Oct 3, 2025

இன்றைய உலகப் பிரச்சனையும் ஐக்கிய நாடுகளின் தலையீடும்!

     “உலகமெங்கும் அமைதிநெறி நிலவ வேண்டும்” – என்ற உயர்தரம நெறியினை இந்த உலகில் பிறந்த பல சான்றோர் பெருமக்களும் தங்கள் கொள்கையாக வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்! ஆனால், மிக வேகமாக வளர்ந்துவரும் இன்றைய நாகரிக உலகில் மனிதகுலம் ஒவ்வொரு வினாடியும் பல்வேறு வகையான வடிவங்களில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சான்றோர்கள் கூறிய உலக அமைதி கேள்விக் குறியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அயராத பணியின் மூலம் உலக அமைதிக்கு வழிகோலவும் செய்யப்படுகிறது.

 

இன்றைய உலகை வழிநடத்திச் செல்வது விஞ்ஞானமே ஆகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலக நாடுகளிடையே எல்லா வகையான பிரச்சனைகளும் தலைத்தூக்கியுள்ளன. குறிப்பாக:

1.     பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனை

2.    பொருளாதாரத் தொடர்பான பிரச்சனை

3.    கல்வித் தொடர்பான பிரச்சனை

4.    மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனை

- மேற்கண்ட பிரச்சனைகளை அமைதி வழியில் தீர்ப்பதற்காகவும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பே ஐ.நா சபையாகும்.

 

பாதுகாப்பு:

உலகம் தோன்றிய நாள்முதல் இன்று வரையிலும் நாடுகளிடையே தங்கள் சக்தியை காட்டும் விதமாக போர்கள் நடந்து வருகின்றன. சில நாடுகள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தவும், சில நாடுகள் தனது எல்லையையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ளவும் போர்களில் ஈடுபடுகின்றன. இந்த பிரச்சனை மிகவும் பெரிதாகும் பொழுது பல உயிர்களை பலியாக்கும் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. சபை தனது அவையில் விவாதித்தும், நேரடியாக தலையிட்டு சமாதானம் செய்தும் தனது கடமையைச் செய்கிறது. கட்டுப்பாட்டை மீறி நடக்கும் நாடுகளைத் தனது ஐ.நா. அமைதிப் படைமூலம் கட்டுப்படுத்தவும் செய்கிறது. இன்றைய சூழலில் மூன்றாவது உலகப்போர் இன்னும் ஏற்படாமல் இருப்பதற்கு ஐ.நா. சபையின் அமைதி முயற்சிகளே உண்மையான காரணமாகும்.

 

பொருளாதாரம் மற்றும் உணவு:

     உலகில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என பொருளாதார, சமூக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி ஆகிய அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள் தங்களின் வியாபரத் தளமாக ஏழை நாடுகளை உறிஞ்சுகின்றன. ஆனால், வளரும் நாடுகளோ தங்களின் அடிப்படை வளர்ச்சிக்காக பணம் கொழிக்கும் நாடுகளை நம்பி உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வினை நீக்கவும், கல்வி, உணவு, உறைவிடம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், வறுமையையும், நோயையும் நீக்கவும் ஐ.நா. பெருமுயற்சி மேற்கொள்கிறது.

 

கல்வி:

ஏழை நாடுகளின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக விளங்குவது அறியாமையே ஆகும். இதற்குக் காரணம் போதிய கல்வி அறிவு அளிக்கப்படாததே ஆகும். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கல்விக் கூடங்களும், கல்விச் சாதனங்களும் இல்லாததாலும், வறுமையிலிருந்து விடுபட இளமையிலேயே வேலை தேடிச் சென்று விடுவதாலும் அறியாமை நாடுகளில் நிலைப்பெற்றுவிட்டது. இத்தகைய நாடுகளில் கல்வி வளர்ச்சி மேம்பட ஐ.நா. சபை வளர்ந்த நாடுகளிடம் பரிந்துரைச் செய்து ஏழை நாடுகளுக்கு உதவி செய்கிறது.

 

மனித உரிமை:

    உலகின் பல நாடுகளிலும் பல்வேறு சூழல்களில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. உழைப்பாளி மக்களும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஏழை மக்களும், பத்திகையாளர்களும், எழுத்துப் பணியிலுள்ள சமூக நல விரும்பிகளும் அரசுகளால் முடக்கப்பட்டும், தண்டிக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் எழுத்துரிமை, பேச்சுரிமை பறிக்கப்பட்டு அச்சநிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழல்களில் ஐ.நா. சபை தலையிட்டு, நெறிப்படுத்தி மக்கள் உரிமைகளை மீட்டு நிலைநாட்டுகிறது.

 

    இவ்வாறு, உலகம் முழுதுமே பல்வேறு வகையில் பிரச்சனைகள் தலைதூக்கி ஆபத்தை அறிவிக்கின்றன. புதிய 21-ஆம் நூற்றாண்டில் நம்முன் உள்ள பிரச்சனைகளின் வடிவம் மாறலாம். ஆனால்,...தொடரும்!

 

    ஐ.நா. சபை இந்த பிரச்சனைகளை கனிவுடன் பார்த்து ஆராய்ந்து, தலையிட்டு, உலகில் போர், வறுமை, பிணி, ஆகியன நீங்கவும், அமைதி, இன்பம், நலம், செல்வம் முதலியன பெருகவும் பாடுபட்டு வருகிறது.

 

    ஐ.நா.வின் பணி சிறந்து, உலகம் அமைதியில் தவழ, மக்கள் சமூகத்தினரான நாமும் ஒத்துழைப்பு நல்குவோம்.

 

    உலகில் அன்பும், அமைதியும் தழைக்கட்டும்!

    எங்கும் இன்பமும், வளமும் செழிக்கட்டும்!           

இளையோர் கரங்கள் இணையட்டும்!

 ஆன்றோரும் சான்றோரும் அகிலத்துப் பெரியோரும்

ஆய்ந்துதான் தேடிடும் அமைதி – உலகின்

வல்லரசு, நல்லரசு அறங்கூறும் பொதுவரசு

யாவரும் நாடிடும் அமைதி!

 

வன்முறைப் பேய்களால் வன்சாதி நோய்களால்

வரலாற்றில் கறையாகலாமா? – நல்ல

பொன்னான பூமிதனை புண்ணாக்கியே நிற்க

நல்லோர்கள் பாதை தரலாமா?

 

புவியதை மாற்ற புதுயுகம் ஆக்க

இளைஞர்கள் எழுந்து வர வேண்டும்!

கவினூறும் வையத்தில் அன்புதனை காட்டியே

அமைதிக்குப் பாதையிட வேண்டும்!

 

பழங்கதை தான்பேசி பசியோடு நாள்போக்கி

சோம்பிடும் கூட்டம் ஒழிந்திடல் வேண்டும்!

அழகோடு அறிவியலும் அறங்கூறும் வாழ்வியலும்

பழகிடும் இளையோர் வளர்ந்திடல் வேண்டும்!

 

வீட்டின் நலமும் நாட்டின் வளமும்

நாடி உழைத்திடல் வேண்டும்!

அறிவினை பெருக்கி அறியாமை நீக்கி – பொது

தொண்டில் தோய்ந்திடல் வேண்டும்!

 

அறிவியல் கல்வி ஆன்மிகம் தன்னில்

இளைஞர்கள் மூழ்கிட வேண்டும்! – நம்

பாரதி நெறியில் பற்பல கலைகளை

பாரினில் பரப்பிடல் வேண்டும்!

 

மனிதனைக் காக்கும் மாண்பதைக் கூறும்

நூல்களை போற்றிடல் வேண்டும் – இளையோர்

உண்மையின் நெறியில் உளமதை ஊக்கி

அமைதியை காத்திட வேண்டும்!

 

தன்னலமில்லா வையம் சமைத்திட

இளையோர் உலகம் எழுந்திடல் வேண்டும்!

மண்ணின் மீதில் அமைதி தவழ்ந்திட

இளையோர் கரங்கள் இணைந்திடல் வேண்டும்!

அன்பு மதம்!

 மனிதன் மனத்தால் உயர்வடைய

மனிதம் உலகில் செழிப்படைய

மாண்புறு கொள்கை தருவதுதான்

மதங்கள் என்னும் நெறிமுறையாம்!

 

இறைநெறி வழியில் நாமெல்லாம்

முறையொடு வாழ்வில் நடந்திட்டால்

அருள்நெறி உலகில் தழைத்திடுமே – பொது

நெறியொடு உலகம் திகழ்ந்திடுமே!

 

மனிதனை மனிதன் நேசிக்கும்

மாண்பை சொல்லிய மாமனிதர்

காட்டிய நெறியே மதமாகும் – உலக

மாந்தர் தழுவிடும் வழியாகும்!

 

புத்தர் இயேசு காந்தி என்ற

இத்தரை வியக்கும் வினைஞரொடு...

அன்னை தெரசா என்றொரு தாயும்

நம்மில் விதைத்தது அன்பாகும்!

 

இன்பம் துன்பம் எதுவரினும்

மனிதர்க்கெல்லாம் ஆறுதலை

அளிப்பதே சான்றோர் நெறியாகும்

அதுவே அன்பு மதமாகும்!

 

அன்பு மதத்தை மாந்தரெல்லாம் – நாடி

வணங்கிடச் செய்திடுவோம்! – மண்ணில்

மனிதரை மனிதர் நேசித்து

மனத்தால் அனைவரும் ஒன்றாவோம்!