Mar 26, 2014

சென்னையின் சின்னம் - 'மூர்'!

1985...
மே மாதத்தின் 30-வது நாள்,...

நிலவொளியின் ஆழ்ந்த அமைதியில் நகரமே உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில், நகரின் முக்கிய சந்திப்பில் இருந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடம் பெரிய சத்தத்துடன் வெடித்து எரிந்தது. அக்காலகட்டத்தில், புதிய புதிய நாகரிகங்களை மிக வேகமாக உள்வாங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகருக்கு இந்நிகழ்வு மிகப்பெரும் வியப்பாக அமைந்தது.

ஆம்! அக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் பக்கமிருந்த ‘மூர் அங்காடிக் கட்டிடம்’ தான். நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய அக்கட்டிடத்தை நெருப்பின் நாக்குகள் ருசிபார்த்தன. காலையில் கட்டிடம் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்தது. அதனுடைய மேற்கூரைகள் முழுதும் எரிந்து கீழே விழுந்திருந்தது. அதனுடைய தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி முழுக்கச் சேதமடைந்து, பயனற்றிருந்தது. பின்னாட்களில் அந்த விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டதென அறிவிப்பு செய்தார்கள்.

இப்படி ஒரு கோர முடிவிற்கு தள்ளப்பட்டிருந்தாலும், இந்த மூர் அங்காடிக்கென தனி ஒரு அங்கீகாரம் சென்னை மக்களிடமிருந்தது. மூர் அங்காடிக் கட்டிடம் தனக்கென ஒரு பழமையான வரலாற்றை தாங்கிக் கொண்டு, அமைதியாக தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. இது எரிந்து முடிந்த பின்னும் உபயோகப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

சென்னையின் உருவாக்க வரலாற்றில் பல பெரிய கட்டிடங்கள் பங்கு வகித்துள்ளன. அவற்றுள் இந்த மூர் அங்காடிக் கட்டிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில், தினமும் பல நூறு மக்கள் வந்து போகும் ‘The People’s Park’-இன் ஒரு பகுதியில் (இப்போதைய சென்ட்ரல் இரயில் நிலையச் சந்திப்பு) அமைந்திருந்த இந்த ‘மூர் மார்கெட்’ (Moore Market) எனப்படும் ‘மூர் அங்காடிக் கட்டிடம்’, (Moore Market Complex) 1898-இல் அன்றைய சென்னை மாகாணத் தலைவராக இருந்த ‘சர் ஜார்ஜ் மாண்டோமேர் ஜான் மூர்’  (Sir George Montgomerie John Moore) என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

சர் ஜார்ஜ் மூர்-இன் ஆலோசனைப்படி, இக்கட்டிடம் இந்திய-ஐரோப்பிய (Indo-Saracenic Style or Neo-Mughal Style) பாணியில் கட்டப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு, நாற்கோண வடிவில் பல கடைகள் சூழ அமைந்திருக்குமாறு R.E.எல்லீஸ் என்பவரால் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. பின் A.சுப்ரமணிய ஐயர் என்பவரால் 1900-இல் கட்டிமுடிக்கப் பட்டது.

சென்னை பிராட்வே-யில் (இப்போதைய பிரகாசம் சாலை) இருந்த பழைய ‘போப்பம் அங்காடி’ (Popham’s Market) அழிக்கப்பட்டு அவ்விடத்தில் லியோன் பூங்கா (the then Leone’s Park, now SriRamulu Park) அமைத்தபின்னர், அங்கிருந்த கடைகளையெல்லாம் வேறு இடத்தில் அமைக்கும் திட்டத்துடன் இந்த ‘மூர் மார்கெட்’ கட்டப்பட்டது. அக்காலத்தில் மிக நவீன அங்காடியாகக் கருதப்பட்ட இக்கட்டிட வளாகத்தில் கறிகாய்கள், பூக்கள், இறைச்சி இவற்றுக்கென தனித்தனி பிரிவுகள் வைக்கப்பட்டிருந்தது. இவைதவிர கிராமபோன், புத்தகங்கள், பொம்மைகள், துணிகள், பழம்பொருட்கள், செல்லப் பிராணிகள் போன்றவற்றை விற்கவும் இங்கே கடைகள் அமைக்கப்பட்டன.

1940-களில் மூர் அங்காடிக் கட்டிடம் அதனுடைய கட்டிட அமைப்பினால், சென்னை மாகாண மக்களுக்கு ஒரு சுற்றுலா தளம் போல அமைந்திருந்தது. சுமார் 800 கடைகளைக் கொண்டிருந்த மூர் கட்டிட வளாகத்தின் நாற்சதுர கட்டமைப்பு அதன் உள்வட்டத்தில் கடைகளையும், அகன்ற பாதையையும் கொண்டிருந்தது. அதுபோலவே, அதனுடைய வெளிப்புற பாதையும் ஆசுவாசமாக அமர்ந்து பேசவும், உணவுண்ணவும் ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, மக்களின் வரத்தும், விற்பனை எண்ணிக்கையும் வளமாகவே இருந்து வந்துள்ளது.
1985-இல் நடந்த தீ விபத்திற்கு பின்னர், இக்கட்டிடம் இருந்த பகுதியில் சென்னை புறநகர் இரயில் நிலையம் கட்டப்பட்டது. ‘மூர் மார்கெட்’ கட்டிடத்தின் எஞ்சிய வடக்குப் பகுதிகளிலும், அதன் அருகேயிருந்த அல்லிக்குளம் பகுதியைச் (Lilly Pond) சுற்றியும் விற்பனையாளர்கள் தற்காலிகமாக கடைகளை அமைத்துக் கொண்டார்கள். இவற்றில் பெரும்பான்மையாக புத்தகக் கடைகளே இருந்தன. விற்பனையாளர்கள் விபத்தில் எஞ்சிய பொருட்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்யத் தலைப்பட்டனர். அப்போதிருந்து எந்த வகைப் பொருட்களையும் (குறிப்பாக புத்தகங்கள்) மிகக் குறைந்த விலையில் வாங்க மக்கள் மூர் அங்காடியையே நாடினர்.

இவ்வாறாக சென்னையின் தொன்மையான சின்னமாக இந்த மூர் அங்காடி விளங்கியது. பல்லாயிரக் கணக்கான வணிகர்களையும், பொது மக்களையும், புத்தகங்களையும், பறவை-விலங்குகளையும் பார்த்த இந்த மூர் கட்டிடம், இப்போது நாம் பார்த்து வியக்கும்படியான தோற்றத்துடன் காணப்படாவிட்டாலும், அது இத்தனை ஆண்டுகால முதிர்ச்சியையும், அனுபவங்களையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டு, சென்னையின் மாறுதல்களையும், பலதரப்பட்ட மக்களையும் உடைந்த தன்னுடைய கரங்களை நீட்டி அவ்வப்போது வரவேற்றுக் கொண்டுதானிருக்கிறது.

இப்படி ஒரு மனிதத்துவம் வாய்ந்த கட்டிடம் இனி சென்னையில் சாத்தியமா?

Mar 23, 2014

இலக்கியக் கரடிகள்!?!

முதலில் இந்த தலைப்பில் எழுதுவதைப் பற்றி யோசித்தபோது நான் எனக்கு சிரிப்பாக இருந்தது. இருப்பினும் என்னுடைய பால்யகால சகாக்களான Paddington மற்றும் Winnie-the-Pooh இவர்களைப் பற்றி எழுதுவது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

குழந்தைகள் இலக்கியத்தில் சிறந்த மற்றும் எல்லாருக்கும் பிடித்தமான ஒரு கற்பனை பாத்திரப்படைப்பு கரடி உருவமுடைய கற்பனைப் பாத்திரங்களே என்று சில இணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன! ஏன் நாம் இந்தக் கரடி குட்டிகளின் மேல் இவ்வளவு பிரியம் காட்டுகிறோம் என்பது தெரியவில்லை,... ஆனால் அவை நாம் நேசிக்கும்படியாகத் தான் எப்போதும் இருக்கின்றன! சந்தைகளில் பரவலாக விற்கப்படும் ‘டெட்டி பேர்’ (Teddy Bear) எனப்படும்  கரடி பொம்மைகளின் தாக்கமாக இருக்கலாம்; அல்லது இந்த கரடி கதாபாத்திரங்கள் நம்மைப் போல இரண்டு கால்களில் நிற்பதனால் நம்மைக் கவர்ந்திருக்கலாம்; அல்லது அவை தேனைத் தேடி எடுக்கவும், ‘மர்மலாட்’-ஐ சுவைக்கவும் செய்யும் சூட்டிகையான செயல்களால் நாம் கவரப்பட்டிருக்கலாம்! அது எவ்வாறாயினும், இந்தக் கரடி பாத்திரப் படைப்புகள் குழந்தைப் பருவம் முதலே நம்முடைய வாழ்வியலில் ஓர் இடத்தைப் பிடித்துவிட்டன.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செல்டிக் மற்றும் வட ஐரோப்பிய கதைகள், மற்றும் அமெரிக்க பூர்வீகக் கதைகளில் இந்தக் கரடிகள் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்றன. பின் ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் இக்கரடி கதாபாத்திரங்கள் இப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப் பட்டன. மேலும், கிரேக்கக் கதை சொல்லியான ஈசாப் தனது நீதிக்கதைகளில் கரடிகளை வளைய வரவிட்டார். ஆனால், இதற்குப் பின் வெளிவந்த குழந்தை இலக்கியங்களில் எல்லாம் கரடிகள், மற்ற விலங்குகளான நாய், பூனை, நரி, குதிரை போலல்லாமல், கதையின் முக்கிய பாத்திரங்களாகவே காட்சிப் படுத்தப்பட்டன.

19-ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், சர் சார்லஸ் G.D.ராபர்ட்ஸ் வடக்கு கனாடா காட்டுப்பகுதியில் வசிக்கும் காட்டு விலங்குகளை மையப்படுத்தி தான் எழுதிய விலங்குக் கதையில், கரடிகளை தத்ரூபமாக சித்தரித்திருந்தார். அதே நேரத்தில் ரட்யாட் கிப்ளிங், அவரது பேசும் விலங்கான, இந்தியக் காடுகளில் வாழும் “பாலூ” [Baloo] கரடியை ‘மவ்க்லீ’ பையனுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 
இதன் பின்னர், இருபதாம் நூற்றாண்டுகளில், கரடிகள் காடுகளில் வாழும் பாத்திரங்களாக, அல்லது ‘டெட்டி’ எனப்படும் பொம்மைக் கரடிகளாக மட்டும் இல்லாமல், நகரங்களில் வாழும் நாகரிகக் கரடிகளாக நம்முடைய குழந்தைகள் இலக்கியங்களில் வெளிவரலாயின. இக்காலகட்டத்தில் தான், உலகப் புகழ் பெற்ற பாடிங்டன் கரடி [Paddington Bear], வின்னீ கரடி [Winnie-the-Pooh Bear], காடுராய் கரடி [Corduroy Bear], அட்டோ கரடி [Otto-the Book Bear], யோகி கரடி [Yogi Bear], டப்பி கரடி [Tubby Bear], ரூபர்ட் கரடி [Rupert Bear], பூ-பூ கரடி [Boo-Boo Bear], லிட்டில் ஜான் கரடி [Little John],கோ-டா மற்றும் கேனாய் கரடி [Ko-da&Kenai] போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டன. உண்மையில் அவை ஒரு புதிய இலக்கிய ரசனையை குழந்தைகளிடத்தே உருவாக்கி, அவர்களுடைய அன்பிற்குரிய கதைப்பாத்திரங்களாகின.

பின்னாட்களில் குழந்தைகள் இலக்கியத்தில், இந்த கரடிகள் அவைகளுடைய விலங்குத் தன்மையையும் மீறி, குழந்தைகள் அவற்றை எளிதில் தொடர்பு கொள்ள ஏதுவாக, உண்மையான மனிதர்களைப் போன்றே செயல்பாடுகளைக் கொண்ட கதாபாத்திரங்களாக, அற்புதமான கதைப் பின்னணியில் காட்சிப்படுத்தப்பட்டன.

இப்படியாக, கரடிகள் நம் குழந்தைப் பருவத்தினுள் நுழைந்து, வெவ்வேறு பெயர்கள் கொண்டு, நாம் வளர வளர, நம்முடனே அவையும் வளர்ந்து வருகின்றன. ஒவ்வொரு குழந்தையும் நம்மைப் போலவே கரடி கதைகள் கேட்டும், படித்தும், அவைகளுடன் விளையாடியும் முடித்து, மீண்டும் அவற்றை அடுத்த புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். உலகம் முழுவதிலும் இப்போதும் கூட பெரியவர்களானாலும், சிறியவர்களானாலும் அவர்களுடைய குழந்தை இலக்கிய கதாபாத்திரத்திரத்தில் சிறந்ததாக இக்கரடிகளைத் தான் பெருமளவில் கூறுவார்கள்.
ஒரு காட்டு விலங்கு, தன் மரபுகளைக் கடந்து, மனிதர்களாகிய நமது வாழ்வெல்லைக்குள் நுழைந்து, நம்மை சிரிக்க வைக்கவும், நம்முடன் பேசவும், நம்முடன் நண்பர்களாக இருக்கவும் தலைப்படுவது என்பது விசித்திரமான நிகழ்வு தான்! கற்பனையானாலும் சுவாரசியமாக இருக்கிறது! இன்னமும் என்னுடைய Paddington Bear–ம், Winnie-the-Pooh Bear-ம் குழந்தைக் காலம்தொட்டே என்னுடன் இருப்பதை   எண்ணி நான் மகிழ்கிறேன்!

இனி வரும் காலங்களிலும், நம்முள்ளிருக்கும் குழந்தைமையை காத்துக்கொள்ள இந்தக் இலக்கியக் கரடிகள் நமக்கு துணைபுரியும்!

Mar 20, 2014

உலக கதை-சொல்லல் தினம்!

இன்று, ‘உலக கதை-சொல்லல் தினம்!’ [மார்ச்சு 20, World Story-Telling Day!]

'கதை சொல்லல்' கலையின் கதை
இன்றைய சூழலில் கதைகள் நாம் சார்ந்த சமூகம் மற்றும் நமது பண்பாட்டின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கின்றன. புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, மதங்கள், ஓவியங்கள், என நாம் பெயரிட்டுள்ள அனைத்துமே “கதை சொல்லல்” என்னும் கலையின் ஓர் அம்சமாக வளர்ந்தவையே! நமது மதிப்பீடுகள், ஆசைகள், கனவுகள் இவற்றையெல்லாம் அடிப்படையில் கொண்ட இந்த ‘கதை சொல்லல்’ கலை, வழிவழியாக நம் முன்னோர்கள் சொன்ன வாய்வழி கதைகளே! காலங்கள் பல கடந்தும், தலைமுறைகள் பல கடந்தும், இன்றும் நம் பண்பாட்டின் ஒரு அங்கமாக நம்முடனே வந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் ‘கதை சொல்லல்’ கலை அல்லது வழக்கத்தின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது? முதல் கதை யார், யாருக்குச் சொன்னது? –என்பவை எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை, ‘அனிமேஷன்’ படங்களில் வருபவைப் போல, ஒரு வயதான காட்டுவாசி இருண்ட குகையின் நடுவில் குளிர்காய மூட்டப்பட்டத் தீயைச் சுற்றியமர்ந்திருக்கும் மக்களுக்கு, கதைச் சொல்வது போல் நிகழ்ந்த ஒன்றாக இருக்குமோ! இருக்கலாம், நமக்குத் தெரியவில்லை!

ஆனால், இந்த ‘கதை சொல்லல்’ வழக்கம், அக்காலத்தில் நிகழ்ந்த தோல்வியின் காரணங்களை விளக்குவதன் பொருட்டுத் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது அச்சப்படும் நேரத்தில் பிறரை அமைதி படுத்தவோ, சந்தேகங்களைத் தீர்க்கவோ பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உத்தியாக இருக்கலாம்.

பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த வீரச்செயல்கள் மற்றும் மற்றைய செய்திகளைச் சுவைபட கூறும் திறன் படைத்தவரை மிக உயரிய மரியாதை அளித்து வந்தனர். இவர்கள் கூறும் கதைகளை மக்கள் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கேட்க விரும்பினர். பூசாரிகள், நீதிபதிகள், மற்றும் ஆட்சியாளர்கள் அப்பழங்குடி மக்களை வழிநடத்த இக்கதை சொல்லல் கலையை திறம்படக் கையாண்டு மிக முக்கியமாகக் கருதி வந்துள்ளனர்.

மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளும் முன், அவன் எதைச் செய்யவும் தனது நினைவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதன் பொருட்டு அவன் ஒரு நல்ல கேட்பாளனாக இருக்க வேண்டியிருந்தது. நல்ல கேட்பாளர்களை உருவாக்கும் பொறுப்பு, நயம்பட கதைச் சொல்பவரை சார்ந்திருந்தது. எனவே, கதை சொல்லிகள் மக்களிடையே பெரும் மரியாதைக்குரியவர்களாக வலம்வந்தனர். நல்ல கதை சொல்லிகள் எப்போதும் தங்களது கதைகளின் வழியாக, பார்வையாளர்களை எளிதில் கவரக்கூடிய திறன் பெற்றிருந்தார்கள்.

இந்த மக்கள் பயணித்த இடங்களுக்கெல்லாம் இக்கதை சொல்லிகள் சொன்ன கதைகளும் கூடவே பயணித்தன. இவ்வாறாக ஒரு இடத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை, அக்கதையைக் கேட்பவரின் வாயிலாக, தூர தேசத்தில் உள்ளவர்களுக்கும் பரவத் தொடங்கின. மீண்டும் அவர்கள் தங்களுடைய வசிப்பிடங்களுக்குத் திரும்பும்போது, தாங்கள் பார்த்த அவ்விடத்தினைப் பற்றிய பல புதிய கதைகளையும் தங்களுடனே கொண்டு வந்தனர்.

உலக கதை சொல்லல் தினம்
இந்த ‘கதை சொல்லல்’ கலையின் வரலாறு, கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன என்பதை  வெளிப்படுத்துகிறது. புராணக் கதைகள், தேவதைக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக்கதைகள், சாகசக் கதைகள், பேய் கதைகள், புனைவுக் கதைகள் என வெவ்வேறு பெயர்களைக் கொண்ட கதைகள், மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, புதுப்புது உருவங்கள் பெற்று மீண்டும் புதுப்புது கதைகளாக உருவாக்கம் பெறுகின்றன.

எவ்வாறாயினும், தலைமுறைகள் கடந்து நிற்கும் இக்கதைகள் நமது முன்னோர்களின் விவேகத்தையும், ‘கதை சொல்லல்’ உத்தியையும் நன்கு பிரதிபலிக்கின்றன. உண்மையில், இந்த ‘கதை சொல்லல்’ கலை மனித குலத்தை விவரிக்கவும், பிணைக்கவும் உதவும் கலை என பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களும், உளவியலாளர்களும் நம்புகின்றனர்.
ஆம்! உற்றுநோக்கின், இவ்வுலகில் வாழும் ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே கதைகளைப் புனையவும், கதை சொல்லிகளாக இருக்கவும் திறன் அமைந்திருக்கிறது.

இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் இந்த ‘கதை-சொல்லல் தினம்’, முதன்முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றியது. சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்ட இந்த தினம், பின்னர் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலமாக 1997-ல், மீண்டும் உயிர்பெற்றது. இக்காலக்கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.  

2001-ல், ‘ஸ்காண்டினேவிய கதை-சொல்லல் இணைய-அமைப்பு’ [Scandinavian storytelling web-network]Ratatosk என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வு குறுகிய காலத்திலேயே ஸ்வீடன் நாட்டிலிருந்து நார்வே, டென்மார்க், பின்லாந்து, மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கு 2003-களில் பரவியது. பின்பு, மிக விரைவிலேயே கனடா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கும் பரவியது.

இன்று இந்நிகழ்வு அகில உலக அளவில் ஒரு தினமாக அங்கீகாரம் பெற்று, ‘உலக கதை சொல்லல் தின’மாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 20-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை மகிழ்ச்சிபடுத்துவர்.

இவ்வாறு வழிவழியாக வந்த ஒரு சாதாரண நிகழ்வு, இன்று உலக அளவில் கொண்டாடப்படும் தினமாக அமைந்ததில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. ஆம்! மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு கதைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிச்சயம் பிரயோகித்திருப்போம். அப்படிப் பார்ப்பின் நாம் ஒவ்வொருவரும் கதை சொல்லிகளே!

இதோ நான் புறப்பட்டுவிட்டேன். இந்த ஊரின் ஏதாவதொரு வீட்டின் திண்ணையில், யாரவது ஒரு பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். இந்த இரவில், பக்கத்துத் தெருவில் தாய் ஒருத்தி தன் குழந்தையைத் தூங்க வைக்க கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். நான் போகும் வழியில் யாராவது அக்காக்களோ, அண்ணாக்களோ தங்களது தம்பி தங்கைகளுக்குச் சோறு ஊட்ட கதை சொல்லிக் கொண்டிருக்கலாம். இவர்கள் சொல்லும் எந்த கதையையும் நான் கேட்க தயார். நீங்கள் எப்படி!

“கதை-சொல்லல் தின வாழ்த்துகள்!”

[குறிப்புதவி: www.storytellingday.net/ -இப்பதிவு இவ்வலைத்தளத்தில் உள்ள குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பதியப்பட்டுள்ளது]