Dec 15, 2021
காலையில் கண்ணைப் பிட்டுக் கொண்டது முதலே எல்லாமே அவசரம் தான். குளித்து முடித்து உடையணிவதிலும் ஒரு குழப்பம். எப்போதும் போல் ஜீன்ஸ் -க்கு குர்தி போடுவதா அல்லது சட்டை போடுவதா என்பதில் ஆரம்பிக்கிறது அந்த ஒருநாள். இறுதியில் ஒரு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு கிளம்பியாகிவிட்டது.
அந்த மூன்றெழுத்து டாக்ஸி கம்பெனி ஆப்-ஐ திறந்து ஆட்டோ புக் செய்தேன். அது மூன்று நிமிடங்களில் ஆட்டோ வரும் என சொல்லியது. சரி, மூன்று நிமிடம் தானே, வாசலில் போய் நிற்கலாம் என்று பையை தூக்கிக் கொண்டு கீழே வந்து நின்றேன். ஒருவழியாக ஆட்டோ பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வந்து நின்றது. ஏறிக் கொண்டேன். ஆட்டோ நேரே அலுவலகம் சென்றது.
சென்னை மாநகரின் மைய்யப் பிரதேசமான கடற்கரை ஓரத்தில் அமைந்து இருந்தது என் அலுவலகம். மத்திய அரசு அலுவலகம். மீன் ஆபீஸ் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். வழக்கம் போல் பத்து நிமிடம் லேட். லிப்ட்-கு காத்திருக்காமல் இரண்டாம் மாடிக்கு படிக்கட்டில் ஓடிச் சென்று வருகையை பதிந்து விட்டு மீண்டும் ஓடி வந்து என்னுடைய சீட்டில் அமர்ந்தேன். அது முதல் மாடியில் இருந்தது.
வந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவசர அவசரமாக வேலைகளை முடித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன். தூக்கம் கண்ணைக் கட்டியது. சேரில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டிருந்தேன். திடீரென யாரோ உரக்க கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன். ஆபீஸ் பையன் நின்று கொண்டிருந்தான்.
'என்ன?' என்றேன்.
'உங்களை சூப்பிரிண்டு ஐயா கூப்பிடுறாங்க மேடம்' என்றான்.
லேசாக மனம் பதறியது. ஒருவேளை தூங்கினதை பார்த்து விட்டாரோ! எழுந்து மேலே சென்றேன். சூப்பிரிண்டு மேஜையின் மேல் கட்டுக் காட்டாக பழைய தாள்கள், படிவங்கள் மேலும் பல நிரம்பி இருந்தன. நான் சென்றதும் எதிரில் அமரச் சொன்னார். சில நிமிடங்கள் மௌனங்களில் கழிந்தது.
பின்னர் கேட்டார், 'காலையில் லேட் ஆக வந்தாய் போல!'. 'இல்லை சார்! கிண்டி-யில் டிராபிக் சார்!' முன்பே யோசித்து வைத்திருந்த பொய்யை சொல்லி வைத்தேன்.
'இது என்ன?' -ஒரு கட்டு பேப்பரை என் முன்னே தள்ளியபடி கேட்டார்.
நான் அதை பார்த்தபடியே 'income tax பேப்பர்ஸ் சார்!' -என்றேன்.
'அது தெரியுது. அதை ஏன் இவ்வளவு தப்பு தப்பாக எழுதி வைத்துள்ளாய்? எனக்கு சரியான விளக்கம் வேண்டும் இப்போ. இது ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அடித்து வைத்திருக்கிறாய்! சம்பளம் மட்டும் வாங்க தெரியுதுல்ல. இதையும் சரியாய் செய்ய தெரியணும். புரியுதா?' என்றார்.
நான், 'ஓகே சார்! அப்படியே செய்றேன் சார்!' என்றபடி அங்கிருந்து அகன்று என் டேபிளுக்கு வந்தேன். மனதில் புகைச்சல்.
மதிய வேளைக்குப் பின் உடல் கொஞ்சம் அசதியாய் இருந்தது. அலுவலகத்திலிருந்து 5 மணிக்கெல்லாம் கிளம்பலாம் என முடிவு செய்து எழுந்தேன். காலார நடந்து வெளியே வந்தேன். சில்லென லேசாக மழை தூரிக் கொண்டிருந்தது. மீண்டும் டாக்ஸி ஆப்-ஐ திறந்து ஆட்டோ புக் செய்தேன். ஆட்டோ இரண்டு நிமிடத்தில் வரும் எனச் சொல்லியது அது. காத்திருந்தேன். பத்து நிமிடங்கள் ஓடிற்று. ஆட்டோ வரவில்லை. போன் செய்து பார்க்கலாம். 'ஹலோ! மேடம் எங்க இருக்கீங்க? லொகேஷன் சரியாய் இருக்கா? சரி. இதோ வந்திடுறேன்!' -எதிர்முனை என்னை பேச விடாமல் அதுவே பேசி கட் செய்து விட்டது.
ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவர் பக்கத்தில் வந்து 'போரூர் பஸ் இங்க நிக்குமா?' -எனக் கேட்டார். நான் திரும்பி, 'எதிர்த்த பஸ் ஸ்டாப்-பில் போய் நில்லுங்க சார்' என்றேன். அவர் என்னை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு, 'சே! பொண்ணா!!?? நான் ஆம்பிளைனு நெனச்சேன்! காலம் கேட்டுக் கெடக்குது!' என்கிறார், என் கிராப் செய்த முடியைப் பார்த்து!
தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது. அது மெல்ல என் பக்கம் வந்து நின்று 'நீங்க தானே ஆட்டோ புக் செய்திங்க? -என்றார். நான் ஒருமுறை ஆட்டோ நம்பரை செக் செய்துவிட்டு, 'நான் தான்! ஆனால் இந்த நம்பர் இல்லையே' என்றேன். அந்த ஆட்டோ போய் விட்டது.
ஐந்து நிமிடத்துக்கெல்லாம் இன்னோர் ஆட்டோ குலுங்கியபடி வந்தது. அதன் ஹெட் லைட் எல்லாம் தொங்கியபடி, 'கடகட' என்ற நாராசமான சத்தத்துடன் வந்து பக்கத்தில் நின்றது. அது தான் நான் புக் செய்த வண்டி. மனம் ஒரு நொடி அதில் ஏறலாமா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்கும் போதே ஏறி உட்கார்ந்து விட்டேன்.
ஆட்டோ ஒரு திருப்பத்தில் சிக்னல்-லில் நின்றது. பக்கத்தில் ஒரு பைக் அந்த ஆட்டோ-வை உரசுவது போல் வந்து நின்றது. ஆட்டோ ஓட்டுநருக்கு வந்ததே கோபம். 'டேய், தே..,ஓ...மூ...சாவுகிராக்கி' என்று வாயில் வந்தபடிக்கு கத்த ஆரம்பித்து விட்டார். அந்த பைக்-காரன் முகத்தைச் சுழித்துக் கொண்டு தள்ளி சென்று நின்றான். சிக்னல் விழுந்ததும் வண்டி பறக்கத் தொடங்கியது.
சற்றைக்கெல்லாம் ஆட்டோ ஓட்டுநர் யாருக்கோ போன் செய்து பேசிக் கொண்டே வண்டி ஓட்டினார். அப்போதும் அவர் வாயிலிருந்து முன்பு சொன்ன வார்த்தைகளே அதிகம் வந்தன. அனாயசமாக அந்த 'தே..,ஓ...மூ...சா-க்கள் வந்து விழுந்தன.
மணி ஆறாகி நன்றாக இருட்டி விட்டது. வண்டி இன்னும் கிண்டியில் தான் போய்க் கொண்டிருந்தது. வழியில் ஒரு கன்றுக்குட்டி பாலிதீன் பையை பாதி விழுங்கி கொண்டிருந்தது. பார்க்க பாவமாக இருந்தது. இடையில் வண்டி கேஸ் போட ஒரு பெட்ரோல் பூத்-ல் நின்றது. என் மனம் அந்த கன்றையே நினைத்துக் கொண்டிருந்தது.
ஒருவழியாக என் வீடு இருக்கும் தெரு முனைக்கு வந்தாகி விட்டது. ஆட்டோக்காரன் 'பாப்பா, இங்கதான் லொகேஷன் முடியுது, இறங்கு' -என்று சொன்னார். (நான் பாப்பா வயதைக் கடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன).
தெரு இருள் மண்டிக் கிடந்தது. நான் வீட்டு வாசலில் இறக்கி விடும்படி அவரிடம் கேட்கலாமா என எண்ணி அந்த முயற்சியைக் கைவிட்டேன். வண்டியில் இருந்து இறங்கி 'எத்தனை ரூபாய்' எனக் கேட்டேன்.
அவர், '220 ஆச்சு மா. 250-ஆ கொடுங்க' -என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகி போனது. இருந்தும் மீண்டும் நான் அந்த 'தே..,ஓ...மூ...சா...' -வை வாங்கி கட்டிக் கொள்ள விரும்ப வில்லை. மனமும் சோர்ந்து விட்டிருந்தது. எனவே அவர் கேட்டத் தொகையை கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடையைக் கட்டினேன். ஆட்டோ என்னைக் கடந்து மெல்ல மெல்ல இருட்டில் கரைந்து கொண்டே போனது.