Apr 25, 2014

நீல.பத்மநாபன்!

எழுத்தாளர் நீல.பத்மநாபன் அவர்கள் ஏப்ரல் 26, 1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளில் ஒருவரான இவர், 20 நாவல்கள், 170 சிறுகதைகள், 160 கவிதைகள், மற்றும் 150 கட்டுரைகளையும் இதுவரை எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான “தலைமுறைகள்”, எழுத்தாளர் க.நா.சு. அவர்களால் ‘இந்தியாவின் சிறந்த பத்து நாவல்களில் ஒன்று’ எனப் பாராட்டப்பட்ட நூலாகும்.

நீல.பத்மநாபன் அவர்கள் சாகித்திய அகாதமி விருது (இலை உதிர் காலம்), ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது (உறவுகள்), தமிழ்நாடு அரசு மாநில விருது (தேரோடும் வீதி), தமிழ் அன்னை விருது, பாரதீய பாஷா விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு இவரின் பங்களிப்பைப் பாராட்டி ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பு சிறப்பு செய்துள்ளது.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நீல.பத்மநாபன் அவர்கள், ‘நீல பத்மம்’ என்னும் சிறந்த கவிதைக்கான விருதையும், ‘தலைமுறைகள்’ என்னும் சிறந்த சிறுகதைக்கான விருதையும் நிறுவி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் வாயிலாக ஆண்டு தோறும் வழங்கி வருகிறார்.

தமிழ்மொழி அல்லாமல், இவர் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கியங்களுக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார். நீல.பத்மநாபன் அவர்களின் படைப்புகள் மலையாளம், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும், அயல் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. 

0 comments: