்றாலை கட்டத் திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்க, நெப்போலியன் எனும் காட்டுப்பன்றி ஸ்நோபால்-ஐ விரட்டியடித்து பண்ணைக்குத் தலைமை ஏற்கிறது.
பின்னர் விலங்குப் பண்ணை பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துகொள்ளலாம் என முடிவுசெய்யப்பட்டு, பண வர்த்தகத்தில் ஈடுபடுகிறது நெப்போலியன். இது தோல்வியில் முடிந்தாலும், பண்ணை வளமாக இருப்பதாக வெளியே காட்டப்படுகிறது [1932-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட மாபெரும் வறட்சி] இதற்கிடையில் "காற்றாலை யுத்தம்" [இரண்டாம் உலகப் போரில், ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையெடுப்பின் போது நிகழ்ந்த ஸ்டாலிங்க்ராடு யுத்தம்-Battle of Stalingrad] நடக்கிறது. பண்ணையில் "இங்கிலாந்தின் விலங்கினமே" பாடலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விலங்குகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளப்பட்டன. ஜோன்சுக்குப் பின் விலங்குப் பண்ணையில் மீண்டும் ரத்த வாடை சூழ்ந்தது!
விலங்குப்பண்ணையில் பார்லி விதைக்கப்பட்டு பீர் தயாரிக்கும் வேலை நடந்தது-இது பன்றிகளுக்கு மட்டும். வெகு சீக்கிரத்தில் விலங்குப் பண்ணை குடியரசாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் நெப்போலியன் தலைவரானது. நாட்கள் நகர நகர, எல்லா விலங்குகளுக்கும் வயதாகிவிட்டது; பண்ணை செழித்து விட்டது; ஆனாலும் விலங்குகளுக்கு மட்டும் எந்த வசதியும் இல்லை-பன்றிகள் தவிர! பன்றிகள் இரண்டு கால்களில் நடக்கின்றன; எல்லா பன்றிகளிடமும் சவுக்கு இருந்தது. ஒருநாள் விலங்குப்பண்ணையில் பக்கத்துப் பண்ணையாளர்களுக்கு இரவு விருந்து நடக்கிறது; பன்றிகள் மது அருந்தி, சீட்டு விளையாடி களித்துக்கொண்டிருந்தன. மற்ற விலங்குகள் இதை ஒளிந்து நின்று பார்க்கின்றன.
ஆசிரியர் சுவைபடச் சொல்கிறார்: "வெளியில் இருந்த விலங்குகள் பன்றியின் முகத்தை பார்த்துவிட்டு மனிதனின் முகத்தைப் பார்த்தன. மறுபடியும் மனிதனின் முகத்திலிருந்து பன்றியின் முகத்தைப் பார்த்தன; திரும்பவும் பன்றியின் முகத்திலிருந்து மனிதனின் முகம்; உண்மையில், எது எதனுடைய முகம் என்று சொல்ல முடியவில்லை."
உண்மையில் மிக அற்புதமாக, கம்யூனிச ஆட்சியின், சர்வாதிகார வர்க்கத்தின் தன்மையும், எந்த ஆட்சி வந்தாலும் பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற உண்மைமையை சுவையாக சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சியை விளக்கி உண்மைப் பொருள் தெளிவாகத் தெரியும்படி தமிழில் வழங்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment