Feb 9, 2019
சற்று முன்... வீட்டிற்கு அருகாமையில்...
எங்களது அப்பார்ட்மெண்ட்-க்கு பக்கவாட்டில்
ஒரு குறுகிய சந்து. பின்புறத்தில் அடர்ந்த புதர் மண்டிய பெரிய திறந்தவெளி. இந்த
இரு இடங்களுமே பல வகையிலும் சமூக சீர்கேடுகள் நடந்தேற அவ்வபோது தோதான இடங்களாக அமைந்துவிட்டன.
இன்றும் அப்படித்தான்.
அறையில் லேப்டாப்-இல் மதுஒழிப்புப்
போராட்டங்கள் பற்றிய செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். பல்வேறு தரப்பினரும்
அவரவர் கருத்துக்களை சொல்லியிருந்தனர். வீட்டிலிருந்த எல்லாரும்
மொட்டைமாடியிலியிருந்தனர். திடீரென வெளியே பெருங்குரல்கள். பக்கவாட்டுத் தெருவில்
இருந்து குரல்கள் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டேயிருந்தன. பரப்பரப்புத்
தொற்றிக்கொள்ள வீட்டிலிருந்து மொட்டைமாடிக்கு ஓடினேன். எதிர்பார்த்தது போலவே
எல்லாரும் அங்கிருந்து தெருவை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
கீழே தெருவில் இரு தரப்பினருக்கு பலமான
சண்டை நடந்துகொண்டிருந்தது. குறுகிய தெருவில் எதிரெதிரே வந்த இரண்டு இருசக்கர
வாகனங்கள் இடித்துக்கொள்ள சண்டை தொடங்கியிருக்கிறது. ஒரு தரப்பிலிருந்த இரண்டு
பேர் நல்ல நடுத்தர வயதினராகவும், தெளிவாகவும் இருந்தார்கள். மற்ற தரப்பில் இரண்டு
இளைஞர்கள்....முழுக்கக் குடித்திருந்தார்கள்.
மது அருந்திய இளைஞர்கள் போதையில் எதிராளிகளை
கண்மண் தெரியாமல் வசைமாரி பொழிந்தனர். எதிரணி கொஞ்சம் டீசன்ட்டாக அவர்களை
திரும்பப் போகச் சொல்லிவிட்டு இவர்களும் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பினர். தெரு
திருப்பம் வரை சென்றவர்களை இந்த இளைஞர்கள் தொடர்ந்து சென்று சண்டைக்கு
மீண்டும்மீண்டும் அழைக்க நடுத்தர வயதினருக்கு கோபம் ஏறிக்கொண்டே போனது.
இளைஞர்களில் ஒருவன் மற்றவனைத் தூண்டிவிட,
இன்னொருவன் கையில் பெரிய ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு சண்டைக்குத் தயாரானான்.
இவர்கள் விடாமல் மற்ற இருவரையும் சண்டைக்கு அழைக்கவே அவர்களும் கையில் கல்
வைத்திருந்த இளைஞனை நோக்கி அடிக்க ஓடி வந்தனர். உடனே சண்டையை தூண்டி விட்டவன்
வேகமாக ஓடி ஒரு புதருக்குள் பதுங்கிக் கொண்டான். கல் வைத்திருந்தவன் நடுத்தர
வயதுடையவரை முகத்தில் வேகமாக தாக்க அவரது இடது முகம் முழுக்கக் காயமாகி ரத்தம்
கொட்டத் தொடங்கியது. கோபமான இருவரும் குடித்திருந்த இளைஞனை பலமாகத் தாக்கத்
தொடங்கினர்...
அவர்களே போலிசுக்கு போன் செய்து அவனை
இழுத்துக் கொண்டு செல்ல யத்தனித்தபோது...இன்னும் சிலர் சேர்ந்து அவனை அடிக்கவும்
அவன் தன்னிலையிழந்து தரையில் விழுந்தான். இன்னமும் இன்னொரு இளைஞன் புதருக்குள்
பதுங்கியிருக்கிறான்.
அவனை இழுத்து சென்றபின்... சலனங்கள்
கொஞ்சம் அடங்கியதும்.... எதிர்பார்த்தவாறே அந்த இளைஞன் தப்பிக்க நினைத்துப்
புதருக்குள்ளிருந்து எங்கள் குடியிருப்பின் காம்பவுண்ட் நோக்கி வந்து உள்ளே தாண்டி
குதிக்க முயன்றான். இதைப் பார்த்துகொண்டிருந்த எங்கள் குடியிருப்புவாசிகள்
பெருங்குரலெடுத்து அவனை நோக்கிச் சென்று அவனை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
பாவம்! முழுக்கக் குடித்திருந்த அந்த
இளைஞன் மிரண்டு விட்டான். புதர் மண்டிய மைதானத்தைத் தாண்டி வெளியே போனால்
போலீசிடம் சிக்கிக் கொள்வோமென பயந்து மீண்டும் ஒரு புதருக்குள் பதுங்கிக்
கொண்டான். இதற்குள் அப்பார்ட்மெண்ட்-வாசிகளும் போலீசுக்கு தெரிவிக்க...அரைமணி
சென்றபின் நிதானமாக காவலர்கள் வந்தனர்.
எங்கள் அனைவருடைய கண்களும் அவன்
மறைந்திருந்த அந்த புதரை நோக்கியே இருந்தன. புதர் அமைதியாகத்தான் இருந்தது.
போலீஸ்காரர்கள் இருட்டில் புதருக்கருகில் தயங்கித் தயங்கி சென்று அந்தப் புதரைத்
தவிர்த்து மற்றப் புதர்களுக்குள் எல்லாம் தேடிவிட்டு இங்கே யாரும் இல்லை என சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
பார்த்துக் கொண்டிருந்த மக்களின் குரல்களை அவர்கள் ஒரு பொருட்டாக ஏற்கவில்லை.
அந்த இளைஞன் இன்னமும் அந்தப் புதருக்குள்
பத்திரமாக மது போதையில் உறங்கிக் கொண்டுதானிருக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment