Apr 28, 2013

தெருவோர தேவதூதன்!...


"வாசிக்க ஆளில்லை,
எனினும் 
வானப் புத்தகம் 
திறந்திருந்தது..." - வைரமுத்து சொல்கிறார்.

ஆம். உண்மையில் அன்றும் வானமெனும் புத்தகம் திறந்திருந்த போதும், அந்த மூன்றுமுனைச் சாலையின் ஜனக்கூட்டத்தில் ஒரு நல்ல வாசகனும் இருக்கவில்லை.

அந்த மூன்றுமுனைச் சாலையின் சந்திப்பு எப்போதும் போல் சற்று பரபரப்புடனும், சற்றே மெதுவாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. மூன்றாவதுச் சாலை நுழைவின் இடது புறத்தில் ஒரு பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் எதிரே ஒரு அரசியல் தலைவரின் சேதப்படுத்தப்பட்ட சிலை. அதற்குப் பின்புறத்தில் சில பல சின்ன கடைகள் சிலைக்குக் கீழே ஒரு கோணிப்பையின் மேல் சில பழைய செருப்புகள்; அவற்றில் பிய்ந்த செருப்புகள், ஜோடியிழந்த சில ஒற்றைச் செருப்புகள், மற்றும் பழைய ஊசி, பசை என இன்னும் சில இத்யாதிகள் அடங்கும்.

கோணிப்பைக் கடையின் உரிமையாளன் கலைந்த தலையுடனும், கசங்கிய அழுக்குப் படிந்த உடையுடனும் தன் தொழிலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான் போலும். அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் யாருடைய செருப்பும் அறுந்து போகவில்லை எனினும், யாரும் தன்னை நாடி, தன் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லையானாலும் - அவன் இல்லை என்றால் யாருடைய கால்களும் செருப்பணிந்து நடந்து செல்ல முடியாது என்பது போலவும், தானே அந்த மூன்றுமுனைச் சாலை மக்களின் கால் செருப்புகளை இயங்க வைக்கும் காரணகர்த்தா என நினைக்கும் பொருட்டு, அவன் தவறாமல் தன் கோணிப்பைக் கடையை அங்கு விரித்து விடுவான். தான் தினமும் இந்த உலகத்திற்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைக் கூற விரும்புவது போல் இருக்கும் அவனின் வருகை.

அவன் அப்போது ஒரு குச்சியை மெல்ல ஒரு காதில் விட்டு, எதையோ அதற்குள் தேடிக்கொண்டிருந்தான். நீர் குடித்த மேகம் வயிறு வெடித்து, பருகிய நீரையெல்லாம் அந்த மூன்றுமுனைச் சாலையின் மேல் தெளிக்கத் தொடங்கியது. ஜனக்கூட்டம் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடி ஒளிய, நமது கோணிப்பைக் கடைகாரன் மட்டும் தன் காதில் புதையல் தேடுவதில் மெய்ம்மறந்து லயித்திருந்தான். சிலையும் செருப்புகளும் நனைந்து கொண்டிருந்தன...

மேகத்தின் வயிறு மூடியவுடன், அந்தச் சாலை முழுக்கக் குளித்திருந்தது; மக்கள் எல்லாம் தங்களை நனையாதபடி காத்துக்கொண்டத் திருப்தியுடன் யதார்த்தமான போது, தன் கோணிப்பைக் கடையை மெதுவாகச் சுருட்டித் தோளில் போட்டுக்கொண்டு பிரதானச் சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அவன். அவன் முழுக்க நனைந்திருந்தான்; ஒழுங்கற்ற தன் பற்களைக் காட்டி வானத்தைப் பார்த்துச் சிரித்தவாறே அந்த மூன்றுமுனைச் சாலையைக் கடந்து போய் விட்டான் அவன்...

அடித்த மழையில் அந்தத் "தெருவோர தேவதூதனின்" அழுக்கடைந்த சட்டையும் வெளுத்திருந்தது!...