Dec 10, 2013

"ரௌத்ரம் பழகு!"

இன்று பாரதியின் பிறந்தநாள். எனக்குப் ‘பெயர் கொண்ட’ திருநாள்! அவர் பெயர் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! அப்பா-வுக்கு நன்றிகள்! நல்ல ஒரு தொடக்கமாக என் அறையில் மாட்டியிருந்த மாக்கவியின் நூற்றாண்டு விழா நிழற்படத்தைப் பார்த்து மனதில் வணங்கிவிட்டு அறைக்கதவைத் திறந்தேன். அப்பா வந்து வாழ்த்தினார். அப்பா-வின் நண்பரும் குருவுமானவர் ‘நல்லதோர் வீணை செய்தே’ அலைபேசினார்.

மகிழ்ச்சியுடன் முன் கூடத்திற்குச் செல்ல முனைந்தபோது எதிர்வீட்டிலிருந்து 'பெரிய நட்சத்திரத்தின்' ரசிகர் கூட்டமொன்று காதுகளை விழுங்குவது போன்ற சத்தத்துடன் 'மாசி மாசம் ஆளான பொண்ணை' ரசித்துக் கொண்டிருந்தது. மொத்தக் குடியிருப்புக்கும் பொதுவாக இந்த இலவசச் சேவையை அவர்கள் வீட்டு ஒலிபெருக்கி வழங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய இந்த நாள் இப்படித் தொடங்குவதை நான் விரும்பவில்லை.  யாரோ, என் காதுகளுக்கருகே வந்து “ரௌத்ரம் பழகு” என மெதுவாகச் சொல்வது போல ஒரு உணர்வு. பெயர் கொண்ட திருநாள்!

வீட்டுக் கதவை மூடி ‘அன்பென்று கொட்ட’ நினைத்தேன். கனத்தக் கதவுகளைத் துளைத்துக் கொண்டு அந்த மாசி மாசப் பொண்ணும், அடுத்து ‘தேவுடா’-வும் என்னைத் தேடி வந்துகொண்டிருந்தனர்.

உண்மையில் 'நெஞ்சு பொறுக்குதில்லை’ கவிஞரே! இயலாமை வாட்டுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி மீண்டும் அறைக்குள் சென்று என்னுடைய ‘கேட்பொறி’-யைத் தேடி எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு பாரதி-யிடம் ‘மனதில் உறுதி வேண்டிக்' கொண்டிருக்கிறேன்!

"சொல்லடி சிவசக்தி" - நான் என்ன செய்ய வேண்டும்?
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!

0 comments: