Apr 25, 2014

புதுமைப்பித்தன்!

எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்கள் ஏப்ரல் 25, 1906-ல் திருப்பதிரிப்புலியூர் என்னும் ஊரில் பிறந்தார். 1931-இல் சென்னை வந்த இவர், 1933-ல் ‘காந்தி’ இதழில் வெளிவந்த “குலாப்ஜான் காதல்” என்னும் கட்டுரை மூலம் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். 

1934-ல் மணிக்கொடி-யில் ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ சிறுகதையைத் தொடர்ந்து இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின. கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ் மணி, தினமணி போன்ற பல இதழ்களிலும் ‘புதுமைப்பித்தனின் படைப்புகள் தொடர்ந்தன. 1940-ல் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பின் இவர் தமிழ்த்திரைத் துறையிலும் சிலகாலம் கதையாசிரியராகப் பணியாற்றினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதியிருந்தாலும், புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைகளே எழுத்துலகில் முதன்மையாகக் கருதப்படுகின்றன. இவரின் புதுமையான எழுத்தாளுமை பிற எழுத்தாளர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தி நிற்கச்செய்தது. சிறுகதைகளைப் போலவே புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த நூல்களும் இவருக்கு மேலும் பெருமை சேர்த்தன. 

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் கொண்ட இந்த எழுத்தாளரின் படைப்புகள் 2002-ல் தமிழக அரசால் தேசியமயமாக்கப்பட்டது.

0 comments: