Sep 22, 2013

அனிதா என்றொரு சின்னஞ்சிறுமி!

மிக நீண்ட காலத்திற்குப் பின், அந்த தேவாலய வளாகத்தின் உள் நுழைந்து, வெகு நேரம் நடந்து கொண்டிருந்தேன். உச்சிப் பொழுது சுள்ளென சுட்டது. கால்களில் வலி உணர்ந்து ஒரு மாமரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டேன். அதன் எதிரே பரந்த மரங்கள் சூழ்ந்த மணற்பரப்பு; தூரத்தில் சில கட்டடங்கள்; இடப்புறத்தில் தேவாலயமும், அதை ஒட்டி பாதிரிகள் தங்கும் விடுதியும் இருந்தது. பல ஆண்டுகளாகியும் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை. இதே தேவாலய மணற்பரப்பில் தான் நாங்கள் மாலை நேரங்களில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். நான், ரூபி, லில்லியன், மெர்சி, கரோலின்,... அப்புறம் அனிதா...

'அனிதா',... எங்களுடைய உறவினரான Uncle ரே-இன் செல்ல மகள்; சிஜு, கவி அக்காக்களுக்கு இளையவள்; எனக்கு 8 வயது மூத்தவள். Uncle ரே-யின் குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல பிணைப்பு இருந்தது. எங்களுடைய குடும்பங்களானது கட்டுப்பாடுகள் நிறைந்த கட்டமைப்பைக் கொண்டதாக இருந்தது. இருப்பினும், எல்லா பள்ளி முடிந்த மாலை நேரங்களிலும் நாங்கள் தேவாலயத்தின் மரங்கள் சூழப்பட்ட அந்த மணற்பரப்பில் விளையாடும்படி பெரியவர்களால் விதிக்கப்பட்டிருந்தோம்.
எங்கள் எல்லாரிலும் சூட்டிகையானவள் அனிதா; மாறுபட்டவளும் கூட! அவள் தினமும் தன்னுடைய 'லேடி பேர்டு' சைக்கிளை உருட்டியபடியே தான் தேவாலயத்திற்குள் நுழைவாள். கருப்பு அல்லாத வெளிர் 'ப்ரவுன்' நிறம் கொண்ட கலையான முகம்; முன் இரு பற்கள் கொஞ்சம் பெரிதாய் துருத்தியபடிக்கு எப்போதும் ஒரு புன்னகைத் தங்கி இருக்கும். எல்லா நாட்களிலும் அவள் டி-சர்ட்டும், முழங்கால் வரை நீண்ட ஸ்கர்ட்-ம் அணிவதையே வழக்கமாகக் கொண்டவள்; அதிலும் அடர் நிறங்களைத் தவிர்த்து புள்ளிகளையும், கோடுகளையும் விரும்புபவளாக இருந்தாள். அவளுடைய நடையும், குரலும் எங்களிலிருந்து அவளைத் தனித்து காட்டும்.

உறவின் முறையானாலும் பெரும்பாலும் அவளை ஞாயிறு திருப்பலியின் போதே அருகே சந்திக்க நேரிடும். மற்ற நாட்களில் அவள் தேவாலயத்திற்கு வந்தாலும் எங்களுடன் விளையாடுவது அரிது. அவளுக்குப் பையன்களுடனான இயல்பான நட்புதான் எப்போதும் பிடித்திருந்தது. ஞாயிறு திருப்பலிக்குப் பிறகு நாங்கள் மாமரங்களுக்கு கீழே அமர்ந்து ஓய்வெடுக்கும் நேரங்களில் அனிதா எங்களுடன் கலந்து கொள்வாள்.
அவள் எங்களெல்லாரையும் விட அதிகம் பேசுபவளாக இருந்தாள். நாங்கள் மாங்காய்களின் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அனிதா நாங்கள் இதுவரை அறிந்திராத, 'மல்பெர்ரி இலை'களைப் பற்றியும், அவற்றை விரும்பி உண்ணும் பட்டுப் புழுக்களைப் பற்றியும் சொல்லுவாள். சில சமயங்களில் தேவாலயத்திற்குப் பின்புறமுள்ள சேரிக் குடியிருப்பிலிருந்து ஏதாவதொரு அழுக்குக் குழந்தையை 'லேடி பேர்ட்'-ல் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். அல்லது தனிமையில் அமர்ந்து தன் சைக்கிளின் பெடல்களைச் சுழற்றிக் கொண்டிருப்பாள். அனிதாவின் இந்த செய்கைகள் எனக்கு கூட்டிலிருந்து விடுபட்ட ஒரு மகிழ்ச்சியான பறவையைப் போன்றதாயிருந்தது.

பின் வந்த சில நாட்களில், எங்கள் குடும்பத்துச் சிறுவர் சிறுமியர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தேவாலயத்திற்குச் சென்று விளையாட வீட்டுப் பெரியவர்கள் தடை விதித்தார்கள். அவர்கள் அனிதாவின் மீது கடுங்கோபத்தில் இருந்தது மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. அதற்குப் பின் ஞாயிறு திருப்பலியின் போது கூட நாங்கள் அவளைப் பார்க்கவில்லை.

அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது ஒருநாள் காலையில் அப்பா என்னையும் கூட்டிக் கொண்டு Uncle ரே-யின் வீட்டுக்குப் போனார். அவருடையது பல அறைகளைக் கொண்ட பகட்டான வீடு. நாங்கள் அங்கே  அனிதாவைப் பார்த்தோம்.  ஆனால், அவள் கூடத்தின் ஒரு மூலையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் வந்ததை கவனித்தும் அவள் 'தூங்கிக் கொண்டிருந்தாள்'. யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அப்பாவும் Uncle ரே-யும் பேசிக் கொண்டிருக்க, நான் மிரள மிரள அவளையே பார்த்தபடி இருந்தேன். Aunty ஐரின் ரே எனக்கு பால் கலந்து வந்தாள். சில நிமிடங்களில் அனிதாவின் அருகிலிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தை அழுதது; அனிதா இருண்ட கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள்; அவள் சிரிக்க மறந்து போயிருந்தாள் போலும். அவள் படுத்தவாறே எதையும், யாரையும் பொருட்படுத்தாமல் அந்தக் குழந்தைக்குப் பசியாற்றி விட்டு மீண்டும் தூங்கிப் போனாள்.

பின் Uncle ரே எனக்கு சிவப்புக் ஜிகினா காகிதத்தில் சுற்றப்பட்ட பெரிய சாக்லெட் ஒன்றைத் தந்தார். நாங்கள் கிளம்ப ஆயத்தமான போது, சிஜு அக்காவின் கணவரான முகிலன் மாமா எனக்கு முன்பே சொன்னபடி 'டான்கிராம்' (Tangram) ஒன்றைப் பரிசளித்தார். அது முட்டை வடிவிலான 'டான்கிராம்'; அது பிரவுன் நிறத்தில் கண்ணாடி போல் பளபளப்பாக இருந்தது.
பின்பு வந்த திசம்பர் மாதத்தின் மத்தியில் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு அனிதா மரித்து போன செய்தியைக் கொண்டு வந்தது. தொடர்ந்து வந்த கிருத்துமஸ் Uncle ரே-யின் வீட்டில் விமரிசையாக நடந்தது. நாங்கள் அங்கு அனிதா-வையும், அவளுடையதும் எங்களுடையதுமான அந்த குட்டி ஜீவனையும் பார்க்கவில்லை.

"அது தொலைந்து போய் விட்டது!" -Aunty ஐரின் ரே எங்களுக்குச் சொன்னாள்.

"ஓ! அது தொலைந்து போய் விட்டது!" -நாங்கள் மீண்டும் சொல்லிக் கொண்டோம்.

நேரம் கடந்து கொண்டே இருக்க ஏதோ உணர்வால் உந்தப்பட்டு எழுந்து வேகவேகமாய் வீடு வந்தேன். எங்கோ பழைய பெட்டியில் அடைபட்டுக் கிடந்த அந்த 'டான்கிராம்', பிரவுன் நிற கண்ணாடி போல் பளபளத்த அந்த 'டான்கிராம்'-ஐத் தேடி எடுத்தேன். என்னுடைய பிரியமான முட்டை வடிவ 'டான்கிராம்' -நிறம் மங்கி, கீறல்கள் விழுந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த அதைப் பிரித்துக் கொட்டி, ஒரு மனித சிறுமியின் உருவத்தை வடிவமைக்கப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய முட்டை வடிவ 'டான்கிராம்'-ன் சில துண்டுகள் அப்போது தொலைந்து போய்விட்டிருந்தன.

'சிறுமியின் உருவம் முற்று பெறவில்லை'. Aunty ஐரின் ரே-யின் வார்த்தைகள் காதுகளில் உரக்கக் கேட்டது: "அது தொலைந்து போய் விட்டது!"

"ஓ! அது தொலைந்து போய் விட்டது...!..." -தடுமாறும் வார்த்தைகள் என்னுள்ளில் இருந்து இப்போது வெளிக்குக் கேட்கிறது.

0 comments: