Sep 17, 2013

சியாமா அக்காவும் சிக்கன் பிரட்டலும்!...

அந்த அபார்ட்மெண்ட் வாசலில் கொஞ்சம் கார்களும் பைக்குகளும் விடிந்ததிலிருந்தே நின்று கொண்டிருந்தன. சில பேர் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் சியாமா அக்காவின் வீட்டுக்கு வந்தவர்கள் தான். மொச மொச-வென அங்கும் இங்கும் கூடி நின்று பேசிக்கொண்டார்கள் அந்த அபார்ட்மெண்ட் வாசிகள்.

தட் தட் என்று ஷூக்களின் சத்தம் கேட்க சியாமா அக்காவின் மாமா வெளியே வந்து பார்த்தார். கீழ்ப் போர்ஷன் ராஜேஷ் சார் மூச்சு வாங்க பாதி படியேறி நின்று கொண்டு பேசினார்: "எப்போ டிஸ்போஸ் பண்றதா இருக்கீங்க சார்? Freeze பாக்ஸ்-க்கு சொல்லியாச்சா? முடிஞ்ச வரைக்கும் உடனே க்ளியர் பண்ணிடுங்க. ஏன்னா...கொழந்தைங்க அதிகமா இருக்குற எடம் பாருங்க, அதான்." ஐ.டி கம்பெனி ஒன்றில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கும் ராஜேஷ் சாரைப் பற்றி சொல்லணும்னா-இவருக்கு ஒரு நாலு முழ வேட்டிய கட்டிவிட்டு, பட்டையும் கொட்டையும் போட்டு விட்டா, நம்ம உசிலமனியின் ரெண்டாவது சித்தப்பாவின் ஒண்ணு விட்ட பேத்தியின் கடைசி பேரன் போலிருப்பார். குழந்தைகளிடம் கரிசனம் அதிகம்; தன் ஒரே மகளைக் கூட ஆறு மாதத்திலேயே day care-ல் போட்டுவிட்டார்!

"என்னாங்க...நாலு தோசைய விண்டு போட்டுண்டு அந்தண்டை இந்தண்டை பாக்காமெ கீழ எறங்கி போயிருங்கோ. ஆபிஸ் போர நேரத்துல இதெல்லாம் நமக்கெதுக்குன்னா...நன்னாவா இருக்கும்?..." -இது சுவற்றில் காதை வைத்து ஒட்டுக் கேட்கும் எதிர்த்த பிளாட் கல்யாணி மாமி-யின் குரல். 'நீ சொன்னா சரிதாண்டீ'-மாமா சுடச்சுட எண்ணெய் வழியும் கல்தோசையை விண்டவாறே சொன்னார்.
"ஏண்டி, நீ பாத்தியா? உனக்கெதாவது தெரியுமா?" -இரண்டாவது ப்ளாட்டில் குடியிருக்கும் பூர்ணி. "என்னாவோ, என்ன விஷயமோ; அத பத்தி தெரியாதா நமக்கு... ஏதாவது நடந்துருக்கும். அதான் பொசுக்குன்னு இப்படி பண்ணிடுத்து போல" -இது நான்காவது ப்ளாட் இரண்டாவது தளத்தின் மகாலட்சுமி-யின் வாய்மொழி. இதிலென்ன விசேஷம்னா, இவங்க ரெண்டு பேரும் சியாமா அக்காவின் குடும்பத்தினர்  ஒருத்தரிடமும் இங்கு வந்த ஐந்து வருடங்களில் மொத்தமாக ஐந்து நிமிடங்கள் கூட பேசினதில்லை.

சியாமா அக்காவின் பெரியம்மா பையனை அபார்ட்மெண்ட் போர்டிகோவில் பார்த்த கோமதி பாட்டி, "என்னடா பாலு, இப்படி ஆயிடுச்சே. பரவாயில்லடா. இன்னைக்கு நல்ல முகூர்த்தம், கார்த்திகை வேற; அதுவும் எந்த ப்ராணாவஸ்தையும் இல்லாமெ இப்படி அக்கடா-ன்னு சுகமா போறதுக்கு குடுத்து வெச்சுருக்கணுமே...எனக்குதான் எப்படி வாய்க்குமோ தெரியல..." என்று தன் பொக்கை வாய் தெரிய சிரித்தபடி பொறாமைப் பட்டாள்.

இதற்கிடையில், பாங்க் மேனேஜர் மாமாவும், இன்ஜினியர் கோபி-யும், சூப்பர்வைசர் சாரும் நீண்ட யோசனைக்குப் பிறகு சியாமா அக்காவின் ப்ளாட்டுக்கு கசங்கிய லுங்கியுடன் அழுக்குச் சட்டையை மாட்டிக்கொண்டு, மறக்காமல் கர்சீப்-ஐ எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வீட்டில் ஒரு ஓரமாக சில நிமிடங்கள் கர்சீப்பால் வாயை மூடிக் கொண்டு நின்று தங்கள் கடமையை செவ்வனே செய்து முடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

திமு திமுவென்று படிகளில் இறங்கி வந்த சியாமா அக்காவின் குண்டு குட்டித் தம்பியைப் பார்த்து சொட்டை சந்துரு uncle நமுட்டுச் சிரிப்புடன் கேட்டார்:"என்னடா, உன் ரூட்டு க்ளியரா?..." புரிந்தோ புரியாமலோ அவன் சொல்கிறான், "ஆமா மாமா, வாசனை ஊதுபத்தி வாங்கிட்டு வரப் போறேன். அம்மா காத்திருக்கா" என்று விட்டு கடைக்கு ஓடுகிறான் அவன்.

"கர்த்தாவே, சின்னப் பிள்ளையாச்சே, அதுக்கு மோட்சத்த குடு ஆண்டவரே..."-இது சேரியில் இருந்து விட்டு, பின் ப்ளாட்டுக்குக் குடிவந்த குற்றத்துக்காக எல்லாருக்கும் எதிரியாகிப் போன சுசீலா மேரி ஆன்ட்டி-யின் 5 நொடி அனுதாபம். அவசரமாகக் கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்த பிருந்தா டீச்சரைப் பார்த்து சொல்லி விட்டு நேற்று இரவு மிகுதியான சிக்கன் பிரட்டலை சூடு படுத்தப் போய்விட்டாள். அவள் பிள்ளைக்கு சிக்கன் இல்லாமல் சோறே இறங்காதாம்; அதில் எப்போதும் அவளுக்குப் பெருமைதான்.

சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வந்து விட்டது. வந்திருந்த கார்களும், பைக்குகளும் ஒவ்வொன்றாக காணாமல் போயின. மனிதத் தலைகள் அவசரமாக கதவுகளுக்கு உள்ளே இழுத்துகொள்ளப்பட்டன. இவ்வளவையும் எந்தச் சலனமும் இன்றி பார்த்துக் கொண்டு, சிக்கன் பிரட்டலின் வாசனையை முகர்ந்தவாறே ஆம்புலன்ஸில் ஏறினாள் சியாமா அக்கா. நிரந்தரமாய் முகத்தில் ஒரு சிரிப்பு தங்கி நிற்கிறது, சுவரில் மாட்டியிருக்கும் மாலை சூட்டப் பட்ட அவளுடைய போட்டோவில்.

0 comments: