Mar 26, 2014

சென்னையின் சின்னம் - 'மூர்'!

1985...
மே மாதத்தின் 30-வது நாள்,...

நிலவொளியின் ஆழ்ந்த அமைதியில் நகரமே உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவில், நகரின் முக்கிய சந்திப்பில் இருந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடம் பெரிய சத்தத்துடன் வெடித்து எரிந்தது. அக்காலகட்டத்தில், புதிய புதிய நாகரிகங்களை மிக வேகமாக உள்வாங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகருக்கு இந்நிகழ்வு மிகப்பெரும் வியப்பாக அமைந்தது.

ஆம்! அக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் பக்கமிருந்த ‘மூர் அங்காடிக் கட்டிடம்’ தான். நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய அக்கட்டிடத்தை நெருப்பின் நாக்குகள் ருசிபார்த்தன. காலையில் கட்டிடம் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்தது. அதனுடைய மேற்கூரைகள் முழுதும் எரிந்து கீழே விழுந்திருந்தது. அதனுடைய தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி முழுக்கச் சேதமடைந்து, பயனற்றிருந்தது. பின்னாட்களில் அந்த விபத்து மின் கசிவின் காரணமாக ஏற்பட்டதென அறிவிப்பு செய்தார்கள்.

இப்படி ஒரு கோர முடிவிற்கு தள்ளப்பட்டிருந்தாலும், இந்த மூர் அங்காடிக்கென தனி ஒரு அங்கீகாரம் சென்னை மக்களிடமிருந்தது. மூர் அங்காடிக் கட்டிடம் தனக்கென ஒரு பழமையான வரலாற்றை தாங்கிக் கொண்டு, அமைதியாக தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. இது எரிந்து முடிந்த பின்னும் உபயோகப்பட்டுக் கொண்டுதானிருந்தது.

சென்னையின் உருவாக்க வரலாற்றில் பல பெரிய கட்டிடங்கள் பங்கு வகித்துள்ளன. அவற்றுள் இந்த மூர் அங்காடிக் கட்டிடமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில், தினமும் பல நூறு மக்கள் வந்து போகும் ‘The People’s Park’-இன் ஒரு பகுதியில் (இப்போதைய சென்ட்ரல் இரயில் நிலையச் சந்திப்பு) அமைந்திருந்த இந்த ‘மூர் மார்கெட்’ (Moore Market) எனப்படும் ‘மூர் அங்காடிக் கட்டிடம்’, (Moore Market Complex) 1898-இல் அன்றைய சென்னை மாகாணத் தலைவராக இருந்த ‘சர் ஜார்ஜ் மாண்டோமேர் ஜான் மூர்’  (Sir George Montgomerie John Moore) என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

சர் ஜார்ஜ் மூர்-இன் ஆலோசனைப்படி, இக்கட்டிடம் இந்திய-ஐரோப்பிய (Indo-Saracenic Style or Neo-Mughal Style) பாணியில் கட்டப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டு, நாற்கோண வடிவில் பல கடைகள் சூழ அமைந்திருக்குமாறு R.E.எல்லீஸ் என்பவரால் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. பின் A.சுப்ரமணிய ஐயர் என்பவரால் 1900-இல் கட்டிமுடிக்கப் பட்டது.

சென்னை பிராட்வே-யில் (இப்போதைய பிரகாசம் சாலை) இருந்த பழைய ‘போப்பம் அங்காடி’ (Popham’s Market) அழிக்கப்பட்டு அவ்விடத்தில் லியோன் பூங்கா (the then Leone’s Park, now SriRamulu Park) அமைத்தபின்னர், அங்கிருந்த கடைகளையெல்லாம் வேறு இடத்தில் அமைக்கும் திட்டத்துடன் இந்த ‘மூர் மார்கெட்’ கட்டப்பட்டது. அக்காலத்தில் மிக நவீன அங்காடியாகக் கருதப்பட்ட இக்கட்டிட வளாகத்தில் கறிகாய்கள், பூக்கள், இறைச்சி இவற்றுக்கென தனித்தனி பிரிவுகள் வைக்கப்பட்டிருந்தது. இவைதவிர கிராமபோன், புத்தகங்கள், பொம்மைகள், துணிகள், பழம்பொருட்கள், செல்லப் பிராணிகள் போன்றவற்றை விற்கவும் இங்கே கடைகள் அமைக்கப்பட்டன.

1940-களில் மூர் அங்காடிக் கட்டிடம் அதனுடைய கட்டிட அமைப்பினால், சென்னை மாகாண மக்களுக்கு ஒரு சுற்றுலா தளம் போல அமைந்திருந்தது. சுமார் 800 கடைகளைக் கொண்டிருந்த மூர் கட்டிட வளாகத்தின் நாற்சதுர கட்டமைப்பு அதன் உள்வட்டத்தில் கடைகளையும், அகன்ற பாதையையும் கொண்டிருந்தது. அதுபோலவே, அதனுடைய வெளிப்புற பாதையும் ஆசுவாசமாக அமர்ந்து பேசவும், உணவுண்ணவும் ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, மக்களின் வரத்தும், விற்பனை எண்ணிக்கையும் வளமாகவே இருந்து வந்துள்ளது.
1985-இல் நடந்த தீ விபத்திற்கு பின்னர், இக்கட்டிடம் இருந்த பகுதியில் சென்னை புறநகர் இரயில் நிலையம் கட்டப்பட்டது. ‘மூர் மார்கெட்’ கட்டிடத்தின் எஞ்சிய வடக்குப் பகுதிகளிலும், அதன் அருகேயிருந்த அல்லிக்குளம் பகுதியைச் (Lilly Pond) சுற்றியும் விற்பனையாளர்கள் தற்காலிகமாக கடைகளை அமைத்துக் கொண்டார்கள். இவற்றில் பெரும்பான்மையாக புத்தகக் கடைகளே இருந்தன. விற்பனையாளர்கள் விபத்தில் எஞ்சிய பொருட்களை சொற்ப விலைக்கு விற்பனை செய்யத் தலைப்பட்டனர். அப்போதிருந்து எந்த வகைப் பொருட்களையும் (குறிப்பாக புத்தகங்கள்) மிகக் குறைந்த விலையில் வாங்க மக்கள் மூர் அங்காடியையே நாடினர்.

இவ்வாறாக சென்னையின் தொன்மையான சின்னமாக இந்த மூர் அங்காடி விளங்கியது. பல்லாயிரக் கணக்கான வணிகர்களையும், பொது மக்களையும், புத்தகங்களையும், பறவை-விலங்குகளையும் பார்த்த இந்த மூர் கட்டிடம், இப்போது நாம் பார்த்து வியக்கும்படியான தோற்றத்துடன் காணப்படாவிட்டாலும், அது இத்தனை ஆண்டுகால முதிர்ச்சியையும், அனுபவங்களையும் அமைதியாக உள்வாங்கிக் கொண்டு, சென்னையின் மாறுதல்களையும், பலதரப்பட்ட மக்களையும் உடைந்த தன்னுடைய கரங்களை நீட்டி அவ்வப்போது வரவேற்றுக் கொண்டுதானிருக்கிறது.

இப்படி ஒரு மனிதத்துவம் வாய்ந்த கட்டிடம் இனி சென்னையில் சாத்தியமா?

0 comments: