Jul 10, 2015

சென்னையின் சின்னம் – 'ஹிக்கின்பாதம்ஸ்'!

அந்தப் பெரிய இரு மரக்கதவுகளுக்குப் பின்னாலுள்ள கண்ணாடிக் கதவுகளையும் கடந்து வெள்ளையும் கருப்புமாக கலந்த கட்டங்கள் பளபளக்கும் தரைத்தளத்தில் கால்களைப் பதித்ததும் எங்கிருந்தோவொரு புத்துணர்வு பற்றிக் கொள்கிறது நம்மை!

ரம்யமான ஒரு அமைதி... இந்தோ-சர்சானிக் முறைப்படி கட்டப்பட்ட பழங்கால தேவாலயங்களை ஒத்த ஒரு மாளிகை அது... கட்டிடத்தின் நாற்புற மேற்கூரைகளுக்கு கீழும் பலவித வண்ணங்கள் மெருகேற்றப்பட்ட கண்ணாடி சாளரங்கள்... அவற்றிலிருந்து காற்றினைக் கிழித்துக்கொண்டு மெல்லிய சூரிய ஒளிக்கற்றைகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. உயரே பல கனவான்களின் வண்ண ஓவியங்கள் சுவற்றை அலங்கரித்தன.

சென்னையின் மிக முக்கியமான ஒரு இடமாகிய, போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையின் தூசி காற்றுக்கு சற்றும் ஒட்டிவராமல், இந்த விக்டோரிய ஆட்சி கால கட்டிடம் மிடுக்காய் நிற்கிறது. ஆம். அது Higginbothams என்னும் பழமையான புத்தகக்கடை தான்!

‘ஹிக்கின்பாதம்ஸ்’ 1844-இல் ஏபெல் ஜோஷுவா ஹிக்கின்பாதம் (Abel Joshua Higginbotham) என்பவரால் சிறு அளவில் தொடங்கப்பட்டது. யார் இந்த ஏபெல் ஜோஷுவா?

அன்றைய மதராஸ் மாகாணத்தின் தெருவில் தன்னுடைய கப்பல் தளபதியால் கைவிடப்பட்ட நிலையில் வந்திறங்கியவர் இந்த ஏபெல் ஜோஷுவா. (பிற்காலத்தில் இவர் சென்னை மாநகரின் ஷெரிப் ஆக உயர்ந்தது வேறு கதை)... இவ்வாறு நிர்க்கதியான ஜோஷுவா தொடக்க நாட்களில் இராணுவ வீரர்களுக்கு புனித பைபிள் நூலின் பிரதிகளை விற்கத் தொடங்கினார். பின்னர் கிறிஸ்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டுவந்த வெஸ்லியன் நூலகத்தில் (Wesleyan Book Depository) நூலகராகப் பணிசெய்தார்.

சில வருடங்களில் இந்த வெஸ்லியன் நூலகம் மூடப்பட்டதும் அங்கிருந்த புத்தகங்களையெல்லாம் ஜோஷ்வா-விடம் குறைந்த விலைக்கு ஒப்படைக்கப்பட்டன. இவற்றையே மூலதனமாகக் கொண்டு சென்னையின் மவுண்ட் ரோட்-ல் சிறு புத்தகக் கடை ஒன்றைத் துவக்கினார். ஜோஷ்வா-வின் புத்தக ஆர்வமும், வாசிப்பின் மீதான ஈடுபாடும் விற்பனையைப் பெருக்கி தொழிலை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவியது.

1869-ல் சூயஸ் கால்வாய் (Suez Canal) போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பல்வேறு பதிப்பக நூல்களையும் சென்னை கொண்டு வரவும், மற்றும் ஹிக்கின்பாதம்ஸ்-ன் கிளைகளை மற்ற நகரங்களில் நிறுவவும் ஏபெல் ஜோஷ்வா முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டார். இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவின் முக்கிய ரயிலடிகளிலும் ஹிக்கின்பாதம்ஸ்-ன் சிறு கிளை கடைகள் பயணிகளின் சேவைக்காக நிறுவப்பட்டன. மேலும் அதன் பெயரிலேயே அச்சகமும், பதிப்பகமும் தொடங்கப்பட்டன.

1859-ல் அன்றைய கவர்னர் லார்டு ட்ரெவேலியன் (Lord Trevelyan) அவர்கள், லார்டு மெக்காலே (Lord Macaulay) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சென்னை மாநகரில் தான் பெரிதும் கண்டு வியந்த ஒரு புத்தக கடையாக ஹிக்கின்பாதம்ஸ்-ஐ குறிப்பிடுகிறார். அதன் பின்னர் 1875-ல் வேல்ஸ் இளவரசர் (HRH Edward, Prince of Wales) அவர்களின் சென்னை வருகையின்போது ஹிக்கின்பாதம்ஸ்-கு பெருமை சேர்க்கும்படியாக அதனை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையாளராக தனது ராஜமுத்திரையுடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில மைய நூலகமான ‘கன்னிமாரா’ நூலகத்திற்கு 1890 முதல் 1920 வரை ஹிக்கின்பாதம்ஸ் குழுமம் மட்டுமே நூலக சேவைக்கான புத்தகங்களை வழங்கிவந்துள்ளது.


1891-ல் ஏபெல் ஜோஷ்வா ஹிக்கின்பாதம் அவர்களின் இறப்புக்குப் பின்னர் இந்தக் குழுமம் அவரின் மகனான C.H. Higginbotham அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்காலகட்டத்தில் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் மேலும் விரிவு செய்யப்பட்டு, இப்போதிருக்கும் பெரிய வளைவுகளைக் கொண்ட வெள்ளை மாளிகையாக புதுப்பொலிவு பெற்றது.

இருபதாம் நூற்றாண்டுகளின் தொடக்கங்களிலேயே இந்த ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் சென்னை மாநகரின் புகழ்பெற்ற ஓர் அடையாளமாக விளங்கியது.

இதுவரையில் ஆங்கிலேய ஹிக்கின்பாதம் குடும்பத்துக்கு சொந்தமாக இருந்துவந்த இந்த நிறுவனம் 1949-ல் அனந்தராமகிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், அதன் தொன்மையும் புகழும் மாறாமல் இந்நாள் வரையில் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு வந்துள்ளது.


காலங்கள் பல கடந்தும் உயர்ந்து நிற்கும் இந்த பிரம்மாண்ட கட்டிடத்துடன் புத்தகங்களால் பிணைக்கப்பட்டோர் எண்ணற்றவர்கள். பல்வேறு வகையான காலவெளிகளில் சமகாலத்தில் பயணம் செய்யும் பேறு புத்தக ஆர்வலர்களுக்கே கிடைக்குமெனக் கூறுவார்கள். அவ்வகையில், தொழில்நுட்ப வளர்ச்சிகள் எவ்வகையிலும் பாதிக்காதவாறு இருகரங்களிலும் புத்தகப் பிரியர்களை அள்ளி அள்ளி தன்னுள்ளே சேர்த்துக்கொள்ளும் இந்த வெள்ளை மாளிகை நிச்சயம் சென்னையின் சின்னமே!  

Jun 13, 2015

தொலைந்த தலைப்பு!

இக்கதை நண்பர் “நெல்லை ந.சங்கர்” அவர்களின் முதல் எழுத்து முயற்சி. நண்பர் மேலும் எழுத கதை சொல்லிகளின் வாழ்த்துகள்!

“மச்சீ... அப்பா லைன்-ல இருக்கார்...!
போன் எடுக்காத அளவுக்கு என்னடா வேல....? இந்தா பேசு....” – நிமிர்ந்து பார்த்தேன், கதிரேசன். யோசனையோடு போனை காதில் இருத்தினேன்.

“சொல்லுங்கப்பா... அம்மா எப்படி இருக்காங்க??...”

“ம்ம்... நல்லா இருக்கா... நீ எப்படி இருக்க?...” – அப்பாவின் குரலில் வழக்கம்போல பரிவு தெரிந்தது.

“வேல வேலைன்னு ரொம்ப கஷ்டப்படுற... ஊரில வந்து ஏதாவது வியாபாரம் பண்ணி சம்பாதிக்கலாமேடா... வயசான காலத்துல எங்களுக்கும் கூட இருந்த மாதிரி இருக்கும்னு சொன்னா கேட்கமாட்டேங்கிற...!!...”

“......” மௌனமாயிருந்தேன்!...

“புரியுது... இப்பல்லாம் ‘விவசாயி’ன்னா யார் மதிக்கிறா...
முப்போகம் விளைஞ்ச பூமில்லாம் கான்கிரீட்டால்ல ஆயிருச்சு...
சரி... இந்த வாரம் ஊருக்கு ஒரு எட்டு வந்துட்டுப் போ. அப்பா போனை வச்சுடுறேன்!!..”

மனசு கனத்தது!


“தேங்க்ஸ் டா மச்சான்!...” போனைக் கொடுத்தேன்.

சிறுவயதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் பசும் விளைநிலம் நினைவில் வந்து போனது. எத்தனைமுறை வரப்பில் சரியாக ஓட முடியாமல் விழுந்திருக்கிறேன்!

எத்தனைமுறை நெருஞ்சி முட்களை மிதித்து அழுதிருக்கிறேன்...!

எத்தனைமுறை சோளக்காட்டுக்குள்ளும், வாழைத் தோப்புக்குள்ளும் உருண்டு பிரண்டிருக்கிறோம்...!

எத்தனைமுறை கடற்கரை நாடார் தோட்டத்து கிணற்றில் முங்கு நீச்சல் அடிச்சிருக்கேன்... கடைசியாக அதே கடற்கரை நாடார் ஒரு ஏஜண்டுக்கு நிலத்தை விற்றுவிட்டு அழுது கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது!...

மனசு இன்னும் வலித்தது.

“கதிர், ஒரு காபி சாப்பிடலாமா...??”

ஏறிட்டுப் பார்த்தான். “என்னடா, மறுபடியும் ஃபீலிங்க்ஸா...?”

கார்ரிடாரில் நடக்க ஆரம்பித்தோம்.

“என்ன... மறுபடியும் ஊரு நெனைப்பா?...”

“ம்ம்...!!”

“சாரிப்பா... நான் சென்னைய தாண்டுனதில்ல. அதனால என்னால ஏதும் உணரமுடியலை...!”

உண்மைதான்! சென்னைவாசிகளுக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்...! – மௌனமாக மனசு கேட்டுக்கொண்டது.

“நான் ஒன்னு சொல்லட்டா...? இங்க இருந்து யாரோ ஒருத்தனுக்கு ராவும் பகலும் கஷ்டப்படுறதை ஏன் உங்க ஊரில உனக்காக செய்யக்கூடாது?...”

“டேய், வழியில்லாமத்தானே சாப்ட்வேரில குப்பைக் கொட்டிட்டு இருக்கேன்...!!?!”...
.........
.........

“எல...இன்னும் தூங்கலியா...?
எப்பப்பாரு கதை....கதைன்னு எதையாவது கிறுக்கறதே வேலையாப் போச்சு....
இந்த நேரத்துக்கு ஒழுங்கா புத்சகத்தை படிச்சாலாவது அரியர் இல்லாம இருக்கும்... போய் லைட்ட ஆப் பண்ணிட்டு தூங்குல....
மணி பன்னெண்டு ஆவுது!... கதை எழுதுறானாம்...கதை...!...”

- அம்மா அலுத்துக்கொண்டாள்!  இமைகளை மூடிக்கொண்டேன்!

Apr 24, 2015

படங்கள்!

படங்கள்: ஆயிஷா மைந்தன் (அப்துல் காதர்)
பாடல்: 'மாக்கவிஞன் பாரதி' (பகைவனுக்கு அருள்வாய்)

புகை நடுவினில் தீயிருப்பதைப் 
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே!


பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்!


சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
     செய்தி யறியாயோ? – நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சங் குருக்கத்திக்
     கொடி வளராதோ? - நன்னெஞ்சே!


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
     உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே!