Dec 10, 2013

"ரௌத்ரம் பழகு!"

இன்று பாரதியின் பிறந்தநாள். எனக்குப் ‘பெயர் கொண்ட’ திருநாள்! அவர் பெயர் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! அப்பா-வுக்கு நன்றிகள்! நல்ல ஒரு தொடக்கமாக என் அறையில் மாட்டியிருந்த மாக்கவியின் நூற்றாண்டு விழா நிழற்படத்தைப் பார்த்து மனதில் வணங்கிவிட்டு அறைக்கதவைத் திறந்தேன். அப்பா வந்து வாழ்த்தினார். அப்பா-வின் நண்பரும் குருவுமானவர் ‘நல்லதோர் வீணை செய்தே’ அலைபேசினார்.

மகிழ்ச்சியுடன் முன் கூடத்திற்குச் செல்ல முனைந்தபோது எதிர்வீட்டிலிருந்து 'பெரிய நட்சத்திரத்தின்' ரசிகர் கூட்டமொன்று காதுகளை விழுங்குவது போன்ற சத்தத்துடன் 'மாசி மாசம் ஆளான பொண்ணை' ரசித்துக் கொண்டிருந்தது. மொத்தக் குடியிருப்புக்கும் பொதுவாக இந்த இலவசச் சேவையை அவர்கள் வீட்டு ஒலிபெருக்கி வழங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய இந்த நாள் இப்படித் தொடங்குவதை நான் விரும்பவில்லை.  யாரோ, என் காதுகளுக்கருகே வந்து “ரௌத்ரம் பழகு” என மெதுவாகச் சொல்வது போல ஒரு உணர்வு. பெயர் கொண்ட திருநாள்!

வீட்டுக் கதவை மூடி ‘அன்பென்று கொட்ட’ நினைத்தேன். கனத்தக் கதவுகளைத் துளைத்துக் கொண்டு அந்த மாசி மாசப் பொண்ணும், அடுத்து ‘தேவுடா’-வும் என்னைத் தேடி வந்துகொண்டிருந்தனர்.

உண்மையில் 'நெஞ்சு பொறுக்குதில்லை’ கவிஞரே! இயலாமை வாட்டுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி மீண்டும் அறைக்குள் சென்று என்னுடைய ‘கேட்பொறி’-யைத் தேடி எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு பாரதி-யிடம் ‘மனதில் உறுதி வேண்டிக்' கொண்டிருக்கிறேன்!

"சொல்லடி சிவசக்தி" - நான் என்ன செய்ய வேண்டும்?
நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!

Sep 22, 2013

அனிதா என்றொரு சின்னஞ்சிறுமி!

மிக நீண்ட காலத்திற்குப் பின், அந்த தேவாலய வளாகத்தின் உள் நுழைந்து, வெகு நேரம் நடந்து கொண்டிருந்தேன். உச்சிப் பொழுது சுள்ளென சுட்டது. கால்களில் வலி உணர்ந்து ஒரு மாமரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டேன். அதன் எதிரே பரந்த மரங்கள் சூழ்ந்த மணற்பரப்பு; தூரத்தில் சில கட்டடங்கள்; இடப்புறத்தில் தேவாலயமும், அதை ஒட்டி பாதிரிகள் தங்கும் விடுதியும் இருந்தது. பல ஆண்டுகளாகியும் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை. இதே தேவாலய மணற்பரப்பில் தான் நாங்கள் மாலை நேரங்களில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். நான், ரூபி, லில்லியன், மெர்சி, கரோலின்,... அப்புறம் அனிதா...

'அனிதா',... எங்களுடைய உறவினரான Uncle ரே-இன் செல்ல மகள்; சிஜு, கவி அக்காக்களுக்கு இளையவள்; எனக்கு 8 வயது மூத்தவள். Uncle ரே-யின் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பிணைப்பு இருந்தது. எங்களுடைய குடும்பங்களானது கட்டுப்பாடுகள் நிறைந்த கட்டமைப்பைக் கொண்டதாக இருந்தது. இருப்பினும், எல்லா பள்ளி முடிந்த மாலை நேரங்களிலும் நாங்கள் தேவாலயத்தின் மரங்கள் சூழப்பட்ட அந்த மணற்பரப்பில் விளையாடும்படி பெரியவர்களால் விதிக்கப்பட்டிருந்தோம்.
எங்கள் எல்லாரிலும் சூட்டிகையானவள் அனிதா; மாறுபட்டவளும் கூட! அவள் தினமும் தன்னுடைய 'லேடி பேர்டு' சைக்கிளை உருட்டியபடியே தான் தேவாலயத்திற்குள் நுழைவாள். கருப்பு அல்லாத வெளிர் 'ப்ரவுன்' நிறம் கொண்ட கலையான முகம்; முன் இரு பற்கள் கொஞ்சம் பெரிதாய் துருத்தியபடிக்கு எப்போதும் ஒரு புன்னகைத் தங்கி இருக்கும். எல்லா நாட்களிலும் அவள் டி-சர்ட்டும், முழங்கால் வரை நீண்ட ஸ்கர்ட்-ம் அணிவதையே வழக்கமாகக் கொண்டவள்; அதிலும் அடர் நிறங்களைத் தவிர்த்து புள்ளிகளையும், கோடுகளையும் விரும்புபவளாக இருந்தாள். அவளுடைய நடையும், குரலும் எங்களிலிருந்து அவளைத் தனித்து காட்டும்.

உறவின் முறையானாலும் பெரும்பாலும் அவளை ஞாயிறு திருப்பலியின் போதே அருகே சந்திக்க நேரிடும். மற்ற நாட்களில் அவள் தேவாலயத்திற்கு வந்தாலும் எங்களுடன் விளையாடுவது அரிது. அவளுக்குப் பையன்களுடனான இயல்பான நட்புதான் எப்போதும் பிடித்திருந்தது. ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு நாங்கள் மாமரங்களுக்கு கீழே அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரங்களில் அனிதா எங்களுடன் கலந்து கொள்வாள்.
அவள் எங்களெல்லாரையும் விட அதிகம் பேசுபவளாக இருந்தாள். நாங்கள் மாங்காய்களின் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அனிதா நாங்கள் இதுவரை அறிந்திராத, 'மல்பெர்ரி இலை'களைப் பற்றியும், அவற்றை விரும்பி உண்ணும் பட்டுப் புழுக்களைப் பற்றியும் சொல்லுவாள். சில சமயங்களில் தேவாலயத்திற்குப் பின்புறமுள்ள சேரிக் குடியிருப்பிலிருந்து ஏதாவதொரு அழுக்குக் குழந்தையை 'லேடி பேர்ட்'-ல் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். அல்லது தனிமையில் அமர்ந்து தன் சைக்கிளின் பெடல்களைச் சுழற்றிக் கொண்டிருப்பாள். அனிதாவின் இந்த செய்கைகள் எனக்கு கூட்டிலிருந்து விடுபட்ட ஒரு மகிழ்ச்சியான பறவையைப் போன்றதாயிருந்தது.

பின் வந்த சில நாட்களில், எங்கள் குடும்பத்துச் சிறுவர் சிறுமியர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தேவாலயத்திற்குச் சென்று விளையாட வீட்டுப் பெரியவர்கள் தடை விதித்தார்கள். அவர்கள் அனிதாவின் மீது கடுங்கோபத்தில் இருந்தது மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. அதற்குப் பின் ஞாயிறு திருப்பலியின் போது கூட நாங்கள் அவளைப் பார்க்கவில்லை.

அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது ஒருநாள் காலையில் அப்பா என்னையும் கூட்டிக் கொண்டு Uncle ரே-யின் வீட்டுக்குப் போனார். அவருடையது பல அறைகளைக் கொண்ட பகட்டான வீடு. நாங்கள் அங்கே  அனிதாவைப் பார்த்தோம்.  ஆனால், அவள் கூடத்தின் ஒரு மூலையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் வந்ததை கவனித்தும் அவள் 'தூங்கிக் கொண்டிருந்தாள்'. யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அப்பாவும் Uncle ரே-யும் பேசிக் கொண்டிருக்க, நான் மிரள மிரள அவளையே பார்த்தபடி இருந்தேன். Aunty ஐரின் ரே எனக்கு பால் கலந்து வந்தாள். சில நிமிடங்களில் அனிதாவின் அருகிலிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தை அழுதது; அனிதா இருண்ட கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள்; அவள் சிரிக்க மறந்து போயிருந்தாள் போலும். அவள் படுத்தவாறே எதையும், யாரையும் பொருட்படுத்தாமல் அந்தக் குழந்தைக்குப் பசியாற்றி விட்டு மீண்டும் தூங்கிப் போனாள்.

பின் Uncle ரே எனக்கு சிவப்புக் ஜிகினா காகிதத்தில் சுற்றப்பட்ட பெரிய சாக்லெட் ஒன்றைத் தந்தார். நாங்கள் கிளம்ப ஆயத்தமான போது, சிஜு அக்காவின் கணவரான முகிலன் மாமா எனக்கு முன்பே சொன்னபடி 'டான்கிராம்' (Tangram) ஒன்றைப் பரிசளித்தார். அது முட்டை வடிவிலான 'டான்கிராம்'; அது பிரவுன் நிறத்தில் கண்ணாடி போல் பளபளப்பாக இருந்தது.
பின்பு வந்த திசம்பர் மாதத்தின் மத்தியில் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு அனிதா மரித்து போன செய்தியைக் கொண்டு வந்தது. தொடர்ந்து வந்த கிருத்துமஸ் Uncle ரே-யின் வீட்டில் விமரிசையாக நடந்தது. நாங்கள் அங்கு அனிதா-வையும், அவளுடையதும் எங்களுடையதுமான அந்த குட்டி ஜீவனையும் பார்க்கவில்லை.

"அது தொலைந்து போய் விட்டது!" -Aunty ஐரின் ரே எங்களுக்குச் சொன்னாள்.

"ஓ! அது தொலைந்து போய் விட்டது!" -நாங்கள் மீண்டும் சொல்லிக் கொண்டோம்.

நேரம் கடந்து கொண்டே இருக்க ஏதோ உணர்வால் உந்தப்பட்டு எழுந்து வேகவேகமாய் வீடு வந்தேன். எங்கோ பழைய பெட்டியில் அடைபட்டுக் கிடந்த அந்த 'டான்கிராம்', பிரவுன் நிற கண்ணாடி போல் பளபளத்த அந்த 'டான்கிராம்'-ஐத் தேடி எடுத்தேன். என்னுடைய பிரியமான முட்டை வடிவ 'டான்கிராம்' -நிறம் மங்கி, கீறல்கள் விழுந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அதைப் பிரித்துக் கொட்டி, ஒரு மனித சிறுமியின் உருவத்தை வடிவமைக்கப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய முட்டை வடிவ 'டான்கிராம்'-ன் சில துண்டுகள் அப்போது தொலைந்து போய்விட்டிருந்தன.

'சிறுமியின் உருவம் முற்று பெறவில்லை'. Aunty ஐரின் ரே-யின் வார்த்தைகள் காதுகளில் உரக்கக் கேட்டது: "அது தொலைந்து போய் விட்டது!"

"ஓ! அது தொலைந்து போய் விட்டது...!..." -தடுமாறும் வார்த்தைகள் என்னுள்ளில் இருந்து இப்போது வெளிக்குக் கேட்கிறது.

Sep 17, 2013

சியாமா அக்காவும் சிக்கன் பிரட்டலும்!...

அந்த அபார்ட்மெண்ட் வாசலில் கொஞ்சம் கார்களும் பைக்குகளும் விடிந்ததிலிருந்தே நின்று கொண்டிருந்தன. சில பேர் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் சியாமா அக்காவின் வீட்டுக்கு வந்தவர்கள் தான். மொச மொச-வென அங்கும் இங்கும் கூடி நின்று பேசிக்கொண்டார்கள் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள்.

தட் தட் என்று ஷூக்களின் சத்தம் கேட்க சியாமா அக்காவின் மாமா வெளியே வந்து பார்த்தார். கீழ்ப் போர்ஷன் ராஜேஷ் சார் மூச்சு வாங்க பாதி படியேறி நின்று கொண்டு பேசினார்: "எப்போ டிஸ்போஸ் பண்றதா இருக்கீங்க சார்? Freeze பாக்ஸ்-க்கு சொல்லியாச்சா? முடிஞ்ச வரைக்கும் உடனே க்ளியர் பண்ணிடுங்க. ஏன்னா...கொழந்தைங்க அதிகமா இருக்குற எடம் பாருங்க, அதான்." ஐ.டி கம்பெனி ஒன்றில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கும் ராஜேஷ் சாரைப் பற்றி சொல்லணும்னா-இவருக்கு ஒரு நாலு முழ வேட்டிய கட்டிவிட்டு, பட்டையும் கொட்டையும் போட்டு விட்டா, நம்ம உசிலமனியின் ரெண்டாவது சித்தப்பாவின் ஒண்ணு விட்ட பேத்தியின் கடைசி பேரன் போலிருப்பார். குழந்தைகளிடம் கரிசனம் அதிகம்; தன் ஒரே மகளைக் கூட ஆறு மாதத்திலேயே day care-ல் போட்டுவிட்டார்!

"என்னாங்க...நாலு தோசைய விண்டு போட்டுண்டு அந்தண்டை இந்தண்டை பாக்காமெ கீழ எறங்கி போயிருங்கோ. ஆபிஸ் போர நேரத்துல இதெல்லாம் நமக்கெதுக்குன்னா...நன்னாவா இருக்கும்?..." -இது சுவற்றில் காதை வைத்து ஒட்டுக் கேட்கும் எதிர்த்த பிளாட் கல்யாணி மாமி-யின் குரல். 'நீ சொன்னா சரிதாண்டீ'-மாமா சுடச்சுட எண்ணெய் வழியும் கல்தோசையை விண்டவாறே சொன்னார்.
"ஏண்டி, நீ பாத்தியா? உனக்கெதாவது தெரியுமா?" -இரண்டாவது ப்ளாட்டில் குடியிருக்கும் பூர்ணி. "என்னாவோ, என்ன விஷயமோ; அத பத்தி தெரியாதா நமக்கு... ஏதாவது நடந்துருக்கும். அதான் பொசுக்குன்னு இப்படி பண்ணிடுத்து போல" -இது நான்காவது ப்ளாட் இரண்டாவது தளத்தின் மகாலட்சுமி-யின் வாய்மொழி. இதிலென்ன விசேஷம்னா, இவங்க ரெண்டு பேரும் சியாமா அக்காவின் குடும்பத்தினர்  ஒருத்தரிடமும் இங்கு வந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக ஐந்து நிமிடங்கள் கூட பேசினதில்லை.

சியாமா அக்காவின் பெரியம்மா பையனை அபார்ட்மெண்ட் போர்டிகோவில் பார்த்த கோமதி பாட்டி, "என்னடா பாலு, இப்படி ஆயிடுச்சே. பரவாயில்லடா. இன்னைக்கு நல்ல முகூர்த்தம், கார்த்திகை வேற; அதுவும் எந்த ப்ராணாவஸ்தையும் இல்லாமெ இப்படி அக்கடா-ன்னு சுகமா போறதுக்கு குடுத்து வெச்சுருக்கணுமே...எனக்குதான் எப்படி வாய்க்குமோ தெரியல..." என்று தன் பொக்கை வாய் தெரிய சிரித்தபடி பொறாமைப் பட்டாள்.

இதற்கிடையில், பாங்க் மேனேஜர் மாமாவும், இன்ஜினியர் கோபி-யும், சூப்பர்வைசர் சாரும் நீண்ட யோசனைக்குப் பிறகு சியாமா அக்காவின் ப்ளாட்டுக்கு கசங்கிய லுங்கியுடன் அழுக்குச் சட்டையை மாட்டிக்கொண்டு, மறக்காமல் கர்சீப்-ஐ எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வீட்டில் ஒரு ஓரமாக சில நிமிடங்கள் கர்சீப்பால் வாயை மூடிக் கொண்டு நின்று தங்கள் கடமையை செவ்வனே செய்து முடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

திமு திமுவென்று படிகளில் இறங்கி வந்த சியாமா அக்காவின் குண்டு குட்டித் தம்பியைப் பார்த்து சொட்டை சந்துரு uncle நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார்:"என்னடா, உன் ரூட்டு க்ளியரா?..." புரிந்தோ புரியாமலோ அவன் சொல்கிறான், "ஆமா மாமா, வாசனை ஊதுபத்தி வாங்கிட்டு வரப் போறேன். அம்மா காத்திருக்கா" என்று விட்டு கடைக்கு ஓடுகிறான் அவன்.

"கர்த்தாவே, சின்னப் பிள்ளையாச்சே, அதுக்கு மோட்சத்த குடு ஆண்டவரே..."-இது சேரியில் இருந்து விட்டு, பின் ப்ளாட்டுக்குக் குடிவந்த குற்றத்துக்காக எல்லாருக்கும் எதிரியாகிப் போன சுசீலா மேரி ஆன்ட்டி-யின் 5 நொடி அனுதாபம். அவசரமாகக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்த பிருந்தா டீச்சரைப் பார்த்து சொல்லி விட்டு நேற்று இரவு மிகுதியான சிக்கன் பிரட்டலை சூடு படுத்தப் போய்விட்டாள். அவள் பிள்ளைக்கு சிக்கன் இல்லாமல் சோறே இறங்காதாம்; அதில் எப்போதும் அவளுக்குப் பெருமைதான்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்து விட்டது. வந்திருந்த கார்களும், பைக்குகளும் ஒவ்வொன்றாக காணாமல் போயின. மனிதத் தலைகள் அவசரமாக கதவுகளுக்கு உள்ளே இழுத்துகொள்ளப்பட்டன. இவ்வளவையும் எந்தச் சலனமும் இன்றி பார்த்துக் கொண்டு, சிக்கன் பிரட்டலின் வாசனையை முகர்ந்தவாறே ஆம்புலன்ஸில் ஏறினாள் சியாமா அக்கா. நிரந்தரமாய் முகத்தில் ஒரு சிரிப்பு தங்கி நிற்கிறது, சுவரில் மாட்டியிருக்கும் மாலை சூட்டப் பட்ட அவளுடைய போட்டோவில்.

Jun 5, 2013

வாங்க படிக்கலாம்!


இது உண்மையிலேயே என்னை பிரமிக்கச் செய்த ஒரு நிழற்படம். புத்தகங்களும், வாசிக்கும் பழக்கமும் வேகமாக குறைந்து வரும் இன்றையச் சூழலில் இது போன்ற நகரும் குட்டி நூலகங்கள் [mobile library] ஆங்காங்கே அமைத்தல் மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவும். முக்கிய பேருந்து நிலையங்களிலும், மக்கள் பரவலாக கூடும் சந்திப்புகளிலும் இவற்றை அமைக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட, பேருந்திற்கோ, அல்லது யாரையாவது சந்திக்கக் காத்திருக்கும் போதோ, பொழுதைக் கழிக்க ஒரு புத்தகத்தைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் அவர்களுக்கும் வாசிக்கும் பழக்கம் வளர வாய்ப்புகள் உண்டு. சின்ன சிறுகதை தொகுப்புகள், படக்கதைப் புத்தகங்கள், குட்டி கதை நூல்கள் போன்ற குறைந்த நேரத்தில் படித்து முடிக்கக் கூடிய நூல்களை இங்கு பயன்படுத்தலாம்.

ஆவணச் செய்தால் நாடும் வளம் பெறும், நாமும் நலம் பெறுவோம்.

"புத்தகங்களை வாசிப்போம் நேசிப்போம்!"

May 28, 2013

மிக நீண்ட இரயில் பயணமும், கொஞ்சம் மஞ்சள் உலோகமும்,...

இது என்னுடைய 'மிக நீண்ட' ஒரு இரயில் பயணம். வெகு நாட்களுக்குப் பின் நான் மேற்கொள்ளும் மிக நீண்ட ஒரு இரயில் பயணம்; என்னுடைய பெரிய குடும்பத்தின் பெரும்பாலானோரோடு நான் மேற்கொண்டிருக்கும் இனிய ஒரு இரயில் பயணம்... என் அண்ணனின் கடைக் குட்டி மகன் அவ்வப்போது எனக்கு செல்லமாய்த் தொல்லை கொடுத்தாலும் அவனின் குறும்புகளை உடனிருந்து பார்த்து, பேசி, பொய்க்கோபம் காட்டி, அவனை என் கைக்குள் வைத்துக் கூட்டிச் செல்லும் இது,....'மிக நீண்ட' என்னுடைய இரண்டாவது இரயில் பயணம்....

இரயில் சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட எண்ணி, குட்டிப் பையனை அதட்டி உட்கார வைத்துவிட்டு, கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு வாசிக்கப் பிரயத்தனப்பட்டேன்.  குட்டிப் பையன் அடங்கின பாடில்லை. "இது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? Train ஏன் ஆடுது? நான் வெளில போகணுமே!..." என்றெல்லாம் என்னிடம் நொடிக்கொரு கேள்வி கேட்டு அலுத்துப் போயிருந்தான்... இடையிடையே அலைபேசி வேறு சிணுங்கிச் சிணுங்கி தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் புத்தகத்தில் முகம் புதைக்கிறேன்.

கண்கள் வார்த்தைகளினூடும், அவற்றின் எழுத்துகளினூடும் சுற்றிச் சுற்றி சென்று கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான இரயில் சூழலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், மனம் புத்தகத்தின் எழுத்துக்களைக் கொஞ்சம் கையில் அள்ளிச் சிதற விட்டாற்போல் ஆங்காங்கே சிதறிக் கொண்டிருக்கிறது...
இது என்னுடைய மிக நீண்ட ஒரு இரயில் பயணம்... 'மிக நீண்ட'---தூரத்தைக் குறிக்கும் ஒரு அளவைச் சொல். இந்த தூரம் எதனை மையப்படுத்திக் கணக்கிடப்படுகிறது?--இன்ச்-களிலா? செண்டி மீட்டரா? அல்லது கிலோ மீட்டரா?... இல்லை. என்னுடைய இந்த மிக நீண்ட இரயில் பயணத்தை 'மன' அளவை கொண்டு அளந்து கொண்டிருக்கிறேன் நான்!

என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்-அது தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து என் வசிப்பிடமான அதன் தலைநகருக்குப் போவதாக இருந்தது. ஆம்! உண்மையில் அது ஒரு ஆழமான, மனசஞ்சலங்களுடன், மற்றும் குடும்பத்துப் பெரியவர்களுடன் நான் மேற்கொண்ட மிக நீண்ட இரயில் பயணம்!

தூரத்து உறவினர் ஒருவரைச் சந்திக்க வேண்டி அங்கே செல்ல நேர்ந்தது. நலம் விசாரிப்புகள், விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடிந்து கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அலைபேசியில் ஆராய்ந்து கொண்டிருந்தேன், வழக்கம்போலவே! அந்தக் குடும்பத்து மூத்த பெண்ணின் திருமணத்தை நோக்கி அவர்களின் பேசு திரும்பியது. அவள் திருமண வயதைக் கடந்து விட்டிருந்தாள். அதாவது, இப்போது அவள் ஒரு முதிற்கன்னி. என்னுடைய வீட்டுப் பெரியவர்களும் விடாமல் கேள்வி கேட்டுக் குடையவே, அவளுடைய வயது முதிர்ந்த அப்பா மெல்ல குரல் தழுதழுக்கக் கூறினார்: "நெறைய வரன் வந்து தான் போகுது, எதுவும் அமையல; எம்பொண்ணு தங்கம் மாதிரி; விலை ஏறிகிட்டே தான் போகும்; வாங்குவாரில்ல!..." - என்று கூறி முடிக்கும் முன்னரே குரல் தழுதழுத்து விட்டிருந்தது. அறையில் ஆழ்ந்த நிசப்தம். என்னுடைய வேலையிலிருந்து விடுபட்டு அந்தச் சூழலில், அந்தப் பெரியவரின் வார்த்தைகளில் நானும் கரைந்திருந்தேன்...

திருமண வயதைக் கடந்து நிற்கும் ஒரு முதிற்கன்னியின் தந்தை, தன்னுடைய மகளுக்கு வயதேறிக் கொண்டே போவதையும், அவளுக்குத் திருமணம் செய்விக்க முடியாத தன்னுடைய இயலாமையையும் எவ்வளவு சுருக்கமாக தற்குறிப்பேற்றிச் சொல்லிவிட்டார். அனால், அதைச் சொல்லும்போது அவருடைய மனம் எப்படிப் பதைத்திருக்கும்; எப்படி எல்லாம் துடித்திருக்கும்; இனம் புரியாத பயமும், கலவரமும் அடைந்திருந்தது அவருடைய வெளுத்த முகம். காரணம் பிடப்பட்ட அதிக நேரமாகவில்லை எங்களுக்கு.

தங்கம் - வெறுமனே ஒரு உலோகம்; மஞ்சள் நிறம் பூசிய ஒரு உலோகம்; மின்னிடும் தன்மை கொண்ட ஒரு உலோகம்...இப்படி வெறுமனே ஒரு உலோகம் அங்கே ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கருவியாகிவிட்டிருந்தது. பெண்ணுக்குப் பொன் செய்வித்து அழகு பார்க்கும் பண்பாடு மாறி, இப்போது பெண்ணுக்குப் பொன் செய்வித்து 'அளவு' பார்க்கிறார்கள். இங்கே இவளும் அந்த அளவுகோலின் மீது வெகு நாட்களாய் நின்று கொண்டிருக்கிறாள்.... சாதாரணமாக வெளியிலிருந்து பார்த்தால் சின்ன விஷயமாய்த் தெரிந்தாலும், அதை கொஞ்சம் தட்டித் துடைத்து கண்ணுக்கருகில் பிடித்துப் பார்க்கையில் பூதாகரமாகி நிற்கிறது.

அத்தனை நேரமும் அமைதியால் ஆழ்ந்திருந்த எங்களை என் அண்ணனின் குரல் சுயத்திற்குக் கொண்டு வந்தது. "இப்போ என்ன ஆச்சு? நீங்க கல்யாண வேலையத் தொடங்குங்க; தம்பிங்க நாங்க இருக்கோம்; கல்யாணத்த முடிச்சுடலாம்" - என்ற உறுதியான குரல். என் அண்ணன் ஒரு பொறியாளன். இயல்பிலேயே கணக்குப்போடும் பொறியியல் மூளை கொண்டவன். அப்படி ஒன்றும் எங்களுக்கு வசதி இல்லை; நாங்களும் நடுத்தர வர்க்கம் தான். அந்தப் பெரியவரோ எங்களுக்கு தூரத்து சொந்தம் தான்; நெருங்கின தொடர்பில்லை; ஆனால், அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் - முதிற்கன்னியாய் இருக்கிறாள்; அவளுக்குத் திருமணம் செய்வித்தாக வேண்டும்.

அந்தப் பெரியவர் அதிர்ச்சியாகி அண்ணனைப்பார்த்தார். அவர் கண்களில் பல கேள்விகள் குவிந்திருந்தன. நம்ப முடியாத ஒரு வறட்டுப் பார்வை அது. அண்ணனை அவர் பார்த்துக் கொண்டேயிருந்தார். அண்ணனோ சாந்தமான முகத்துடன் அவருடைய கண்களை நோக்கிப் புன்னகைத்தான். அந்தப் பெரியவரின் கண்களில் கண்ணீர் திரண்டு உருண்டது.

- இப்படியாக மனதில் ஆழப் பதிந்த ஒரு நிகழ்வைச் சுமந்தும், அந்தத் துயரத்தினோடும், அந்தப் பெரியவரின் விளக்கத்தினோடும், கொஞ்சம் மஞ்சள் நிற யோசனைகளோடுமாக அமைந்தது என்னுடைய முதல் மிக நீண்ட இரயில் பயணம்!...
இது என்னுடைய இரண்டாவது மிக நீண்ட மறக்கவியலாத இரயில் பயணம்... எங்களின் குட்டி வாண்டுப் பையன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து மீண்டும் எல்லாரையும் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான்; மற்றவர்கள் பேசிக்கொண்டும், எதையோ சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள்; அண்ணி-யின் பாதுகாப்பில், கொஞ்சம் மஞ்சள் உலோகம் - ஒரு முதிற்கன்னியின் திருமணக் கனவுகளைச் சுமந்து, எங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது - அந்தப் பெரியவரின் வீட்டிற்கு; என் அண்ணன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருக்கிறான்...

எங்கிருந்தோ சரேலென்று என் மடியில் விழுந்து, என் கழுத்தைக் கட்டிக் கொண்டு என்னை தன் மழலை மொழியில் கொஞ்சத் தொடங்கிவிட்டான் என் அண்ணனின் கடைக் குட்டி வாண்டுப் பையன்... சிரித்துக் கொண்டே அண்ணனைப் பார்த்தேன்; அவனுடைய முகம் சலனமற்றிருக்கிறது; மன நிறைவு உதட்டின் ஓரத்தில் ஒதுங்கியிருக்கும் சின்னப் புன்னகையில் அப்பட்டமாய்த் தெரிகிறது; குட்டிப் பையனைப் போல் நானும் என் அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றுகிறது... என் மடியிலிருந்த வாண்டுப் பயலை இறுக அணைத்துக் கொண்டேன்...

May 24, 2013

ஜார்ஜ் ஆர்வெல்-ன் விலங்குப் பண்ணை - ஓர் அலசல்!


விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்: பி.வி.ராமஸ்வாமி

1945-ல் வெளியிடப்பட்ட நூல் ஜார்ஜ் ஆர்வெல்-ன் Animal Farm. அக்காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களில் மிக முக்கியமானது இந்த Animal Farm. தற்போது கிழக்கு பதிப்பகத்தார் "விலங்குப் பண்ணை" எனத் தமிழில், பி.வி.ராமஸ்வாமி-யின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள்.
கதைகள் மூலம் மிகப்பெரிய சமூகவியல் மாற்றங்கள், மானுடவியல் மாற்றங்கள், வரலாற்று மாற்றங்கள் எத்தனையோ நிகழ்ந்ததை உலகம் பார்த்திருக்கிறது. அந்த வகையில், உலகின் ஒட்டுமொத்த பார்வையும் வீழ்ந்த ஒரு நிகழ்வை, அந்நிகழ்வின் வீழ்ச்சியை கதை வடிவில் கொடுத்திருக்கிறார் George Orwell. ஆம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மீது சோவியத் ரஷ்யா ஏற்படுத்திய மிகப்பெரும் மாற்றமான ஜார் (Tzar) ஆட்சி ஒழிப்பும், கம்யூனிசக் கொள்கைகளின் வளர்ச்சியும், அதுபோலவே அதன் வீழ்ச்சியுமே தான் ஜார்ஜ்-ன் விலங்குப் பண்ணை-யின் கதைக்களம். ஓர்  உண்மையான நிகழ்வினில், விலங்கினிடத்தில் மனிதனைப் பொருத்திப் பார்த்து கதை சொல்லும் உத்தியின் பயன்பாடு விலங்குப் பண்ணையின் வெற்றிக்குப் பெரும்பங்களித்துள்ளது.

கதையின் தொடக்கத்தில் வரும் 'மேனார்' பண்ணையாளர் ஜோன்ஸ்-ன் பாத்திரப் படைப்பு ஜார் நிக்கோலஸ்-II மன்னனை ஒத்துப் படைக்கப்பட்டுள்ளது. [இப்புத்தகத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாரை, எதை எதைக் குறிக்கின்றன என்பதை படிப்பவரே அனுமானித்துக் கொள்ள வேண்டும். கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எளிதில் விளங்கும். மற்றவர்க்கு இணையம் கைக்கொடுக்கிறது]. ஓல்டு மேஜர் என்னும் வெள்ளைப் பன்றியின் மனிதர்க்கு எதிரான கிளர்ச்சியை விலங்குகளிடையே உண்டுபண்ணும் உரையுடன், அந்த நள்ளிரவில், கதை தொடங்குகிறது.

ஓல்டு மேஜர் தனது உரையில், மற்ற விலங்குகளைப் பார்த்து " மனிதனை ஒழிக்க கிளர்ச்சி செய்யுங்கள் தோழர்களே! ஆம். மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி; இந்த உலகத்தில் உள்ள ஜீவராசிகளில் மனிதகுலம் மட்டுமே, எதையுமே உண்டாக்காமல் எல்லாவற்றையுமே உட்கொள்கிறது; ஆனால் அவன் நமக்கெல்லாம் எசமான். எல்லா மனிதர்களுமே விரோதிகள்தாம் எல்லா விலங்கினமும் தோழர்கள்தாம்!"  என்று கூறும் கருத்துகளில் ஒரு தெளிவும், மனிதர் மீதான விலங்குகளின் கோபமும் வெளிப்பட, அவை அப்படியே [Animalism-விலங்கியம்] "அனிமலிச கருத்து"களாக ஏற்றுக்கொள்ளக் கூடியன.
ஓல்டு மேஜர் தனது உரையின் முடிவில் தான் ஒரு வினோதமான கனவினைக் கண்டதாகக் கூறி அதிலே வந்த பாடலைப்  பாடுகிறது.
"இங்கிலாந்தின் விலங்கினமே, அயர்லாந்தின் விலங்கினமே..." [Beasts of England, beasts of Ireland, Beasts of every land and clime,...] என்பதாக வரும் அந்த பாடல் உண்மையில் விலங்கினத்தில் புரட்சி சிந்தனையைத் தோற்றுவிப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் - விலங்கியத்தின் 7 கட்டளைகள், 'இங்கிலாந்தின் விலங்கினமே' பாடல் விலங்கிய கீதமாகவும், மற்றும் "நான்கு கால் நல்லது, இரண்டு கால் கெட்டது" என்பதை விலங்கிய கொள்கையாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மூன்று இரவுகளுக்குப் பின் ஓல்டு மேஜர் இறந்து போகிறது. பண்ணையாளர் ஜோன்ஸ் குடியில் மூழ்கிக்கிடக்க, விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் தாமே எடுத்து உண்ணுகின்றன,...விரைவில் அந்தப் பண்ணையில் புரட்சி வெடிக்கிறது; ஜோன்ஸ் குடும்பம் பண்ணையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, 'மேனார் பண்ணை' "விலங்குப் பண்ணை"யாகிறது. படிப்படியாக விலங்குகளின் ஆட்சியிலும் மனநிலை மாற்றம் நிகழ்கிறது. பன்றிகள் படிக்கக் கற்றுக் கொண்டு பண்ணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றன. பன்றிகளின் தலைமையில் விலங்குகள் தாமே அறுவடைப் பணியில் ஈடுபடுகின்றன. பக்கத்து பண்ணை விலங்குகளும் மெதுவாக புரட்சிப் பாடலைப் பாடத் துணிகின்றன. 7 கட்டளைகள் பண்ணைச் சுவர்களில் எழுதப்பட்டு, அவை சில மாற்றங்களும் பெறுகின்றன.

ஒரு அக்டோபர் மாதத்தில் ஜோன்ஸ் ஆட்களுடன் விலங்குப் பண்ணையைத் தாக்க வர, ஸ்நோபால் என்னும் காட்டுப்பன்றி "ஜூலியஸ் சீசரின் போர்முனை உத்திகள்"-எனும் பழைய நூலைப் படித்து, தளபதியாக நின்று போரிட்டு, முதுகில் குண்டடிப்பட்டு வெற்றிகண்டது. அந்த யுத்தத்திற்கு "மாட்டுத்தொழுவ யுத்தம்" [உண்மையில் குறிப்பது-Bolshevic Revolution/Red October Revolution] எனப் பெயரிட்டு ஸ்நோபால்-கு விலங்கு நாயகன் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பண்ணையில் காற்றாலை கட்டத் திட்டமிடப்பட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்க, நெப்போலியன் எனும் காட்டுப்பன்றி ஸ்நோபால்-ஐ விரட்டியடித்து பண்ணைக்குத் தலைமை ஏற்கிறது.

பின்னர் விலங்குப் பண்ணை பக்கத்து பண்ணைகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துகொள்ளலாம் என முடிவுசெய்யப்பட்டு, பண வர்த்தகத்தில் ஈடுபடுகிறது நெப்போலியன். இது தோல்வியில் முடிந்தாலும், பண்ணை வளமாக இருப்பதாக வெளியே காட்டப்படுகிறது [1932-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட  மாபெரும்  வறட்சி] இதற்கிடையில் "காற்றாலை யுத்தம்" [இரண்டாம் உலகப் போரில், ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையெடுப்பின் போது நிகழ்ந்த ஸ்டாலிங்க்ராடு யுத்தம்-Battle of Stalingrad] நடக்கிறது. பண்ணையில் "இங்கிலாந்தின் விலங்கினமே" பாடலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. விலங்குகள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளப்பட்டன. ஜோன்சுக்குப் பின் விலங்குப் பண்ணையில் மீண்டும் ரத்த வாடை சூழ்ந்தது!

விலங்குப்பண்ணையில் பார்லி விதைக்கப்பட்டு பீர் தயாரிக்கும் வேலை நடந்தது-இது பன்றிகளுக்கு மட்டும். வெகு சீக்கிரத்தில் விலங்குப் பண்ணை குடியரசாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் நெப்போலியன் தலைவரானது. நாட்கள் நகர நகர, எல்லா விலங்குகளுக்கும் வயதாகிவிட்டது; பண்ணை செழித்து விட்டது; ஆனாலும் விலங்குகளுக்கு மட்டும் எந்த வசதியும் இல்லை-பன்றிகள் தவிர! பன்றிகள் இரண்டு கால்களில் நடக்கின்றன; எல்லா பன்றிகளிடமும் சவுக்கு இருந்தது. ஒருநாள் விலங்குப்பண்ணையில் பக்கத்துப் பண்ணையாளர்களுக்கு இரவு விருந்து நடக்கிறது; பன்றிகள் மது அருந்தி, சீட்டு விளையாடி களித்துக்கொண்டிருந்தன. மற்ற விலங்குகள் இதை ஒளிந்து நின்று பார்க்கின்றன.

ஆசிரியர் சுவைபடச் சொல்கிறார்: "வெளியில் இருந்த விலங்குகள் பன்றியின் முகத்தை பார்த்துவிட்டு மனிதனின் முகத்தைப் பார்த்தன. மறுபடியும் மனிதனின் முகத்திலிருந்து பன்றியின் முகத்தைப் பார்த்தன; திரும்பவும் பன்றியின் முகத்திலிருந்து மனிதனின் முகம்; உண்மையில், எது எதனுடைய முகம் என்று சொல்ல முடியவில்லை."

உண்மையில் மிக அற்புதமாக, கம்யூனிச ஆட்சியின், சர்வாதிகார வர்க்கத்தின் தன்மையும், எந்த ஆட்சி வந்தாலும் பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற உண்மைமையை சுவையாக சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சியை விளக்கி உண்மைப் பொருள் தெளிவாகத் தெரியும்படி தமிழில் வழங்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

May 23, 2013

நல்ல புத்தகம்: எஸ்.ரா-வின் பார்வையில்

சமீபத்தில் ஒரு புத்தகத்தின் மையப் பகுதியில் வெளிவந்திருந்த புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு - எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் பார்வையில்...


"நல்ல புத்தகம் என்பது சக மனிதன் மீதான அன்பும் உலகின் மீதான தீராத அக்கறையும் கொண்டிருக்கும். உண்மையை சொல்வதில் பாசாங்கு செய்யாது. மனதின் அந்தரங்கத்தில் சென்று, சந்தோஷமும் துயரமும் கொள்ளச் செய்யும். தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உலகை மேம்படுத்தவும் உதவி செய்யும். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாது. மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாக அமையும்." 

எழுத்தாளர் எஸ்.ரா-வின் வலைப்பக்கம்: http://www.sramakrishnan.com/

May 16, 2013

Learn Library Science!

சென்னைப் பல்கலைக் கழக "நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை" இந்தியாவில் உள்ள சில முக்கிய துறைகளுள் நீண்ட காலமாக கல்விச் சேவை அளித்து வரும் துறைகளுள் ஒன்று. இது, 1931-ஆம் ஆண்டு "இந்திய நூலகவியலின் தந்தை" என்று போற்றப்படும் "முனைவர். S. R. ரங்கநாதன்" அவர்களால் நிறுவப்பட்டது. இத்துறை வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நூலகவியல் கல்வியை அளித்து வருகிறது. தற்பொழுது முதுநிலை அறிவியல் பட்டமேற் படிப்பாக "முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்" [M.Sc., Library and Information Science] என்ற பட்டமேற் படிப்பை வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக வலைதளத்தைப் பயன்படுத்தி பயன்பெறவும். 

வாழ்த்துகளுடன்,
தமிழச்சி சிவா M.Sc.,[LIS].,

Apr 28, 2013

தெருவோர தேவதூதன்!...


"வாசிக்க ஆளில்லை,
எனினும் 
வானப் புத்தகம் 
திறந்திருந்தது..." - வைரமுத்து சொல்கிறார்.

ஆம். உண்மையில் அன்றும் வானமெனும் புத்தகம் திறந்திருந்த போதும், அந்த மூன்றுமுனைச் சாலையின் ஜனக்கூட்டத்தில் ஒரு நல்ல வாசகனும் இருக்கவில்லை.

அந்த மூன்றுமுனைச் சாலையின் சந்திப்பு எப்போதும் போல் சற்று பரபரப்புடனும், சற்றே மெதுவாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. மூன்றாவதுச் சாலை நுழைவின் இடது புறத்தில் ஒரு பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் எதிரே ஒரு அரசியல் தலைவரின் சேதப்படுத்தப்பட்ட சிலை. அதற்குப் பின்புறத்தில் சில பல சின்ன கடைகள் சிலைக்குக் கீழே ஒரு கோணிப்பையின் மேல் சில பழைய செருப்புகள்; அவற்றில் பிய்ந்த செருப்புகள், ஜோடியிழந்த சில ஒற்றைச் செருப்புகள், மற்றும் பழைய ஊசி, பசை என இன்னும் சில இத்யாதிகள் அடங்கும்.

கோணிப்பைக் கடையின் உரிமையாளன் கலைந்த தலையுடனும், கசங்கிய அழுக்குப் படிந்த உடையுடனும் தன் தொழிலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான் போலும். அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் யாருடைய செருப்பும் அறுந்து போகவில்லை எனினும், யாரும் தன்னை நாடி, தன் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லையானாலும் - அவன் இல்லை என்றால் யாருடைய கால்களும் செருப்பணிந்து நடந்து செல்ல முடியாது என்பது போலவும், தானே அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் கால் செருப்புகளை இயங்க வைக்கும் காரணகர்த்தா என நினைக்கும் பொருட்டு, அவன் தவறாமல் தன் கோணிப்பைக் கடையை அங்கு விரித்து விடுவான். தான் தினமும் இந்த உலகத்திற்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைக் கூற விரும்புவது போல் இருக்கும் அவனின் வருகை.

அவன் அப்போது ஒரு குச்சியை மெல்ல ஒரு காதில் விட்டு, எதையோ அதற்குள் தேடிக்கொண்டிருந்தான். நீர் குடித்த மேகம் வயிறு வெடித்து, பருகிய நீரையெல்லாம் அந்த மூன்றுமுனைச் சாலையின் மேல் தெளிக்கத் தொடங்கியது. ஜனக்கூட்டம் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி ஒளிய, நமது கோணிப்பைக் கடைகாரன் மட்டும் தன் காதில் புதையல் தேடுவதில் மெய்ம்மறந்து லயித்திருந்தான். சிலையும் செருப்புகளும் நனைந்து கொண்டிருந்தன...

மேகத்தின் வயிறு மூடியவுடன், அந்தச் சாலை முழுக்கக் குளித்திருந்தது; மக்கள் எல்லாம் தங்களை நனையாதபடி காத்துக்கொண்டத் திருப்தியுடன் யதார்த்தமான போது, தன் கோணிப்பைக் கடையை மெதுவாகச் சுருட்டித் தோளில் போட்டுக்கொண்டு பிரதானச் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். அவன் முழுக்க நனைந்திருந்தான்; ஒழுங்கற்ற தன் பற்களைக் காட்டி வானத்தைப் பார்த்துச் சிரித்தவாறே அந்த மூன்றுமுனைச் சாலையைக் கடந்து போய் விட்டான் அவன்...

அடித்த மழையில் அந்தத் "தெருவோர தேவதூதனின்" அழுக்கடைந்த சட்டையும் வெளுத்திருந்தது!...

அக்கா!...

(என் நண்பனின் பார்வையில்...)...

'அக்கா'... - அம்மாவையும், சகோதரியையும், தோழியையும் ஒருங்கே வர்ணிக்கப் போதுமானதொரு ஒற்றை வார்த்தை,... இல்லை இல்லை; ஒற்றை 'உறவு'! அது எப்படியோ தெரியவில்லை,... இந்த அக்காக்களெல்லாம் நம் வெளிப் பார்வைக்கு அசட்டுத்தனமாகத் தெரிந்தாலும், தெளிவான செயல்திறனும், சலனமில்லாத அன்பும் கொண்டவர்களாய் இயற்கையாகவே அமைந்து விடுகிறார்கள்! அதுமட்டும் போதாதென இன்னும் பல அக்காக்கள் நம் அம்மாவின் முகத்தையும், புன்னகையையும் வேறு குத்தகைக்கு எடுத்துவிடுகிறார்கள்!... ('Dolly' ஆடு-லாம் என்னங்க பெரிய Cloning கண்டுபிடிப்பு!!!. இந்த அக்கா-அம்மா முக அமைப்பு தாங்க உண்மையான Cloning Technology!...) அதிலும் சில வீடுகளில் இந்த அக்காக்கள் தங்களுக்கெனத் தனியாக ஒரு சாம்ராஜ்ஜியமே உருவாக்கிவிடுவார்கள். அப்பப்பா! பொல்லாதவர்கள் இந்த cloning அம்மாக்கள்!... வீட்டின் எல்லா உறவுகளிடத்தும் பாசத்தை கொஞ்சம் extra-வாகவே பொழிந்து பொங்கி வழிய விட்டு, அனைவரது அன்பையும் வாங்கி சேலைத் தலைப்புடன் சேர்த்து இடுப்பில் செருகிக் கொள்வார்கள் இந்த விந்தை மனுஷிகள்!...

எனக்கு மூத்தவளும் கூட இப்படித்தான். எனக்கும் அக்கா-வுக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம். அதனால், எல்லாருக்கும் கிடைப்பதைவிட அவளுடைய பாசம் கொஞ்சம் அதிகமாகவே எனக்குக் கிடைக்கும். சோறு ஊட்டுவதில் இருந்து இரவு தலைகோதி தூங்கச் செய்வது வரை அம்மாவுடன் நீயா-நானா?-வெனப் போட்டிப் போட்டுக் கொண்டு 'என் அக்கா' எனக்குச் செய்வாள்.

ஒருநாள்... எனக்கு 8 வயசு-ன்னு நியாபகம். எங்க வீட்டுக்கு நெறைய உறவினர்கள் வந்தாங்க; வெளியாட்கள் பல பேரும் வந்திருந்தாங்க; அவங்களோட கொஞ்சம் என் வயசுப் பசங்களும் வந்திருந்தாங்க. பெரியவங்க எல்லாரும் பேசினாங்க; நான் அந்தப் பசங்கள கூட்டு சேர்த்து விளையாடப் போயிட்டேன். பிறகு, எல்லாரும் சாப்பிட்டாங்க; அப்புறம் அந்தப் பசங்களையும் அழைச்சுட்டு வந்தவங்கள்லாம் திரும்பப் போயிட்டாங்க. என் விளையாட்டுத் துணையெல்லாம் போச்சே-னு நெனைச்சேன்! (என்ன முறைப்பு!??... அப்போ எனக்கு 8 வயசுதான்! அதான் அப்டி 'வட போச்சே'-னு ஒரு feel கொடுத்தேன்! )

மீண்டும் ஒருநாள்... வீடு நெறைய உறவினர்கள் இருந்தாங்க... விதவிதமா சமையல் நடந்தது. புதுத்துணி எல்லாருக்கும் வாங்கினாங்க அக்கா தான் எனக்குப் போட்டு விட்டா. அக்கா அன்னைக்கு வழக்கமா இல்லாம ஏதோ வித்தியாசமா இருந்த மாதிரி எனக்குத் தெரிஞ்சது. அட, அவ சிரிச்சுட்டே இருக்காளே எப்பவும்! முன்னை விட என்னை அதிகமா கொஞ்சராளே!... ரெண்டு மூணு நாளுக்கப்புறம் எங்க அக்கா-வுக்கு திருமணம்-னு சொன்னாங்க. நான் விளையாட போயிட்டேன். அப்புறம் வீடே திருவிழா மாதிரி மாறிப் போயிருந்தது. அக்கா அழகா அலங்கரிக்கப்பட்டிருந்தா. நான் அவ பக்கத்துலயே இருந்தேன். அவ என் கையப் பிடிச்சுட்டே இருந்தா; ஆனா, யாரு அந்த மாமா? ஏன் எங்க அக்கா பக்கத்துலயே நிக்கிறாரு? சே! என்னை வேற முறைச்சு முறைச்சு பாக்குறாரே!...

அக்கா அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். அம்மா-வும் அக்காவுக்கு நிறைய ஆறுதல் சொல்கிறாள். அக்கா ஒவ்வொருவரையும் பார்த்து அழுகிறாள். 'எல்லாரும் அழுகிறார்கள்; அக்கா-வும் அழுகிறாள்; நானும் அழுகிறேன்'. அக்கா என்னைக் கட்டிக் கொண்டு முத்தம் தந்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதுவிட்டு விடைபெறுகிறாள்; ஆனா, அக்கா யேன் அந்த மாமா-வோட போறா... அதற்குப் பிறகு அக்கா என் வீட்டில் எங்களுடன் இருக்கவில்லை. அடிக்கடி வந்து போவாள் மாமாவுடன். அப்போதெல்லாம் அக்கா விடைபெறும்போது யாரும் அழவில்லை; அவளும் அழவில்லை; நானும் அழவில்லை! மாறாக அக்கா மகிழ்ச்சியாக விடைபெறுகிறாள்,... அவளுடைய வீட்டிற்கு...

இதோ இப்போது நான் வளர்ந்துவிட்டேன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. நல்ல வேலையில் இருக்கிறேன்... சென்ற வாரம் என்னுடைய மற்றொரு அக்கா-வுக்குத் திருமணம் ஆயிற்று. எல்லா வேலைகளையும் முன்னின்று நான் செய்தேன். எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முதல் நாளன்று அக்காவின் மடியில்  தலைவைத்துப் படுத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். அக்கா மகிழ்ச்சியுடன் பேசினாள். வழக்கம்போல் அவளது விரல்கள் வாஞ்சையுடன் என் தலைகோதின; அம்மா சமைத்த உணவை பாசத்துடன் எனக்கு ஊட்டிவிட்டாள்; அவளின் தெற்றுப்பல் சிரிப்பு எப்பொழுதையும் விட அப்போது அழகு கூடியிருந்தது; திருமணம் முடிந்து, முன்பொருநாள் என் மூத்த அக்கா-வுக்கு நேர்ந்த ஒன்று இவளுக்கும் நேர்கிறது... அதே நிகழ்வு... அக்கா திருமணமாகி தன்வீடு செல்கிறாள். இத்தனை ஆண்டுகளாய் என்னோடு விளையாடி, என் கோப-வெறுப்புகளை உள்வாங்கி, என் சுக-துக்கங்களைப் பங்கு போட்டு, சின்ன ஒரு அம்மா-வைப் போலிருந்த 'என் அக்கா' தன் வீடு செல்கிறாள்!... 8 வயதில் 'எல்லாரும் அழுதார்கள்; அக்காவும் அழுதாள்; நானும் அழுதேன்!...' இன்று அக்கா தன் வீடு போக வேண்டும். அவள் செல்வதற்கு முன் நான் அங்கிருந்து கிளம்ப வேண்டும். நேரே மாமாவிடம் சென்று விடைபெற்றேன்; பின் அக்காவிடம்..அவளை நேராய் பார்க்க முடியவில்லை,.. வார்த்தைகள் தடுமாறிக்கொண்டு வெளிவந்தன என்னிடமிருந்து "அக்கா, நான் கிளம்பணும்; நீ நல்லா இரு உன்னோட வீட்டுல,...." அவ்வளவு தான்.... வார்த்தைகள் முற்றிலும் உடைந்து விட்டன; எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. கண்ணீர்த் துளிகள் விழித்திரையை மறைத்து அக்கா-வின் உருவம் மங்கலாகிப் போனது; உடைந்த என் கண்ணீர்த் துளிகள் சிதறி அக்கா-வையும் கரைக்கிறது; 'என் அக்கா' என்னைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்; முத்தம் கொடுத்து என்னைத் தேற்றிச் செல்கிறாள்!...

இயல்பான ஒரு விடைபெறுதல். என் அக்கா இன்னொரு வீட்டில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பப் போகிறாள் என்றவொரு ஆத்ம திருப்தி இப்போது. மனம் சலனமற்றிருக்கிறது... கண்ணீர்த் துளிகள் கூட சில நேரங்களில் நம்முடைய உறவுகளுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் உணர்வுகளை அப்பட்டமாக்கி விடுகின்றன!... அழுவதும் கூட சில நேரங்களில் ஆறுதலான செயல் தான்!... நீண்ட ஒரு பெருமூச்சிற்குப் பிறகு மனம் யோசிக்கிறது,.. ஒருவேளை எனக்குத் திருமணமாகி என் மனைவி என் வீட்டிற்கு வரும்போதும் அவளுடைய தம்பிகளும் இப்படித்தானே உணர்வார்கள்!...  ஹும்!... உலகம் ரொம்ப சின்னது தாங்க!... உறவுகள் உன்னதமானது!... ("ஆமா!... இவரு பெரிய கப்பல் வியாபாரி!... கண்டு புடிச்சு,..உலகத்துக்கு சொல்லிட்டாரு!..." இது தானே உங்க mind voice!...)

ஆனா எனக்கு இன்னும் ஒரு விஷயம் மட்டும் புரியலைங்க... "இந்த அக்காக்கள்-லாம் திருமணமானதும் ஏங்க வேற வீட்டுக்குப் போறாங்க?!!..." ஆ...ஆ...ஆ...அக்கா....என்னை விட்டுப் போகாத.......ம்...ம்...ம்...  ("உள்ள அழுகறேன்,.. வெளிய சிரிக்கறேன்; நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்கறேன்!...") Please, சிரிக்காதீங்க!... ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு சின்னக் கொழந்த இன்னமும் இருக்கு; தூங்கிட்டிருக்க அந்த கொழந்தைங்க இந்த அக்காக்களாலதான் எழுந்து அழுகுதுங்க!... (அப்பா... கடைசில ஒரு தத்துவம் சொல்லியாச்சு!... வந்த வேலைய முடிச்சுட்டோம்-ல!...) 

Apr 19, 2013

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்!



ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்!... முன்பெல்லாம் நமது சமூகம் எதற்கெல்லாமோ தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இப்போது விழித்து கொண்டது போலும். எந்த இணைய பக்கத்தைப் பார்த்தாலும் எங்கோ ஒரு மூலையில் பளிச்சென நிற்கிறது உலக புத்தக தின அழைப்பிதழ்/விளம்பரம். நல்ல விஷயம் தான். கொண்டாட கூடிய தினம் தான். நாமும் நம்மால் முடிந்த உலக புத்தக தின விளம்பரத்தைப் பரப்புவோமே,... விழித்தெழட்டும் இன்னமும் இருட்டில் உறங்கும் சமுதாயம். புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்! வாழ்வு வளம்பெறட்டும்! அனைத்து புத்தக ஆர்வலர்களுக்கும் advance Happy World Book Day!... 23 அன்று சந்திப்போம், ஏதாவதொரு புத்தகக் கண்காட்சியிலோ அல்லது புத்தகக் கடைகளிலோ அல்லது நூலகங்களிலோ... 


Apr 17, 2013

'பூ'...!...


èMë˜ ¬õ󺈶-M¡ õKèO™ ªê£™õî£ù£™,.....
        ''å¼ ñó‹- C¡ùŠ ¹™ªõO- î¬ó ªñ¿°‹ Gö™- Iî‚°‹ ñù²- ªè£…ê‹ «îm˜- G¬øò õ£ù‹- Þ¬õ «ð£¶‹ 𣆪ì¿î!.....''    
                        ܉î C¡ùŠ 'Ì'¾‹ Ãì   ÜŠð®ˆî£¡ G¬ùˆF¼‚°‹ «ð£ô!... ܶ ã«î£ å¼ Ì…«ê£¬ôJ«ô£ Ü™ô¶ ò£«ó£ å¼õ˜ i†´ˆ      «î£†ìˆF«ô£  ̈F¼‚è «õ‡´‹. ܶ ñ…êœ GøˆF™ Þ¼‰î¶. 䉶 Þî›èÀ‹ Üî¡ ï´M™ Þó‡´ ªñ™Lò °öL™ ºˆ¶‚èœ ðFˆî¶ «ð£¡ø Þó‡´ ñèó‰î‚ °„CèÀ‹, Ü¬î„ ²ŸP½‹ Üì˜ áî£ Gø‹- âù Mò‚è Mò‚è ï£Â‹ Mì£ñ™         𣘈¶ óCˆ¶‚ ªè£‡®¼‰«î¡- Þ¼ óJ™       î‡ìõ£÷‚ è‹HèÀ‚A¬ì«ò M¿‰F¼‰î Ü‰î„ C¡ù ñ…êœ 'Ì' ¬õ!
                                    É‚èˆF™ ¹ó‡´ 𴂬èJ™ à‡ì£°‹ å¼ C¡ù ²èˆ¬îŠ «ð£ô¾‹; ã«î£ â¿î G¬ù‚¬èJ™ õ£˜ˆ¬îèœ «î£¡ø£ñ™ F¬è‚A¡ø ܉î Cô î¼íƒè¬÷Š «ð£ô¾‹; 裟P™ I     õ‰¶ ºèˆF™ «ñ£¶‹ ªñ™Lò 弄 Cø¬èŠ        «ð£ô¾‹- Ü‰îŠ 'Ì' ¬õŠ 𣘈¶‚ ªè£‡®¼‰î Cô èíƒèœ âù‚°œ ¹Fò å¼ ÜÂðõñ£Œˆ              «î£¡Pò¶. ªðò˜ ªîKò£î Ü‰î„ C¡ùŠ 'Ì' ¾‚° àôè- ªñ£NèOª÷™ô£‹ ªðò˜ ¬õˆ¶Š 𣘂è Ý¬ê ªè£‡«ì¡!...
                                    ÞŠð®ò£è  C‰Fˆ¶‚       ªè£‡®¼‰î Cô ªï£®èÀ‚°œ÷£è«õ ºèˆF™ «õèñ£è âF˜‚裟Á Ü®‚è, è£¬îŠ H÷‚°‹ ªð¼‹ êˆîˆ«î£´ å¼ ðòEèœ óJ™ ⡬ù‚ è쉶 ªê¡ø¶......... ܉î óJ™ ãŸð´ˆF„ ªê¡ø ÜF˜„CJL¼‰¶ e÷ âù‚°„ Cô ñEˆ¶Oèœ «õ‡®J¼‰îù. ݲõ£êŠð´ˆF‚ ªè£‡´, e‡´‹ â¡Â¬ìò Ü‰î ªðò˜ ªîKò£î, C¡ù ñ…êœ 'Ì' ¬õŠ 𣘈«î¡-... 'Ì' ܃° è£íM™¬ô!....
                        óJ™ ⡬ù‚ è쉶 ªõ° Éó‹    ªê¡ÁM†®¼‰î¶!....................................................................

Apr 15, 2013

நட்புக்கு!,...........

காலையிலே நேரில் பார்த்து 
நெடுநேரம் பேசித் தீர்த்து 
மாலையிலே கைக்கோர்த்து
மனசெங்கும் உனைச்சுமந்து 
போகும்போது டாட்டா சொல்ல,
நண்பா, நான் கூட இல்ல!  

அன்றாடம் போய்த்திரும்பும் 
அலுவலக வேலையில்ல!
விட்டு ஓடி வந்துவிட 
விதியும் என்ன விடவில்ல!

உனைச் சுமந்த நெஞ்சிலின்று 
இணைச் சுமந்து போகின்றேன்,...
உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு!
நண்பா,... 
போகின்றேன் நான் ,...
உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு!

இரவெல்லாம் விழித்திருப்பேன்
உனைக் காணத்  துடித்திருப்பேன்!
அவன் என்னைக் கேட்டுவிட்டால்,...
கண்சிமிட்டி நான் சிரிப்பேன்!
கண்சிமிட்டும் நேரத்திலும்
கனவுபோல உன் முகமே!

எத்தனை நாள்?- தெரியாது
எப்போது?- தெரியாது
உயிர்நண்பா... உன்னை என்று
பார்ப்பேனோ? தெரியாது!

இறகொடிந்து போகும் முன்னே,
இறை என்னைக் கொள்ளும் முன்னே,...
உனைத் தேடி நான் வருவேன்
உன் மடியில் விடைபெறுவேன்! 

இணை பிரிந்து திரும்பும்வரை- என்
நினைவுகளை வைத்திரு நீ!...
துணை தேடி வருகையிலே- உன் 
நேசமதைத் தந்திடு நீ!

நண்பேன்டா!...


நல்ல ஒரு உச்சி வேளை,... முகப்புத்தகத்தில் ஆழப்பதிந்திருந்த ஒரு பொழுது... எங்கோ காற்றில் மிருதுவாகக் கேட்டது அந்தப் பாடல். 1991-ல் வெளிவந்த புகழ்பெற்ற 'தளபதி' திரைப்படத்தின் ஒரு பாடல் அது. திரைப்பாடலாய் இருந்தாலும் சில பாடல்கள் அதி அற்புதமாய் வடிவமைக்கப் பட்டுவிடுகின்றன. இதுவும் அந்த வகைப் பாடல் தான்... என் வேலைகளை நிறுத்திவிட்டு பாட்டிற்குச் செவி கொடுத்தேன். கிட்டத்தட்ட முன் பாதி பாடல் முடிந்துவிட்டிருந்தது,..அடுத்த வரிகள்...

"பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன...
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜன்மம் நானில்ல!
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க...
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே!
உள்ளமட்டும் நானே, உசிரக் கூடத்தானே,
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்...
என் நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு,
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்...
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும் வானம்பாடி நாம்தான்!..."

-இப்படியான வரிகள் அமைந்த பாடல்... எத்தனை உயிர்ப்புள்ள பாடல்!... எழுதிய கவிஞனுக்குப் பாராட்டுகள். நிச்சயம் அவன் 'தோழமை' உறவை நன்கு உணர்ந்த மனிதனாகத் தான் இருக்க வேண்டும்.

முன்பெல்லாம் நட்பு, நல்ல நெருக்கமான நண்பர்கள் என்று எனக்கு யாரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா இருக்கவில்லை. பள்ளி வயதில் யாராவது 'உன் Best Friend யாரு?' என்று கேட்டால் கூட சட்டென பதில் வரும் 'புத்தகம்' என்று!... இதே பதிலைத் தான் 23 வயது வரைப் பின்பற்றி வந்திருக்கிறேன்... திடீரென ஒரு மாற்றம் என் நட்புருவத்தில்! இங்கே நான் என் எண்ண ஓட்டத்தை அப்படியே பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால் இனி பேச்சு வழக்கில் எங்கள் நட்பை பார்ப்போம்...

மனித உருவத்துல நட்பை நான் உணரும் வாய்ப்பு பல ஆண்டுகளா கிடைக்கல. ஆனா நல்ல ஒரு 'மனிதனா' எனக்கு அறிமுகமானான் 'என் நண்பன்'. (பேர் சொன்னா திட்டுவான்; அவனுக்கு publicity பிடிக்காது! ) எப்படி நாங்க நண்பர்கள் ஆனோம்-னா...... (பயந்துடாதீங்க! அது ரொம்ப சின்ன கதை தான்! ) 2008-ல செ.ப.-ல படிக்கற 14 அடங்காத வால் பசங்கள தேர்ந்தெடுத்து, (அதுல நானும் ஒண்ணு!) அவங்கள NSS அமைப்பு மூலமா தஞ்சை பெ.ம.ப. நடத்தின ஒரு தேசிய அளவிலான முகாமைக்கு செலவு பண்ணி அனுப்பி வெச்சாங்க. (அப்பவாவது நாலு நல்ல பசங்கள பாத்து நாங்க திருந்துவோம்-னு நெனைச்சுட்டாங்க போல! அந்த நாலு நல்ல பசங்கள்-ல 'என் நண்பனும்' ஒருத்தன்!...) சமத்தா போன எல்லாரும் வந்த காரியத்தோட சேர்த்து, வழக்கமான எங்க அடங்காத அட்டகாசத்தையும் அள்ளித் தெளிச்சுட்டு வந்துட்டோம். இது நடந்து ஒரு 5 வருஷத்துக்கு அப்புறமா,..... (என் இனிய தமிழ் மக்களே,.. தயவு செய்து இங்க '16 வயதினிலே' Title Song-அ ஓடவிடுங்கலேன்...Start Music!..'சோளம் வெதக்கையில'...................) ஒரு நாள் முகப்புத்தகத்துல busy- இருந்தப்போ, ஒரு பையன்,... அதாவது அந்த நாலு நல்ல பசங்கள்-ல ஒருத்தன்,....(அட, 'என் நண்பன்' தாங்க) Chat-ல வந்தான். (முன்னாலேயே அந்த NSS பசங்க எல்லாரும் facebook- friends ஆகிட்டோம்ல!...) வழக்கம் போல ரெண்டு பேரும் ஒரே படிப்ஸ் மாதிரியே scene போட்டோம்... அவனும் என்னை மாதிரிதான்... (நெறைய மொக்க போடுவான்!??!!!!)

ஆரம்பத்துல நாங்க நெறைய சண்ட போடுவோம். நான் பண்ற எதுவுமே அவனுக்கு பிடிக்காது; அவன் பேசற எதையுமே நான் லட்சியம் பண்ண மாட்டேன் (அட அட அட!... என்ன ஒரு understanding-ல!) இப்டி தான் எங்க நட்பு வளர்ந்துச்சு. பேசப் பேச தான் எங்களுக்குள்ள ஒற்றுமைகளும், வேற்றுமைகளும், மன ஓட்டங்களும், நினைவுகளும், சிரிப்பும், அழுகையும், மகிழ்ச்சியும், துக்கமும் அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வெற்றுத்தாள்களாய் கிடந்த எங்கள் புத்தகங்களை உணர்வுகடங்கிய ஒரு மாபெரும் உருவம் கொடுத்து, உயிரோட்டமுள்ள ஒரு உறவாக 'நட்பாக' எங்களுக்கே எங்களாலேயே அறிமுகப் படுத்தப்பட்டது.

இதோ இப்போது அந்த உறவு அப்பா, அம்மா உறவைக் காட்டிலும் நெருக்கமுடையதாய்; சகோதர, சகோதரிகளைக் காட்டிலும் பிணைப்புடையதாய்; மற்ற உறவுகளைக் காட்டிலும் உண்மையானதாய் எங்களுக்கிடையே வளர்ந்து நிற்கிறது.

இருவரும் சேர்ந்து இலக்கியம் பேசுகிறோம், இறைமைப் பழகுகிறோம், உணர்வுகளைப் பகிர்கிறோம், ஊர்வம்பும் பேசுகிறோம்; ஒன்றாய்ச் சேர்ந்து அழுகிறோம், சிரிக்கிறோம்... எனக்கென்ன தேவை என்பதை அவன் அறிந்துச் செய்கிறான்; எனக்குற்ற துணையாய் அவனிருப்பதை ஆணித்தரமாய்க் காட்டுகிறான்; அவன் அகராதியில் "அவனுக்கில்லை என்றால் கூட, எனக்கிருக்கிறது". தூயவன் 'என் நண்பன்'! உலகின் மொத்த அன்பையும் என்பால் கொட்டிக் களிக்கிறான்; அவ்வப்போது தலையிலும் குட்டுகிறான்; தேவையென்றுணர்கையில் தோள் கொடுக்க வருகிறான்; உயர்ந்த எங்கள் நட்பை உலகுக்கு உரக்கச் சொல்கிறான்!
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
ஆனாலும் இன்னும் நாங்க ரெண்டு பேரும் சின்னப்புள்ள தனமா தான் நடந்துக்குவோம். அடிக்கடி சண்ட போடுவோம்; மாத்தி மாத்தி திட்டிக்குவோம்; chocolate-ல கடன் வெப்போம்; same pinch, give me a munch விளையாடுவோம்; அவன் சொல்ற எதையும் நான் செய்ய மாட்டேன்; நான் சொல்ற எதையும் அவன் கேக்க மாட்டான்! ஆனா, எங்க நட்ப மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம். "நண்பேன்டா!"....

"உள்ளமட்டும் நானே, உசிரக் கூடத்தானே,
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்...
என் நண்பன் போட்ட சோறு, நிதமும் தின்னேன் பாரு,
நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்..."

(என் நண்பன் கூப்பிடறான்-அட, இது தாங்க எங்க 'caller tune!'.. நான் போய் சண்ட போட்டுட்டு வரேன்...)
"நண்பேன்டா!"...

[Am dedicating this to my Best Freind Mr.Kappal Vyapari!... Thanks machi, for being into my life. U're my angel da! Thank U! ]