Feb 7, 2024

பூம்...பூம்...! போலாம் ரைட்!

 

    வணக்கம் மக்களே! இந்த blog- நாம பாக்க போறது தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் வரலாறு தான். சரி வாங்க போவோம்! போலாம் ரைட்!!

 

    அந்த கால சினிமாக்களில் பேருந்துகளை பார்த்திருப்போம். சிறிய அளவிலான ஒரு வண்டி. அதில் பயணிக்க வேண்டுமானால் கியூ-வில் நின்று காத்திருக்க வேண்டும். பூம்... பூம்... என அதன் ஹாரன் சத்தம் கேட்ட உடனே எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்

 

    ஆனால் ஒருபோதும் அந்த பேருந்துகள் எங்கிருந்து வருகின்றன... எப்படி உருவாகின்றன என எப்போதாவது எண்ணி இருப்போமா? அதனை இப்போது இந்தியா சுதந்திரத்துக்கு முன், சுதந்திரத்துக்குப் பின் என பார்ப்போம்!

 

    1911-இல் திருக்குறுங்குடி வெங்கரம் சுந்தரம் ஐயங்கார் எனும் TVS ஐயங்கார் அவர்கள் பயணிகள் பேருந்து கம்பெனி தொடங்க பதிவு செய்து 1912-இல் தென் தமிழகத்தில் முதல் பயணிகள் பேருந்தை இயக்கினார். இந்த பேருந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. பின்னர், 1939-இல், மோட்டார் வாகன ஒழுங்கு சட்டம் ஒன்று ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்டது

 


    1944-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் போக்குவரத்தின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை நியமித்தது. அக்குழு பெரும்பாலான தனியார் போக்குவரத்து கம்பெனிகள் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு பொது மக்களைப் புறக்கணிப்பதைக் கண்டறிந்து 1946-இல் தனது அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பியது. நாடு சுதந்திரம் அடைந்து குறுகிய காலத்திலேயே பயணிகள் போக்குவரத்துக் கொள்கை தேசியமயமாக்கப் பட்டது.

 

    1947-இல் மதராஸ் ராஜதானியின் உத்தரவின்படி சென்னை நகரின் அனைத்து பேருந்து சேவைகளும் அரசுடைமை ஆக்கப்பட்டு, அரசு பேருந்து சேவை (Government Bus Service) என 1948-இல் பெயரிடப்பட்டு பின்னர், மாநில போக்குவரத்து துறை (State Transport Department) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது..

 


    1947-இல் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து சேவையை தேசியமயமாக்கும் கொள்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 1967-இல் வந்த தமிழக அரசாங்கம் மேலும் இயக்க அனுமதியை நீட்டிக்காமல் சென்னை நகரில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் தேசியமயமாக்கியது. அப்போதைய மாநில முதல்வர் திரு.அண்ணாதுரை அவர்களால் 1969-இல் மெட்ராஸ் மாநிலம் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றப்பட்டது. எனவேமாநிலப் போக்குவரத்துத் துறை’ ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைஎனப் பெயர் மாற்றப்பட்டது.

 

    தமிழ்நாடு அரசு 1971-இல் ஒரு ஆணையை பிறப்பித்தது. அதன்படி, சென்னை மற்றும் செங்கல்பட்டில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை வாகனங்கள் நிர்வாகம் நிறுவனங்கள் சட்டம் 1956-இன் கீழ் கொண்டு வரப்பட்டு, 1972-இல் "பல்லவன் போக்குவரத்துக் கழகம்" எனப் பெயரிடப்பட்டது.

 

    பல்லவனுக்குப் பிறகு முழுமையாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் என பெயரிடப்பட்டு மக்கள் சேவைக்காக இன்று சாலைகளை ஆக்கிரமித்து ஓடிக் கொண்டிருக்கின்றன இந்த பேருந்துகள்

    சரி வாங்க! நாமளும் ஒரு டிக்கெட் வாங்கி பை பை சொல்லிக்கலாம்! போலாம் ரய்ய்ய்....! பூம்...பூம்...!