May 28, 2013

மிக நீண்ட இரயில் பயணமும், கொஞ்சம் மஞ்சள் உலோகமும்,...

இது என்னுடைய 'மிக நீண்ட' ஒரு இரயில் பயணம். வெகு நாட்களுக்குப் பின் நான் மேற்கொள்ளும் மிக நீண்ட ஒரு இரயில் பயணம்; என்னுடைய பெரிய குடும்பத்தின் பெரும்பாலானோரோடு நான் மேற்கொண்டிருக்கும் இனிய ஒரு இரயில் பயணம்... என் அண்ணனின் கடைக் குட்டி மகன் அவ்வப்போது எனக்கு செல்லமாய்த் தொல்லை கொடுத்தாலும் அவனின் குறும்புகளை உடனிருந்து பார்த்து, பேசி, பொய்க்கோபம் காட்டி, அவனை என் கைக்குள் வைத்துக் கூட்டிச் செல்லும் இது,....'மிக நீண்ட' என்னுடைய இரண்டாவது இரயில் பயணம்....

இரயில் சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட எண்ணி, குட்டிப் பையனை அதட்டி உட்கார வைத்துவிட்டு, கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வாசிக்கப் பிரயத்தனப்பட்டேன்.  குட்டிப் பையன் அடங்கின பாடில்லை. "இது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? Train ஏன் ஆடுது? நான் வெளில போகணுமே!..." என்றெல்லாம் என்னிடம் நொடிக்கொரு கேள்வி கேட்டு அலுத்துப் போயிருந்தான்... இடையிடையே அலைபேசி வேறு சிணுங்கிச் சிணுங்கி தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் புத்தகத்தில் முகம் புதைக்கிறேன்.

கண்கள் வார்த்தைகளினூடும், அவற்றின் எழுத்துகளினூடும் சுற்றிச் சுற்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான இரயில் சூழலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மனம் புத்தகத்தின் எழுத்துக்களைக் கொஞ்சம் கையில் அள்ளிச் சிதற விட்டாற்போல் ஆங்காங்கே சிதறிக் கொண்டிருக்கிறது...
இது என்னுடைய மிக நீண்ட ஒரு இரயில் பயணம்... 'மிக நீண்ட'---தூரத்தைக் குறிக்கும் ஒரு அளவைச் சொல். இந்த தூரம் எதனை மையப்படுத்திக் கணக்கிடப்படுகிறது?--இன்ச்-களிலா? செண்டி மீட்டரா? அல்லது கிலோ மீட்டரா?... இல்லை. என்னுடைய இந்த மிக நீண்ட இரயில் பயணத்தை 'மன' அளவை கொண்டு அளந்து கொண்டிருக்கிறேன் நான்!

என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்-அது தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து என் வசிப்பிடமான அதன் தலைநகருக்குப் போவதாக இருந்தது. ஆம்! உண்மையில் அது ஒரு ஆழமான, மனசஞ்சலங்களுடன், மற்றும் குடும்பத்துப் பெரியவர்களுடன் நான் மேற்கொண்ட மிக நீண்ட இரயில் பயணம்!

தூரத்து உறவினர் ஒருவரைச் சந்திக்க வேண்டி அங்கே செல்ல நேர்ந்தது. நலம் விசாரிப்புகள், விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடிந்து கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அலைபேசியில் ஆராய்ந்து கொண்டிருந்தேன், வழக்கம்போலவே! அந்தக் குடும்பத்து மூத்த பெண்ணின் திருமணத்தை நோக்கி அவர்களின் பேசு திரும்பியது. அவள் திருமண வயதைக் கடந்து விட்டிருந்தாள். அதாவது, இப்போது அவள் ஒரு முதிற்கன்னி. என்னுடைய வீட்டுப் பெரியவர்களும் விடாமல் கேள்வி கேட்டுக் குடையவே, அவளுடைய வயது முதிர்ந்த அப்பா மெல்ல குரல் தழுதழுக்கக் கூறினார்: "நெறைய வரன் வந்து தான் போகுது, எதுவும் அமையல; எம்பொண்ணு தங்கம் மாதிரி; விலை ஏறிகிட்டே தான் போகும்; வாங்குவாரில்ல!..." - என்று கூறி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்து விட்டிருந்தது. அறையில் ஆழ்ந்த நிசப்தம். என்னுடைய வேலையிலிருந்து விடுபட்டு அந்தச் சூழலில், அந்தப் பெரியவரின் வார்த்தைகளில் நானும் கரைந்திருந்தேன்...

திருமண வயதைக் கடந்து நிற்கும் ஒரு முதிற்கன்னியின் தந்தை, தன்னுடைய மகளுக்கு வயதேறிக் கொண்டே போவதையும், அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியாத தன்னுடைய இயலாமையையும் எவ்வளவு சுருக்கமாக தற்குறிப்பேற்றிச் சொல்லிவிட்டார். அனால், அதைச் சொல்லும்போது அவருடைய மனம் எப்படிப் பதைத்திருக்கும்; எப்படி எல்லாம் துடித்திருக்கும்; இனம் புரியாத பயமும், கலவரமும் அடைந்திருந்தது அவருடைய வெளுத்த முகம். காரணம் பிடப்பட்ட அதிக நேரமாகவில்லை எங்களுக்கு.

தங்கம் - வெறுமனே ஒரு உலோகம்; மஞ்சள் நிறம் பூசிய ஒரு உலோகம்; மின்னிடும் தன்மை கொண்ட ஒரு உலோகம்...இப்படி வெறுமனே ஒரு உலோகம் அங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கருவியாகிவிட்டிருந்தது. பெண்ணுக்குப் பொன் செய்வித்து அழகு பார்க்கும் பண்பாடு மாறி, இப்போது பெண்ணுக்குப் பொன் செய்வித்து 'அளவு' பார்க்கிறார்கள். இங்கே இவளும் அந்த அளவுகோலின் மீது வெகு நாட்களாய் நின்று கொண்டிருக்கிறாள்.... சாதாரணமாக வெளியிலிருந்து பார்த்தால் சின்ன விஷயமாய்த் தெரிந்தாலும், அதை கொஞ்சம் தட்டித் துடைத்து கண்ணுக்கருகில் பிடித்துப் பார்க்கையில் பூதாகரமாகி நிற்கிறது.

அத்தனை நேரமும் அமைதியால் ஆழ்ந்திருந்த எங்களை என் அண்ணனின் குரல் சுயத்திற்குக் கொண்டு வந்தது. "இப்போ என்ன ஆச்சு? நீங்க கல்யாண வேலையத் தொடங்குங்க; தம்பிங்க நாங்க இருக்கோம்; கல்யாணத்த முடிச்சுடலாம்" - என்ற உறுதியான குரல். என் அண்ணன் ஒரு பொறியாளன். இயல்பிலேயே கணக்குப்போடும் பொறியியல் மூளை கொண்டவன். அப்படி ஒன்றும் எங்களுக்கு வசதி இல்லை; நாங்களும் நடுத்தர வர்க்கம் தான். அந்தப் பெரியவரோ எங்களுக்கு தூரத்து சொந்தம் தான்; நெருங்கின தொடர்பில்லை; ஆனால், அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் - முதிற்கன்னியாய் இருக்கிறாள்; அவளுக்குத் திருமணம் செய்வித்தாக வேண்டும்.

அந்தப் பெரியவர் அதிர்ச்சியாகி அண்ணனைப்பார்த்தார். அவர் கண்களில் பல கேள்விகள் குவிந்திருந்தன. நம்ப முடியாத ஒரு வறட்டுப் பார்வை அது. அண்ணனை அவர் பார்த்துக் கொண்டேயிருந்தார். அண்ணனோ சாந்தமான முகத்துடன் அவருடைய கண்களை நோக்கிப் புன்னகைத்தான். அந்தப் பெரியவரின் கண்களில் கண்ணீர் திரண்டு உருண்டது.

- இப்படியாக மனதில் ஆழப் பதிந்த ஒரு நிகழ்வைச் சுமந்தும், அந்தத் துயரத்தினோடும், அந்தப் பெரியவரின் விளக்கத்தினோடும், கொஞ்சம் மஞ்சள் நிற யோசனைகளோடுமாக அமைந்தது என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்!...
இது என்னுடைய இரண்டாவது மிக நீண்ட மறக்கவியலாத இரயில் பயணம்... எங்களின் குட்டி வாண்டுப் பையன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து மீண்டும் எல்லாரையும் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான்; மற்றவர்கள் பேசிக்கொண்டும், எதையோ சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள்; அண்ணி-யின் பாதுகாப்பில், கொஞ்சம் மஞ்சள் உலோகம் - ஒரு முதிற்கன்னியின் திருமணக் கனவுகளைச் சுமந்து, எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது - அந்தப் பெரியவரின் வீட்டிற்கு; என் அண்ணன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான்...

எங்கிருந்தோ சரேலென்று என் மடியில் விழுந்து, என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னை தன் மழலை மொழியில் கொஞ்சத் தொடங்கிவிட்டான் என் அண்ணனின் கடைக் குட்டி வாண்டுப் பையன்... சிரித்துக் கொண்டே அண்ணனைப் பார்த்தேன்; அவனுடைய முகம் சலனமற்றிருக்கிறது; மன நிறைவு உதட்டின் ஓரத்தில் ஒதுங்கியிருக்கும் சின்னப் புன்னகையில் அப்பட்டமாய்த் தெரிகிறது; குட்டிப் பையனைப் போல் நானும் என் அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றுகிறது... என் மடியிலிருந்த வாண்டுப் பயலை இறுக அணைத்துக் கொண்டேன்...

May 24, 2013

ஜார்ஜ் ஆர்வெல்-ன் விலங்குப் பண்ணை - ஓர் அலசல்!


விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி

1945-ல் வெளியிடப்பட்ட நூல் ஜார்ஜ் ஆர்வெல்-ன் Animal Farm. அக்காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களில் மிக முக்கியமானது இந்த Animal Farm. தற்போது கிழக்கு பதிப்பகத்தார் "விலங்குப் பண்ணை" எனத் தமிழில், பி.வி.ராமஸ்வாமி-யின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள்.
கதைகள் மூலம் மிகப்பெரிய சமூகவியல் மாற்றங்கள், மானுடவியல் மாற்றங்கள், வரலாற்று மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்ததை உலகம் பார்த்திருக்கிறது. அந்த வகையில், உலகின் ஒட்டுமொத்த பார்வையும் வீழ்ந்த ஒரு நிகழ்வை, அந்நிகழ்வின் வீழ்ச்சியை கதை வடிவில் கொடுத்திருக்கிறார் George Orwell. ஆம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மீது சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய மிகப்பெரும் மாற்றமான ஜார் (Tzar) ஆட்சி ஒழிப்பும், கம்யூனிசக் கொள்கைகளின் வளர்ச்சியும், அதுபோலவே அதன் வீழ்ச்சியுமே தான் ஜார்ஜ்-ன் விலங்குப் பண்ணை-யின் கதைக்களம். ஓர்  உண்மையான நிகழ்வினில், விலங்கினிடத்தில் மனிதனைப் பொருத்திப் பார்த்து கதை சொல்லும் உத்தியின் பயன்பாடு விலங்குப் பண்ணையின் வெற்றிக்குப் பெரும்பங்களித்துள்ளது.

கதையின் தொடக்கத்தில் வரும் 'மேனார்' பண்ணையாளர் ஜோன்ஸ்-ன் பாத்திரப் படைப்பு ஜார் நிக்கோலஸ்-II மன்னனை ஒத்துப் படைக்கப்பட்டுள்ளது. [இப்புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாரை, எதை எதைக் குறிக்கின்றன என்பதை படிப்பவரே அனுமானித்துக் கொள்ள வேண்டும். கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எளிதில் விளங்கும். மற்றவர்க்கு இணையம் கைக்கொடுக்கிறது]. ஓல்டு மேஜர் என்னும் வெள்ளைப் பன்றியின் மனிதர்க்கு எதிரான கிளர்ச்சியை விலங்குகளிடையே உண்டுபண்ணும் உரையுடன், அந்த நள்ளிரவில், கதை தொடங்குகிறது.

ஓல்டு மேஜர் தனது உரையில், மற்ற விலங்குகளைப் பார்த்து " மனிதனை ஒழிக்க கிளர்ச்சி செய்யுங்கள் தோழர்களே! ஆம். மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி; இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே, எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது; ஆனால் அவன் நமக்கெல்லாம் எசமான். எல்லா மனிதர்களுமே விரோதிகள்தாம் எல்லா விலங்கினமும் தோழர்கள்தாம்!"  என்று கூறும் கருத்துகளில் ஒரு தெளிவும், மனிதர் மீதான விலங்குகளின் கோபமும் வெளிப்பட, அவை அப்படியே [Animalism-விலங்கியம்] "அனிமலிச கருத்து"களாக ஏற்றுக்கொள்ளக் கூடியன.
ஓல்டு மேஜர் தனது உரையின் முடிவில் தான் ஒரு வினோதமான கனவினைக் கண்டதாகக் கூறி அதிலே வந்த பாடலைப்  பாடுகிறது.
"இங்கிலாந்தின் விலங்கினமே, அயர்லாந்தின் விலங்கினமே..." [Beasts of England, beasts of Ireland, Beasts of every land and clime,...] என்பதாக வரும் அந்த பாடல் உண்மையில் விலங்கினத்தில் புரட்சி சிந்தனையைத் தோற்றுவிப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் - விலங்கியத்தின் 7 கட்டளைகள், 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் விலங்கிய கீதமாகவும், மற்றும் "நான்கு கால் நல்லது, இரண்டு கால் கெட்டது" என்பதை விலங்கிய கொள்கையாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மூன்று இரவுகளுக்குப் பின் ஓல்டு மேஜர் இறந்து போகிறது. பண்ணையாளர் ஜோன்ஸ் குடியில் மூழ்கிக்கிடக்க, விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் தாமே எடுத்து உண்ணுகின்றன,...விரைவில் அந்தப் பண்ணையில் புரட்சி வெடிக்கிறது; ஜோன்ஸ் குடும்பம் பண்ணையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, 'மேனார் பண்ணை' "விலங்குப் பண்ணை"யாகிறது. படிப்படியாக விலங்குகளின் ஆட்சியிலும் மனநிலை மாற்றம் நிகழ்கிறது. பன்றிகள் படிக்கக் கற்றுக் கொண்டு பண்ணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றன. பன்றிகளின் தலைமையில் விலங்குகள் தாமே அறுவடைப் பணியில் ஈடுபடுகின்றன. பக்கத்து பண்ணை விலங்குகளும் மெதுவாக புரட்சிப் பாடலைப் பாடத் துணிகின்றன. 7 கட்டளைகள் பண்ணைச் சுவர்களில் எழுதப்பட்டு, அவை சில மாற்றங்களும் பெறுகின்றன.

ஒரு அக்டோபர் மாதத்தில் ஜோன்ஸ் ஆட்களுடன் விலங்குப் பண்ணையைத் தாக்க வர, ஸ்நோபால் என்னும் காட்டுப்பன்றி "ஜூலியஸ் சீசரின் போர்முனை உத்திகள்"-எனும் பழைய நூலைப் படித்து, தளபதியாக நின்று போரிட்டு, முதுகில் குண்டடிப்பட்டு வெற்றிகண்டது. அந்த யுத்தத்திற்கு "மாட்டுத்தொழுவ யுத்தம்" [உண்மையில் குறிப்பது-Bolshevic Revolution/Red October Revolution] எனப் பெயரிட்டு ஸ்நோபால்-கு விலங்கு நாயகன் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பண்ணையில் காற்றாலை கட்டத் திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்க, நெப்போலியன் எனும் காட்டுப்பன்றி ஸ்நோபால்-ஐ விரட்டியடித்து பண்ணைக்குத் தலைமை ஏற்கிறது.

பின்னர் விலங்குப் பண்ணை பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துகொள்ளலாம் என முடிவுசெய்யப்பட்டு, பண வர்த்தகத்தில் ஈடுபடுகிறது நெப்போலியன். இது தோல்வியில் முடிந்தாலும், பண்ணை வளமாக இருப்பதாக வெளியே காட்டப்படுகிறது [1932-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட  மாபெரும்  வறட்சி] இதற்கிடையில் "காற்றாலை யுத்தம்" [இரண்டாம் உலகப் போரில், ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையெடுப்பின் போது நிகழ்ந்த ஸ்டாலிங்க்ராடு யுத்தம்-Battle of Stalingrad] நடக்கிறது. பண்ணையில் "இங்கிலாந்தின் விலங்கினமே" பாடலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விலங்குகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளப்பட்டன. ஜோன்சுக்குப் பின் விலங்குப் பண்ணையில் மீண்டும் ரத்த வாடை சூழ்ந்தது!

விலங்குப்பண்ணையில் பார்லி விதைக்கப்பட்டு பீர் தயாரிக்கும் வேலை நடந்தது-இது பன்றிகளுக்கு மட்டும். வெகு சீக்கிரத்தில் விலங்குப் பண்ணை குடியரசாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் நெப்போலியன் தலைவரானது. நாட்கள் நகர நகர, எல்லா விலங்குகளுக்கும் வயதாகிவிட்டது; பண்ணை செழித்து விட்டது; ஆனாலும் விலங்குகளுக்கு மட்டும் எந்த வசதியும் இல்லை-பன்றிகள் தவிர! பன்றிகள் இரண்டு கால்களில் நடக்கின்றன; எல்லா பன்றிகளிடமும் சவுக்கு இருந்தது. ஒருநாள் விலங்குப்பண்ணையில் பக்கத்துப் பண்ணையாளர்களுக்கு இரவு விருந்து நடக்கிறது; பன்றிகள் மது அருந்தி, சீட்டு விளையாடி களித்துக்கொண்டிருந்தன. மற்ற விலங்குகள் இதை ஒளிந்து நின்று பார்க்கின்றன.

ஆசிரியர் சுவைபடச் சொல்கிறார்: "வெளியில் இருந்த விலங்குகள் பன்றியின் முகத்தை பார்த்துவிட்டு மனிதனின் முகத்தைப் பார்த்தன. மறுபடியும் மனிதனின் முகத்திலிருந்து பன்றியின் முகத்தைப் பார்த்தன; திரும்பவும் பன்றியின் முகத்திலிருந்து மனிதனின் முகம்; உண்மையில், எது எதனுடைய முகம் என்று சொல்ல முடியவில்லை."

உண்மையில் மிக அற்புதமாக, கம்யூனிச ஆட்சியின், சர்வாதிகார வர்க்கத்தின் தன்மையும், எந்த ஆட்சி வந்தாலும் பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற உண்மைமையை சுவையாக சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சியை விளக்கி உண்மைப் பொருள் தெளிவாகத் தெரியும்படி தமிழில் வழங்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

May 23, 2013

நல்ல புத்தகம்: எஸ்.ரா-வின் பார்வையில்

சமீபத்தில் ஒரு புத்தகத்தின் மையப் பகுதியில் வெளிவந்திருந்த புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு - எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் பார்வையில்...


"நல்ல புத்தகம் என்பது சக மனிதன் மீதான அன்பும் உலகின் மீதான தீராத அக்கறையும் கொண்டிருக்கும். உண்மையை சொல்வதில் பாசாங்கு செய்யாது. மனதின் அந்தரங்கத்தில் சென்று, சந்தோஷமும் துயரமும் கொள்ளச் செய்யும். தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உலகை மேம்படுத்தவும் உதவி செய்யும். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாது. மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாக அமையும்." 

எழுத்தாளர் எஸ்.ரா-வின் வலைப்பக்கம்: http://www.sramakrishnan.com/

May 16, 2013

Learn Library Science!

சென்னைப் பல்கலைக் கழக "நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை" இந்தியாவில் உள்ள சில முக்கிய துறைகளுள் நீண்ட காலமாக கல்விச் சேவை அளித்து வரும் துறைகளுள் ஒன்று. இது, 1931-ஆம் ஆண்டு "இந்திய நூலகவியலின் தந்தை" என்று போற்றப்படும் "முனைவர். S. R. ரங்கநாதன்" அவர்களால் நிறுவப்பட்டது. இத்துறை வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நூலகவியல் கல்வியை அளித்து வருகிறது. தற்பொழுது முதுநிலை அறிவியல் பட்டமேற் படிப்பாக "முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்" [M.Sc., Library and Information Science] என்ற பட்டமேற் படிப்பை வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக வலைதளத்தைப் பயன்படுத்தி பயன்பெறவும். 

வாழ்த்துகளுடன்,
தமிழச்சி சிவா M.Sc.,[LIS].,