Oct 18, 2025

நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்!...

             ஒவ்வொரு மொழியின் வளர்ச்சியிலும், காலத்துக்குக் காலம், அம்மொழியின் இலக்கியம் புதுப்புது வடிவம் பெறுவது சரித்திரத்தில் நாம் காணும் உண்மை. ஒரு மொழியின் பழமை, அம்மொழி பேசுபவர்களின் சமூக அமைப்பு, மற்றைய இனத்தவர்களுடன் கொள்ளும் தொடர்பு, வேற்று மொழிகளின் பாதிப்பு – இத்தகைய காரணங்களால் இலக்கியம் புதுப்புது வடிவங்களைப் பெறலாம்.

 

இத்தகைய புதிய வடிவங்களையும், வகைகளையும் பார்த்தால், காலத்துக்குக் காலம் நமது தமிழ் இலக்கியம் பற்பல துறைகளை வளர்த்துக் கொண்டதைக் காணலாம்.

 

சமணர், பௌத்தர் வருகையாலும், வடமொழிப் புராணங்கள், இதிகாசங்களின் செரிவாலும், தத்துவக் கருத்துகள், இசையுணர்வு முதலியவற்றின் உந்துதலாலும், தமிழ் இலக்கியம் புதுப்புது துறைகளையும் அவற்றிற்குப் பிரத்தியேகமான வடிவங்களையும் வளர்த்துக் கொண்டது. அவ்வழியில் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதாக வந்து சேர்ந்தது ‘நாவல் என்ற துறை.

 

ஆங்கிலப் பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழகங்களும் ஆங்கில மொழி இலக்கியங்களைப் போதித்த நாட்களில், ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் கட்டாயமாக “ஆங்கில நாவல்”களையும் கற்க வேண்டியிருந்தது.

 

ஆங்கில நாவல் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தோன்றி வளர்ந்து, பெருமளவில் இலக்கிய அந்தஸ்தைப் பெற்று, நூறு ஆண்டுகள் கழித்த பின்னரே நம் நாட்டவர் அவற்றைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்து.

 

ஆரம்ப கால நாவலாசிரியர்கள் ஆங்கிலப் படைப்புகளை மாதிரியாகக் கொண்டு தமிழில் புதுமையாகப் படித்தபோது, மேனாட்டு மரபுகளின் பாதிப்பால் தமிழர் பண்பாடு மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டது, அவர்களின் கதையின் பொருளிலும், போக்கிலும் காணக்கூடியதாய் இருந்தது.

 

ஆங்கிலம் மட்டுமின்றி மற்றும் மேல்நாட்டு நாவல்கள் பலவற்றின் தாக்கம் ஏற்பட்டபோது புலனாகிய இலக்கிய உணர்வு, தமிழ் நாவலாசிரியர்கள் மேலும் வளர்ச்சி பெற நேரடியாக உதவிற்று.

 

இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுதப்பட்டு வெளிவந்த நாவல் வங்காளத்தில், பங்கிம் சந்திரர் எழுதிய 'துர்க்கேச நந்தினி' என்று சொல்லப்படுகின்றது. இது வெளிவந்தது 1865-ல்.

 

இதன் பின்னர் இரண்டாவதாக வெளிவந்த நாவல் தமிழ் மொழிக்கிப் பெருமை தேடித்தந்த 'பிரதாப முதலியார் சரித்திரம்'. மாயூரம் வேதநாயகம்பிள்ளை இதை எழுதிப் பிரசுரித்தது 1879-ம் ஆண்டில்.

 

தமிழ் நாவலுக்கு அடுத்ததாக 1880-ல் வெளிவந்தது தெலுங்கு நாவல், 'ராஜகேர சரித்திரமு'. இதன் ஆசிரியர் ராஜாமகேந்திரம் அரசினர் கல்லூரியில் தெலுங்குப் பண்டிதராயிருந்த வீரேசலிங்கம் பந்துலு.

 

இதையடுத்து 1887-ல் தான் மலையாள நாவல் 'குண்டலதா' என்ற பெயரில் அப்புநெடுங்காடி என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. வேதநாயகம் பிள்ளையின் 'சுகுண சுந்தரி' என்ற இரண்டாவது நாவலும் இதே ஆண்டில் தான் வெளிவந்திருக்கிறது.

 

பின்னர், 1890-ம் ஆண்டிலே 'ஊசோன் பாலந்தை கதை' என்ற நாவல் ஈழநாட்டில் வெளியிடப்பட்டது. இது இலங்கையின் இன்னாசித்தம்பி என்பவரால், போர்த்துக்கல் மொழிக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னரே 1885-ல் மற்றொரு நாவல் 'அஸன் பே சரித்திரம்' என்ற பெயரில் ஈழநாட்டில் வெளிவந்திருக்கிறது. இதனை எழுதியவர் ‘சித்திலெவ்வை என்ற ஆசிரியர்.

 

    இவைகளைத் தவிர, 1856-ம் ஆண்டிலே 'காவலப்பன் கதை' என்ற நாவல் யாழ்ப்பானத்தில் வெளியிடப்பட்டதாகவும் ஒரு செய்தியுண்டு.

 

நாவலாசிரியரின் கற்பனாசக்திக்கும், கருத்தாழத்துக்கும், சமுதாய நோக்கிற்கும், உணர்ச்சி வெளியீட்டுக்கும், கலை நுகர்ச்சித் திறனுக்கும், பார்த்து, கிரகித்து, எடுத்துச் சொல்லும் திறமைக்கும் ஏற்றவாறு சில பிரபல படைப்பாளிகள் தமக்கெனத் தனி நடையும் வகுத்துக் கொண்டார்கள். இன்றைய சிறந்த நாவலாசிரியர்களில் சிலருடைய நடையைப் படிக்கும்போது இன்னார்தான் எழுதியிருக்க முடியும் என்று நிர்ணயிப்பதற்கான அடையாளங்களைக் கண்டு கொள்ளலாம். இவ்வகையில் வாசகர்கள் இனம் கண்டு கொள்ளும் நடையில் நாவல்கள் எழுதும் ஆசிரியர்கள் சிலரின் நடைகளுக்கு உதாரணங்கள் சிலவற்றைக் காணலாம்.

 

மாயூரம் வேதநாயகம்பிள்ளை:

மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆங்கில இலக்கியங்களைப் படித்து நீதிபதியாகத் தொண்டாற்றியவர். அத்துடன் நிரம்பிய தமிழிலக்கியப் பயிற்சியும் பெற்றவர். இவரது முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம் என்பது கதைத்தலைவரான பிரதாப முதலியாரே தன் கதையைக் கூறும் பாணியில் அமைத்துள்ளார். இந்நாவல் தெவிட்டாத நடையும், குறையாத சுவையும் கொண்டதாக அமைந்தது. இந்நாவலே தமிழில் தோன்றிய முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வேதநாயகம் பிள்ளை அவர்கள் ‘சுகுண சுந்தரி என்னும் மற்றொரு நாவலையும் எழுதினார். 

 

ராஜம் ஐயர்:

நாவல் வரலாற்று ரீதியில் ‘பிரதாப முதலியார் சரித்திரம் தான் முதன் நாவல் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும், நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் திறனாய்வு அடிப்படையில் முதலிடத்தைப் பெற வேண்டியது ராஜம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரம் என்பது இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் முடிவு. தமிழ் நாவல் இலக்கியத்திலே ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ராஜம் ஐயர். ராஜம் ஐயர் தமது இருபத்தியோராவது வயதிலேயே நாவல் எழுதத் தொடங்கினார். சாதாரணமாக உலகானுபவம் நிரம்பப்பெற்று, நிரந்தர இலக்கியத்தை தன்மை பெரும் நாவலை எழுதுவதற்கு, குறைந்தது நாற்பது வயதாவது செல்ல வேண்டுமென்பது அறிஞர் சிலரது கருத்து. ஆகையால் இளம் வயதில் நாவல் எழுதிய ராஜம் ஐயர் மேதைகள் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்.

 

மாதவய்யர்:

‘பத்மாவதி சரித்திரம் என்னும் நாவலையே முதன்முதலாக மாதவய்யர் படைத்தார். கதைக்கருவிலும், அமைப்பிலும் மிகுந்த திருத்தங்களைச் செய்த முதல் நாவலாசிரியர் இவரே. இவரது பிற நாவல்கள் விஜயமார்த்தாண்டம், முத்துமீனாட்சி, தில்லை கோவிந்தன், சாவித்திரி சரித்திரம் போன்றவைகளாகும். மாதவய்யர் ஆங்கிலத்தில் நாவல் படைக்கும் திறன் நிரம்பப் பெற்றவராவார். 

 

க.ம.நடேச சாஸ்திரி:


ராஜம் அய்யர், மாதவய்யர் ஆகியோரின் சமகாலத்தவரான இவர் தமிழ் நாவல் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஓர் ஆசிரியர். ஆங்கிலத்திலும், தமிழிலும் கதை இலக்கியத்துக்குப் பெருமை தேடித்தந்தவர். 1900-ல் தமது முதல் நாவலான ‘தீனதயாளு படைத்தார். 1894-ஆண்டிலேயே நடேச சாஸ்திரி ‘தானவன் என்ற துப்பறியும் நாவல் ஒன்று எழுதி வெளியிட்டார். 1900-க்கும் 1906-க்குமிடையில் நடேச சாஸ்திரி கோமளம் குமரியனது, திக்கற்ற இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை மந்திரோபதேசம் முதலிய பலவகையான நாவல்களை எழுதி வெளிட்டார்.

 

இந்திரா பார்த்தசாரதி:

நமது நாட்டில் நடமாடும் சில போலிகளின் தன்மையை இந்திரா பார்த்தசாரதியின் ‘தந்திர பூமி (1969), ‘சுதந்திர பூமி (1970) ஆகிய இரண்டு நாவல்களும் விளக்குகின்றன. ‘சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான ‘குருதிப் புனல்-இல் தஞ்சை மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபரீத சம்பவத்தை சம கால உணர்வுடனும், தாரதம்மிய நோக்குடனும் இந்திர பார்த்தசாரதி கையாண்டிருக்கிறார். 


 கு.ராஜவேலு:


விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட ‘கல்கியின் ‘அலையோசை எனும் நாவலைத் தொடர்ந்து வெளிவந்தது, கு.ராஜவேலு-வின் ‘1942’ என்னும் நாவல். இவர் மாணவப் பருவத்திலேயே நாவல் எழுதி பரிசு பெற்றவர் ஆவார். இவரது மற்ற நாவல்கள்: காதல் தூங்குகிறது, மகிழம்பூ, இளவேனில், வானவீதி ஆகியனவாகும்.

 

நா.பார்த்தசாரதி:

நா.பார்த்தசாரதி அவர்கள் தம் கதைகளுக்கு வேண்டிய கருப்பொருளை, பெரும்பாலும் பழந்தமிழ் வரலாற்றிலும் அண்டை இராஜ்யங்களின் வரலாற்றிலும் இருந்து தேடிச் சேர்த்தவர். சமுதாய நாடகங்கள் படைப்பதில் வல்லவர். ஆத்மாவின் ராகங்கள், சத்திய வெள்ளம், நெஞ்சக்கனல், குறிஞ்சி மலர், சமுதாய வீதி, பொன் விலங்கு போன்றவை இவர்தம் படைப்புகளாகும். 

 

கல்கி:


ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற இவர், ‘கல்கி என்னும் புனைப்பெயர் கொண்டு பெரும் புகழீட்டியவர். இவர் ‘தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்டு என்று போற்றப்படுகிறார். தமது இருபத்துமூன்றாவது வயதிலேயே ‘விமலா என்ற நாவலைப் படைத்து இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, ஓராண்டு சிறை தண்டனை ஏற்றுக்கொண்டபோது, சிறையில் இந்நாவலை எழுதினார். இதிகாசங்களைப் போன்ற பல பெரிய வரலாற்று நாவல்களைப் படைத்த கல்கியின் இரண்டாவது நாவல், ‘கள்வனின் காதலி. இதனையடுத்து 1939-ல் கல்கியின் ‘தியாக பூமி என்ற நாவல் வெளியானது. இவரது கடைசி நாவல் ‘அமரதாரா என்பதாகும்.

 

அகிலன்:

‘பெண் என்ற பெயரில் முதல் நாவலை எழுதிய அகிலன், தனது நாவல்கள் எல்லாவற்றிலுமே பெண்ணைத்தான் காட்சிப்பொருளாக வைத்துக் கொண்டார். பாவை விளக்கு, சித்திரப் பாவை, எங்கே போகிறோம்?, புது வெள்ளம் போன்றவை இவரின் சிறந்த நாவல்களாகும். இவரது கதாபாத்திரங்கள் வாயிலாக இவர் போலிக் கலையுணர்வை ஆத்திரத்தோடு சாடுவது வெளியாகிறது. மிகுந்த கற்பனை வளம் கொண்ட இவர், ஞானபீடப்பரிசு முதல் சாகித்ய அகாடமி பரிசு, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு போன்ற பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 

 

மேல் நாட்டிலிருந்து வந்த இலக்கிய வடிவான நாவல், நமது மொழியில் முழுமை பெற்று, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருப்பது, நம் தமிழ் நாவலாசிரியர்களுக்குப் புகழ் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

 

  தமிழ் நாவல், தன்னுடைய வளர்ச்சியில் பலப்பல புதுமைகளைப் புகுத்தியும், அடிக்கடி தொடக்க காலப் பண்புகளை உள்ளடக்கியும் ஒரே சீராக முன்னேறி வந்திருக்கிறது. மக்கள் பொழுதுபோக்குக்காகத்தான் நாவல் என்ற உணர்வைப் புறக்கணித்து, படைப்புகள் காலத்தை வென்று நிற்க வேண்டுமென்ற இலட்சியத்தைப் பின்பற்றினால், தமிழ் நாவல் இலக்கியம் இன்னும் பலவகைகளில் வளர்ச்சியடைந்து நம் தமிழுக்குப் புகழ்க்கூட்டும் என்பது உறுதி!

Oct 17, 2025

பாரதரத்னா-டாக்டர். M.G. இராமச்சந்திரன்!

(இக்கட்டுரை திரு. M.G. இராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 24-ஆம் நாள், எங்கள் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சியில் 2008-ஆம் ஆண்டு ‘கேப்டன் விஜயகாந்த்’ அவர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.)

 

    நமது பரந்த பாரத மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்னும் ஏழை எளியோர் மற்றும் நல்லோர் நெஞ்சங்களிலே ஒளியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, “பாரதரத்னா” டாக்டர்.எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இன்று நினைவு நாள்!


     உலகில் பலருக்கும் நினைவுநாள் வருவது இயல்பு. ஆனால், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏழை எளியோர்களும், ஏன்? நடைபாதையிலே வசிக்கின்ற கைவண்டி இழுப்பவரும் கூட தங்களது தெய்வமாக எண்ணி, ஒரு புகைப்படத்தைச் சுவரிலே ஒட்டிவைத்து கற்பூரத் தீபமேற்றி, மெழுகுவர்த்தி ஏற்றி கோயில் தெய்வத்தை வணங்குவது போல வணங்கி மகிழ்வது, ‘பரங்கிமலை பாரி என்றும் ‘ஏழைகளின் வள்ளல் என்றும் ‘மக்கள் திலகம் என்றும் ‘புரட்சித்தலைவர் என்றும் ‘பாரதரத்னா என்றும், இன்றும் அழைக்கப்படுகின்ற எம்.ஜி.ஆர்.ஒருவரை மட்டுமே.


     வாழ்வின் நல்லதொரு நிலையில், இலங்கை, கண்டியில் பிறந்தாலும் தமிழ் மண்ணில் வறுமையோடுதான் அவரது வாழ்வு தொடங்கியிருக்கிறது. கலைத்தாய் அவரை மகனாகத் தத்தெடுத்து கொண்ட போது அவருக்கே கூட தெரியாது, இந்தத் தமிழ்நாட்டின் செல்லமகனாக, செல்வமகனாக தாம் ஆவோம் என்று! நாடக உலகிலும், திரை உலகிலும், தொடர்ந்த அவரது இளமைப் பயணத்தில், காந்திய கொள்கைகளும், கதராடையும் அவரை ஆட்கொண்டு விரிந்ததொரு தேசிய உள்ளத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தார். திரைத்துறையிலே அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்களிலே உண்மை, நேர்மை, பொதுவுடைமை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் இவை அத்தனையையும் நிலை நிறுத்தும் கொள்கை முழக்கத்தோடு, மக்களைச் சென்றடைய வைத்தார்.


     அவர் பாடலொன்று என் காதுகளிலே அடிக்கடி ஒலிப்பது வழக்கம்:


    “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் – உனக்கு

      மாலைகள் விழ வேண்டும்!

      ஒரு மாற்று குறையாத மன்னவன் – இவன்

      என்று போற்றி புகழவேண்டும்!”

    

-என்ற அந்தப் பாடல் வரிகள், சோர்ந்து போன என்னைப் பலமுறை தூக்கி நிறுத்தியிருக்கிறது. என்னை மட்டுமல்ல! தென்னிந்தியாவின் பல இலட்சக்கணக்கான மக்களை, உயர்ந்த குறிக்கோளை நோக்கித் தூக்கி நிறுத்தியிருகிறது!


     ‘அறிவுஜீவி என்று சொல்லப்படுகிற நாடகக்கலைஞரும், எழுத்தாளருமான திரு.சோ.ராமசாமி அவர்கள் தமது ‘துக்ளக் இதழிலே, மக்கள் திலகத்தைப் பற்றி எழுதுகின்ற பொழுது, “ அடுப்பிலே பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உலை வைத்து விட்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்றால், நிச்சயமாக அரிசிவாங்கி, உலையிலிட்டுச் சோறு பொங்கி விடலாம், என்ற நம்பிக்கையோடு பலபேர் எம்.ஜி.ஆர்.-ஐ நம்பிச் சென்று வாழ்ந்திருக்கிறார்கள்; அந்த விஷயத்தில் அவர் நிகரற்றவர்”, என்று கூறியிருக்கிறார்.


                     வறுமையால் வாடி மறைந்தானே ‘பாரதி,... அவன், நமது வள்ளல் காலத்தில் வாழவில்லையே என நான் வருத்தப்படுகின்றேன்! இன்னுமொரு நூறாண்டு காலம் வாழ்ந்து தேசியம் பாடி மகிழ்ந்திருப்பான்!

     ஆசியா வியக்கும் வண்ணம் தமிழ்மக்கள் அவரைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கியபோது, பல்லோரும் வியக்கும் வண்ணம் ‘சத்துணவு திட்டம் என்னும் ஏழைக் குழந்தைகளுக்கான ஆதாரத் திட்டத்தைத் தந்தார். இன்று அந்தத் திட்டத்தினுடைய வளர்ச்சி என்ன தெரியுமா? வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக்கூடிய பல இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகள் , ஏறத்தாழ சுமார் கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்தச் சத்துணவு திட்டத்தின் மூலம், தங்கள் பகல்நேர உணவை, நிறைவு செய்து கொள்கிறார்கள்; இந்தச் சத்துணவு திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்காக சுமார் ஒரு இலட்சம் சத்துணவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள்; அவர்கள் வீட்டு வறுமை நீங்கியிருக்கிறது!


     தமிழகத்தினுடைய ஏழை மக்களின் நாடித்துடிப்பை, உளமாற உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் அவரது அமைச்சரவை கொண்டுவந்த எல்லாமே, ஏழைகளுக்கான திட்டங்களாக அங்கீகாரம் செய்யப்பட்டு, பிற மாநிலத்து முதல்வர்கள் எல்லாம், எடுத்து ஆள்கிற திட்டங்களாகப் பெருமை பெற்றன. எம்.ஜி.ஆர்.-இன் திருவுருவமோ, எளியோர் நெஞ்சகளிலே நிரந்தரமாக இடம்பிடித்தது. எத்தனையோ இடர்ப்பாடுகள், தடைகள், கருத்து மோதல்கள் அத்தனையும் தாண்டி வாழ்ந்து காட்டியவர். “காலன் கூட அவர் மன உறுதியைக் கண்டு பல நேரங்களில் காத தூரம் ஓடி மறைந்திருக்கிறான்.” பாரதி சொன்னது தான் எனக்கு மீண்டும் நினைவு வருகிறது,...

        “தேடிச் சோறு நிதந்தின்று – பல

        சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

        வாடித் துன்பமிக வுழன்று – பிறர்

        வாடப்பல செயல்கள் செய்து – நரைக்

        கூடிக்கிழப் பருவம் எய்தி – கொடுங்

        கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் – பல

        வேடிக்கை மனிதரைப் போல – நான்

        வீழ்வேன் என்று நினைத்தாயோ?


    -என்று பாரதி, தான் சாமான்யமாக மறைந்து போகின்றவன் அல்ல; நித்தியமாக சாதனை பல செய்து, இந்த மண்ணில் வாழ்ந்து மறைவேன் என்று சாதித்து வாழ்ந்து மறைந்தானே, அதைப்போலவே மக்கள் மனதில் வாழ்ந்திருந்த எம்.ஜி.ஆர்-ரும், எதிர்த்து வந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்து, தமிழ்க்கூறும் நல்லுலகத்து தமிழர்களெல்லாம் வியக்கும் வண்ணம், போற்றும் வண்ணம், வாழ்த்தும் வண்ணம் வாழ்ந்து, இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாகி,


  “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,

  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!”


    -என்று ஒரு திரை இலக்கிய கவிஞன் சொன்னானே, அதற்கு ஒப்ப ‘இவர் போல யார்?’ என்று இன்றளவும் சான்றோர்களும், ஆன்றோர்களும், நல்லோரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்து, மக்கள் நெஞ்சிலே வீற்றிருக்கிறார். அவரது நினைவு நாளில், அவரது ஒளிநிறை குன்றுநிகர் புகழைப் போற்றி, வணங்குவோம்!