Dec 16, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'பிரியாணி'


அதாவது,....ஒரு நிமிஷம்! எனக்கு இத எப்படி சொல்றதுன்னே தெரியலைங்க! சொல்ல வாயெடுத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது! சரி! ரொம்ப சஸ்பென்ஸ் வெக்காம சொல்லிடறேன்! இந்த 'உப்பு, புளி, மிளகாய்!' பதிவுல நாம பேச போறது நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடுற 'பிரியாணி' பத்தி தாங்க! "அதென்னமோ தெரியல...என்ன மாயமோ தெரியல! பிரியாணி-னு சொன்ன உடனே பசி வந்துருது! அபிராமி...அபிராமி!...அட..இல்ல இல்ல... பிரியாணி...பிரியாணி!" சரி வாங்க சாப்பிடுவோம்!?!... சே சே! வாங்க பேசுவோம்!!!..

பிரியாணி எப்படி, எங்கேயிருந்து இந்தியா வந்தது?! - இதுக்கு பல பல கதைகள் நம் இந்தியா முழுக்கப் பரவி இருக்குங்க! அதுல, நமக்குத் தெரிஞ்ச, அறிஞ்ச விஷயங்களை மட்டும் நாம பாக்கலாம்

இந்தியாவை பலதரப்பட்ட மன்னர்கள் படை எடுத்து ஆட்சி செய்துருக்காங்க. உதாரணமா, துருக்கியர்கள், அரேபியர்கள், பெர்சியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்... இப்படி பலர் நம்ம நாட்டை படையெடுத்து வந்து இங்கேயே ஆட்சியை நிலைநாட்ட பல வகை உத்திகளை கையாண்டார்கள்! அப்படி இந்த நாட்டு படை நம்ம நாட்டுக்குள்ள வரும்பொழுதே அவர்கள் தங்களுடைய பண்பாடு, போர் முறை, உணவு முறை போன்றவற்றையும் தங்களுடனே கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தது தான் பிரியாணி என்னும் "ஊண் சோறு"!...



அட! அது என்னங்க "ஊண் சோறு"?!! அப்படி-னு கேக்கறீங்களா

நம்ம ஊரை ஆட்சி செய்ய வந்த மன்னர்களின் விருப்ப உணவாக அமைந்தது அரிசி உணவில் மாமிசம் சேர்த்து செய்யப்பட ஒருவகை மசாலா உணவு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சிய முகலாயர்கள் தாங்களும் தங்கள் பங்குக்கு இந்த மாமிச உணவை பிளாப், கபாப், பிரியாணி என தங்கள் முறையில் செய்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள்

இந்த முகலாயர்களின் வருகைக்கு முன்பாகவே, கி.மு.2-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கியத்தில் "ஊண் சோறு" எனும் உணவு குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக மன்னர்கள் அவர்களது போர் வீரர்களுக்கு அரிசி-யில் நெய், புலால்,மஞ்சள், மிளகு, கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து உணவாக்கி படைத்தனர்.  இந்த வகை ஊண் உணவும் முகலாயர்கள் கொண்டு வந்த உணவும் சற்றேரக்குறைய ஒரே மாதிரி இருந்துள்ளது

சரி. இந்த 'பிரியாணி' அப்படிங்கிற வார்த்தைக்குப் பொருள் என்ன?! பிரியாணி என்னும் சொல் 'பிரியன்' (Birian) என்ற பெர்சிய மொழியில் இருந்து வந்தது. பிரியன் என்றால்  "சமைப்பதற்கு முன் வறுக்கப்பட்டது" என்று பொருள்

பல ஆண்டுகளுக்கு முன்னாள் உயர்குடி மக்கள் மட்டுமே சமைத்து உண்ணக்கூடிய உணவாக இருந்த பிரியாணி, இன்று தெருவுக்குத் தெரு, மூளைக்கு மூளை ஒரு பிரியாணி கடை, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என மாற்றம் கண்டு, பல வகை பிரியாணிகளாக வளம் வருகின்றன.

எழுத்தாளர் பா.ராகவன் சொல்வது போல், "உணவின் ருசியே, வாழ்வின் ருசி" என்பதை கருத்தில் கொண்டு பிரியாணி செரிக்க வாழ்ந்திடுவோமாக!

சந்திப்போம் விரைவில்!

Dec 15, 2019

சென்னையின் சின்னம் - 'ஸ்பென்ஸர் பிளாசா'!

மெட்ராஸ் மவுண்ட் ரோடு, 1863 - மாட்டு வண்டிகளும், ட்ராம்-களும் ரோட்டின் குறுக்கே ஊர்ந்து சென்று கொண்டிருக்க, மிகப் பிரம்மாண்டமானதொரு கட்டடம் சிவப்பு வண்ணம் பூசி 'ஸ்பென்ஸர் பிளாசா' எனும் பெயருடன் புதிதாய் கட்டிமுடிக்கப்பட்டு மெட்ராஸ் மக்களின் பார்வைக்கு விருந்து படைத்து கொண்டிருந்தது

சென்னை அண்ணா சாலை, 2019 - காலை வேளையில் அவசர கதியில் ஓடியாடி தத்தம் வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் மக்கள் கூட்ட நெரிசலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் வெளுத்ததொரு கட்டடம் தனிமையின் சாயலை போர்த்தியபடி நின்று கொண்டிருக்கிறது. அதுவே நாம் முன்பு பார்த்த 'ஸ்பென்சர்'ஸ் கட்டடம்


சமூகத்தின் இரு வேறு கால கட்ட மக்களையும் தன்னுள்ளே ஈர்த்து தனது இரு வேறு முகங்களையும் மக்களுக்கு காட்டி சென்னையின் மிக முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த 'ஸ்பென்சர் மால்' 1863-ல் சார்லஸ் டூரன்ட் மற்றும் J.W.ஸ்பென்சர் என்பவர்களால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்ஸி-இல் தொடங்கப்பட்டது. இது ஸ்பென்சர் & கம்பெனி என்ற குழுமத்திற்கு உரிமையாக இருந்தபோது, 1895-இல் இந்திய துணை கண்டத்தின் முதல் பல்பொருள் அங்காடியாகத் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான ஷாப்பிங் மால் ஆகவும், ஆசியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இக்காலக்கட்டத்தில் பெருமை பூண்டிருந்தது.

1983-இல் இந்த ஸ்பென்சர்ஸ் கட்டடம் தீ விபத்து ஒன்றில் சிக்கியது. அதன் பிறகு இக்கட்டிடம், புகழ்பெற்ற இந்தோ-சர்சானிக் கட்டிட அமைப்பு முறைப்படி கட்டப்பட்டது


தற்போது இருக்கும் ஸ்பென்சர் கட்டடம் 1991-இல் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டது. பின்பு வந்த நாட்களில், சென்னையை ஆக்கிரமித்துக் கொண்ட பல பெரிய ஷாப்பிங் மால்-களின் வரவால், ஸ்பென்சர் சற்றே பின்னடைவு கண்டு, தற்போது கேட்பாரற்ற 'லேண்ட் மார்க்'-ஆக உள்ளது. என்றாலும், ஸ்பென்சர்ஸ் பற்றி அறிந்த மக்கள் இன்னமும் அதனை வியப்பு மிக கண்களோடு அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சின்னமாக விளங்கிய 'மூர் அங்காடி' எவ்வாறு சிதிலமடைந்த பின்பும் மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே இந்த 'ஸ்பென்சர் பிளாசா'-வும் சென்னையின் சின்னமாக இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மனத்தில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பதிவில் பேசுவோம்!