Apr 2, 2014

உப்பு, புளி, மிளகாய்! - ‘பிட்சா’

‘உணவு’ –மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே மனித குலத்தின் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் உணவின் தாக்கம் மிகுதியாக இருந்து வந்துள்ளது. மனிதன் உயிர் வாழத் தேவையான அடிப்படை இந்த உணவு. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு இடத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றார்போல மனிதர்களுடைய உணவும், வாழ்க்கைமுறையும் வேறுபடுகிறது. அதை பொறுத்தே வெவ்வேறு உணவின் சுவைகளுக்கு அடிமையாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரி! இப்படி நமக்குப் பிடித்த உணவு வகைகளைத் எங்கு சென்றாலும் தேடித் பிடித்து உண்கிறோம். ஆனால், என்றாவது அவ்வுணவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள எண்ணியிருக்கிறோமா? உண்ணும் உணவோடு, அது தோன்றிய கதையையும் தெரிந்து சாப்பிட்டால் இன்னும் ருசிக்குமே! எனவே, உலக உணவு வகைகள் பற்றிய கதைகளை இந்த ‘உப்பு, புளி, மிளகாய்’ பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வோம்!

‘உப்பு, புளி, மிளகாய்’ வரிசையில் முதலில் உலக மக்கள் எல்லோரின் விருப்பமாக இருக்கும் ‘பிட்சா’ [PIZZA] உணவு வகை!

இப்போது அமெரிக்கர்களின் விருப்ப உணவாக விளங்கும் இந்த ‘பிட்சா’ –க்களுக்கு மிகப் பழமையான வரலாறு ஒன்று உண்டென்றால், ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம்! பொதுவாகவே ‘பிட்சா’ என்பது இத்தாலிய உணவு என்று பரவலாக அரியப் படுகிறது. ‘Pizza’ என்னும் பதம் ‘ரொட்டி’ எனப் பொருள்படும், லத்தீன் மொழியான ‘Pinsa’ என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள். பண்டைய இத்தாலியில் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆவணங்களில் ‘பிட்சா’ பற்றிய குறிப்புகள் பதியப் பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் ஒருசாரார், ‘பிட்சா’-வுக்கு கி.மு. முதலாம் நூற்றாண்டு தொட்டே வரலாறு இருப்பதாகக் கூறுகின்றனர். சரி! இனி ‘பிட்சா’-வுக்கு பரவலாக இருக்கும் வரலாற்றினைக் காண்போம்!


பழமையான வரலாற்றினைக் கொண்ட இந்த ‘பிட்சா’–வை இத்தாலியர்கள் அறிமுகம் செய்தனர் எனக் குறிக்கப்படுகிறார்கள். பழங்கால பாபிலோனியர்கள், இசுரேலியர்கள், எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்தவர்கள் சுடுமண் அடுப்புகளில் சமைக்கப்பட்ட, தட்டையான ரொட்டி போன்ற ஒரு உணவை உண்டு வந்துள்ளனர். பண்டைய கிரேக்க, ரோமானிய மக்களும் இவ்வகையான ரொட்டிகளின் மீது ஆலிவ் எண்ணெய் மற்றும் அங்கே கிடைக்கக் கூடிய மூலிகைகளையும் சமமாக அடுக்கி உண்டு வந்துள்ளனர்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் ‘மார்கஸ் போர்சியஸ் கேதோ’ (Marcus Porcius Cato) என்பவர் ரோம்-ன் வரலாற்றினை முதன்முதலாக எழுதுகையில் அவர் ‘தட்டையான வட்ட வடிவ திட மாவின் மீது ஆலிவ் எண்ணெய், மூலிகைகள் மற்றும் தேன் போன்றவற்றை வைத்து, கற்களால் செய்யப்பட அடுப்பில்’ சமைக்கும் ஒரு உணவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் பாரசீக மன்னரான ‘மாவீரன் டாரியஸ்’ –ன் (Darius the Great) படைவீரர்கள் போரின்பொருட்டு தொலை தூரங்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அச்சமயத்தில் அவர்களிடமிருந்த தட்டையான பாதுகாப்புக் கருவிகளின் மீது தட்டையான ரொட்டிகளை சுட்டு, அதன்மீது பாலடைக் கட்டிகளையும், பேரீச்சம்பழங்களையும் வைத்து உண்டதாகவும் ‘பிட்சா’-வுக்கு ஒரு வரலாறு உண்டு.

கி.மு. போதும்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என கி.மு.-விலேயே அறிந்தவர்கள் பாதுகாப்பு கவசத்தில் பிட்சா சுட்டிருக்கிறார்கள்! துப்பாக்கிகள் இல்லாத காலத்திலும் சுட்டுக்காட்டியவர்கள் (பிட்சா-வை) இவர்கள்! இனி கி.பி.-களுக்கு வருவோம்!

கி.பி. முதலாம் நூற்றாண்டில் ரோம்-ல் ‘மார்கஸ் கேவியஸ் அபிசியஸ்’ என்பவரால் எழுதப்பட்ட (Marcus Gavius Apicius) “De Re Coquinaria" என்னும் புத்தகத்திலும், சற்றே குழைவான தட்டை ரொட்டியின் மீது சிக்கன், பாலடைக்கட்டி, பூண்டு, புதினா, மிளகு, எண்ணெய் போன்றவற்றை பரவச்செய்து சுடப்படும் உணவின் செய்முறை குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இப்போதைய பிட்சா-வில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டுள்ள உணவாக இருந்தது!

16-ஆம் நூற்றாண்டுகளில் தக்காளிகள் ‘பெரு’ நாட்டிலிருந்து ஐரோப்பா-விற்கு அறிமுகமாகிறது. இவற்றை முதலில் விஷத்தன்மையுள்ள பழம் என்று ஐரோப்பியர்கள் கருதினர். பின்னர் அங்கிருந்த பழங்குடியின மக்கள் இவற்றை தங்கள் ரொட்டி போன்ற உணவுப்பொருட்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

17-ஆம் நூற்றாண்டில் இந்த ரொட்டி வகை உணவு இத்தாலியில் பிரபலமடையத் தொடங்கியது.

1800–களின் தொடக்கத்தில், தென்-மேற்கு இத்தாலியின் ‘நேப்பிள்கள்’ (Naples) எனப்படுபவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்களாகவும், வறுமையில் உழல்பவர்களாகவும் இருந்தனர். எனவே இவர்களுக்கு விலை அதிகமில்லாத ஆனால் விரைவில் பசியை போக்கக் கூடிய ஒரு உணவு வகை அவசியப்பட்டது. இவர்களின் இந்த கோரப்பசியை சாலையோரக் கடைகளில் விற்கப்பட்ட, பல சுவைகளோடு கூடிய தட்டையான ரொட்டிகளால் சுலபமாகத் தீர்க்க முடிந்தது. இந்த பிற்படுத்தப்பட்ட ‘நேப்பிள்’-களால் அக்காலத்தில் விரும்பி உண்ணப்பட்ட சுவையான தட்டை ரொட்டிகள் தான், இன்று நாம் சுவைத்து உண்ணும் ‘பிட்சா’-கள்!

பின், 1889-ல் இத்தாலியின் முதலாம் அம்பர்டோ அரசரும், ராணி மார்கரீட்டா-வும் (King Umberto-I and Queen Margherita Di Savoia) இந்த நேப்பிள் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். முந்தைய பயணத்தில் பிரெஞ்சு உணவு வகைகளை உண்டு அலுத்துப் போயிருந்த இவர்கள் இத்தாலியின் பிரபலமான சமையற்காரரான ‘ரஃபேல் எஸ்போசிடோ’ (Raffaele Esposito) என்பவரிடம் தங்களுக்கு சுவையான இத்தாலிய உணவைச் சமைத்துத் தருமாறு கூறினார்கள்.


விருந்தினர்களை மகிழ்விக்க எண்ணிய ரஃபேல், நேப்பிள்களால் விரும்பி உண்ணப்பட்ட தட்டையான ரொட்டியின் மீது பன்றி இறைச்சியை தூவி ஒரு வகையும், பாலாடைக்கட்டி மற்றும் துளசியை தூவி ஒரு வகையும், மூன்றாவதாக தக்காளி, மொசரெல்லா பாலடைக்கட்டி (எருதின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவது), பச்சை துளசி ஆகியவற்றை பயன்படுத்தியும், 3 வகை பிட்சா-க்களை புதிய உணவாகக் கொடுத்தார். இதில் மூன்றாவது வகை ‘பிட்சா’-வின் சுவையில் மயங்கிய ராணி மார்கரீட்டா, பெரிதும் பாராட்டினார். ராணியே பிட்சா-வை விரும்பி உண்ட செய்தி இத்தாலி முழுதும் பரவ, இத்தாலியைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பிட்சா-விற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இது பிட்சா-களின் பொற்காலம் என்றே குறிப்பிடலாம். அன்றிலிருந்து, இவ்வகையான பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பிட்சா, ‘மார்கரீட்டா பிட்சா’ (Pizza Margherita) என அழைக்கபடுகிறது. (அடடே!!! நல்ல விஷயம் தானே!!!...)

19-ஆம் நூற்றாண்டில் நேப்பிள்-ல் இருந்து அமெரிக்கா-விற்கு குடியேறிய இத்தாலியர்கள் அங்கும் தங்களின் உணவான பிட்சா-வையே சமைத்து உண்டனர். இவ்வாறு, வெகு விரைவிலேயே பிட்சா-கள் அமெரிக்கா முழுதும் பரவின. மேலும் நேப்பிள்-ல் இருந்தது போலவே சிறுசிறு கடைகளிலும் பிட்சா-கள் மத்திய தர மக்களை குறிவைத்து, குறைந்த விலையில் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவை அதிவேகமாக உலகம் முழுதும் பரவின. இவ்வாறுதான் ‘பிட்சா’ உணவு பிரபலமடைந்தது.

அமெரிக்கா-வில் தொடங்கப்பட்ட ‘பிட்சா கபே’-கள் (Pizza Café) தங்களுடைய கிளைகளை வெவ்வேறு நாடுகளில் அமைத்து அந்த நாட்டவர்களுக்கேற்ப பிட்சா சேவை (!!!...) செய்து வருகின்றனர். இப்படித்தான் பாலடைக்கட்டியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மார்கரீட்டா பிட்சா’ –விலிருந்து பல்வேறு வகையான பிட்சா-கள் உருவாகி உலகத்தாரின் சுவை மொட்டுகளை உயிர்பெறச் செய்து கொண்டிருக்கிறது.

“அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”

-என ‘வள்ளுவம்’ கூறுவது போல, எந்த வகை உணவானாலும் சரி! அவை அளவோடு உட்கொள்ளப்படும் போது, மனித உடலியக்கத்திற்கு எந்தவித ஊறும் விளைவிக்காது. கொழுப்பு சத்துகள் அதிகமுள்ள பிட்சா-களையும் அளவோடு சுவைத்து உண்டால் தீங்கு ஏதுமின்றி நீண்ட நாள் பிட்சா-களை சுவைக்கலாம்!

0 comments: