Oct 3, 2025

இளையோர் கரங்கள் இணையட்டும்!

 ஆன்றோரும் சான்றோரும் அகிலத்துப் பெரியோரும்

ஆய்ந்துதான் தேடிடும் அமைதி – உலகின்

வல்லரசு, நல்லரசு அறங்கூறும் பொதுவரசு

யாவரும் நாடிடும் அமைதி!

 

வன்முறைப் பேய்களால் வன்சாதி நோய்களால்

வரலாற்றில் கறையாகலாமா? – நல்ல

பொன்னான பூமிதனை புண்ணாக்கியே நிற்க

நல்லோர்கள் பாதை தரலாமா?

 

புவியதை மாற்ற புதுயுகம் ஆக்க

இளைஞர்கள் எழுந்து வர வேண்டும்!

கவினூறும் வையத்தில் அன்புதனை காட்டியே

அமைதிக்குப் பாதையிட வேண்டும்!

 

பழங்கதை தான்பேசி பசியோடு நாள்போக்கி

சோம்பிடும் கூட்டம் ஒழிந்திடல் வேண்டும்!

அழகோடு அறிவியலும் அறங்கூறும் வாழ்வியலும்

பழகிடும் இளையோர் வளர்ந்திடல் வேண்டும்!

 

வீட்டின் நலமும் நாட்டின் வளமும்

நாடி உழைத்திடல் வேண்டும்!

அறிவினை பெருக்கி அறியாமை நீக்கி – பொது

தொண்டில் தோய்ந்திடல் வேண்டும்!

 

அறிவியல் கல்வி ஆன்மிகம் தன்னில்

இளைஞர்கள் மூழ்கிட வேண்டும்! – நம்

பாரதி நெறியில் பற்பல கலைகளை

பாரினில் பரப்பிடல் வேண்டும்!

 

மனிதனைக் காக்கும் மாண்பதைக் கூறும்

நூல்களை போற்றிடல் வேண்டும் – இளையோர்

உண்மையின் நெறியில் உளமதை ஊக்கி

அமைதியை காத்திட வேண்டும்!

 

தன்னலமில்லா வையம் சமைத்திட

இளையோர் உலகம் எழுந்திடல் வேண்டும்!

மண்ணின் மீதில் அமைதி தவழ்ந்திட

இளையோர் கரங்கள் இணைந்திடல் வேண்டும்!

0 comments: