Dec 15, 2019
மெட்ராஸ் மவுண்ட் ரோடு, 1863 - மாட்டு வண்டிகளும், ட்ராம்-களும் ரோட்டின் குறுக்கே ஊர்ந்து சென்று கொண்டிருக்க, மிகப் பிரம்மாண்டமானதொரு கட்டடம் சிவப்பு வண்ணம் பூசி 'ஸ்பென்ஸர் பிளாசா' எனும் பெயருடன் புதிதாய் கட்டிமுடிக்கப்பட்டு மெட்ராஸ் மக்களின் பார்வைக்கு விருந்து படைத்து கொண்டிருந்தது.
சென்னை அண்ணா சாலை, 2019 - காலை வேளையில் அவசர கதியில் ஓடியாடி தத்தம் வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் மக்கள் கூட்ட நெரிசலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் வெளுத்ததொரு கட்டடம் தனிமையின் சாயலை போர்த்தியபடி நின்று கொண்டிருக்கிறது. அதுவே நாம் முன்பு பார்த்த 'ஸ்பென்சர்'ஸ் கட்டடம்.
சமூகத்தின் இரு வேறு கால கட்ட மக்களையும் தன்னுள்ளே ஈர்த்து தனது இரு வேறு முகங்களையும் மக்களுக்கு காட்டி சென்னையின் மிக முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த 'ஸ்பென்சர் மால்' 1863-ல் சார்லஸ் டூரன்ட் மற்றும் J.W.ஸ்பென்சர் என்பவர்களால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்ஸி-இல் தொடங்கப்பட்டது. இது ஸ்பென்சர் & கம்பெனி என்ற குழுமத்திற்கு உரிமையாக இருந்தபோது, 1895-இல் இந்திய துணை கண்டத்தின் முதல் பல்பொருள் அங்காடியாகத் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான ஷாப்பிங் மால் ஆகவும், ஆசியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இக்காலக்கட்டத்தில் பெருமை பூண்டிருந்தது.
1983-இல் இந்த ஸ்பென்சர்ஸ் கட்டடம் தீ விபத்து ஒன்றில் சிக்கியது. அதன் பிறகு இக்கட்டிடம், புகழ்பெற்ற இந்தோ-சர்சானிக் கட்டிட அமைப்பு முறைப்படி கட்டப்பட்டது.
தற்போது இருக்கும் ஸ்பென்சர் கட்டடம் 1991-இல் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டது. பின்பு வந்த நாட்களில், சென்னையை ஆக்கிரமித்துக் கொண்ட பல பெரிய ஷாப்பிங் மால்-களின் வரவால், ஸ்பென்சர் சற்றே பின்னடைவு கண்டு, தற்போது கேட்பாரற்ற 'லேண்ட் மார்க்'-ஆக உள்ளது. என்றாலும், ஸ்பென்சர்ஸ் பற்றி அறிந்த மக்கள் இன்னமும் அதனை வியப்பு மிக கண்களோடு அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சின்னமாக விளங்கிய 'மூர் அங்காடி' எவ்வாறு சிதிலமடைந்த பின்பும் மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே இந்த 'ஸ்பென்சர் பிளாசா'-வும் சென்னையின் சின்னமாக இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மனத்தில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பதிவில் பேசுவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment