Jun 29, 2014

சென்னை மாநகர் - 1

குறிப்புதவி நூல்: “சென்னை மாநகர்” ஆசிரியர்: மா.சு.சம்பந்தன்
பதிப்பாண்டு: (1978) இரண்டாம் பதிப்பு

(நூலிலிருந்து ஒரு பகுதி)

சென்னையின் வரலாற்றுக் காலம்:


சென்னையின் பழம் வரலாற்றை அறிவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கும் பழைய நூல் தொல்காப்பியம். இதன் காலம் ஏறக்குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டாகும். இந்நூலுக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார், தமிழகத்தின் பண்டைய எல்லையைக் குறிக்கும் சிறு குறிப்பு ஒன்று தந்துள்ளார். அது, வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து என்பதாகும். இதனால் தமிழகத்தின் வடவெல்லை வடவேங்கட மலையும், தென்னெல்லை தென்குமரியும் என்றறிகிறோம். மேற்கிலும் கிழக்கிலும் கடல் இருப்பதால் அவை கூறப்படவில்லை.

மேலே சொன்ன தமிழ் கூறும் நல்லுலகம்” என்னும் தொடர் பண்டைக்காலத்தே தமிழ்நாடு பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததைக் குறிப்பதாகும். அவை: தென்பாண்டி நாடு, குட்டநாடு குடாநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, சீதநாடு, மலாடு, புனல் நாடு என்பனவாகும். இவைகளையே தொல்காப்பியரும் செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலம்” என்று கூறினார்.

தமிழகம் மேற்சொன்ன பன்னிரண்டு சிறு சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுக் குறுநில மன்னர்களாலும், பெருநில மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்துள்ளது. அவைகளையே சேரநாடு, பாண்டி நாடு, சோழ நாடு, தொண்டை நாடு என்ற பெரும் பிரிவுக்குள் அடக்கி பண்டை வேந்தர்களான சேர சோழ பாண்டிய தொண்டையர் ஆண்டு வந்தனர்.

தற்போதைய கொச்சி--திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேரநாடு. புதுக்கோட்டை பகுதியிலுள்ள வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டிய நாடு. தென் வெள்ளாற்றுக்கும் வட வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ள நிலமே சோழநாடு.


வெள்ளாற்றுக்கு வடக்கிலும், வேங்கடத்துக்கு தெற்கிலும் உள்ள பகுதியே அருவா வடதலை, அருவா நாடு என்பனவற்றின் எல்லையாகும். அருவா நாடு என்பதில் காஞ்சி நகரம் உட்பட்டது. காஞ்சி முதல் வட பெண்ணை வரை பரவியிருந்த நிலப்பகுதியே அருவா வடதலை என்பது. ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்குமுன் அருவா வடதலை நாட்டைத் திரையன்என்பவன் ஆண்டு வந்தான். அவனது தலைநகர் பவத்திரிஎன்பது. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இளந்திரையன்என்பவன் அருவா நாட்டை முன்னவனின் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவந்துள்ளான். இவர்களைத் தவிர புல்லிஎன்பவன் வேங்கட மலைப்பகுதியை ஆண்டுவந்தான். மேற்கூறிய இரு பகுதிகளும் சேர்ந்து பிற்காலத்தில் தொண்டை நாடு எனப்பட்டது.

கரிகாலன் தொண்டை நாட்டில் காடு கெடுத்து நாடாக்கினான் என்னும் நூல் வழக்கு இருப்பதால், தொண்டை நாட்டின் பெரும்பகுதி காடாகவே இருந்தது என்று தெரிகிறது. சங்ககாலத்தின் கடைசியில் வாழ்ந்த சோழர் தொண்டை நாட்டை இரு கூறாக்கினர். 1. நடு நாடு 2. தொண்டை நாடு. இதற்கு பின்னரே தொண்டை நாடு 24 கோட்டங்களாகவும், சிறு சிறு உள் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டுத் தொண்டை வேந்தர்களால் ஆளப்பட்டது.

இனி 24 கோட்டங்கள் யாவை என்பதைக் கவனிப்போம்.

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம்,4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்தூர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14. இளங்காட்டுக் கோட்டம், 15. காலியூர்க்கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. பழுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவர்த்தனக் கோட்டம், 21. வேங்கடக் கோட்டம், 22. சேத்தூர்க் கோட்டம், 23. வேலூர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்
என்பவையே அவை.

இக்கோட்டங்களில் சென்னையையும் அதைச் சூழ்ந்துள்ள ஊர்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கினவை புழல், புலியூர், மணவில் என்னும் மூன்று கோட்டங்களாகும்.

இத்தகைய தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள நமது சென்னை மாநகரின் சுற்றுப் புறத்து ஊர்களைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 comments:

alagan07 said...

I have the original old copy (1978)

தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன் said...

@alagan07,

Even we do have the same copy. Its an interesting book on Chennai.
Thanks for your comment!