Apr 7, 2014

மஞ்சள் நதிக்கரை மக்கள்-சீனா! -1

[என்னடா கொஞ்ச நாளா ஆளையே காணோமேனு மக்கள்-லாம் சந்தோஷப்பட்டது காதுல கேட்ருச்சுங்க! அதான் blog பக்கம் கொஞ்சம் எட்டிப் பாத்துட்டு போகலாமேனு....(சரீ...சரீ... புரியுது... மொக்க போடல!...) இப்ப நேரா விஷயத்துக்கு வருவோம். இத்தன நாளும் சீரியஸ் கதை, சாப்பாட்டு கதை, மொக்க கதை எல்லாம் நம்ம blog-ல பாத்துருப்பிங்க (?!?!!.. சும்மா சொல்லிக்க வேண்டியது தான்!) அதனால கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது பதிவ போடணும்-னு முடிவு செஞ்சு மூளைய கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சிட்டே இருந்தப்ப டி.வி.-யில நம்ம பய டோங்லீ-யும், சூர்யா-வும் சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே ஒரு பல்பு எரிஞ்சுதே (அட! என் மூலையில தாங்க!) உடனே அந்த அழகான சீன மனுஷங்களைப் பத்தி ஏன் தெரிஞ்சுக்க கூடாது-னு விக்கிபீடியா-வில் இருந்து விண்வெளி வரையில் அலசி ஆராய்ந்து விஷங்கள சேகரிச்சுட்டோம்-ல! (நாங்கல்லாம் அப்பவே அப்பிடி...) அத அப்படியே உங்களுக்கும் இதோ பதிகிறேன்! அறிவை வளர்த்துக்கோங்க மக்களே!]

“சீனா” –அப்படி-னு சொன்னதுமே நமக்கு அந்த குட்டையான, அழகான, கீழ் இமைகள் மூடாத கண்களை உடைய, தட்டையான சிறிய மூக்கு மனிதர்கள் தாங்க ஞாபகம் வருவாங்க! கொரியா, ஜப்பான், நேபால், அஸ்ஸாம் மாநில மக்களை பார்த்தா கூட இன்னிக்கும் நம்ம கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் ‘சைனாகாரர்கள்’-னு தான் அடையாளம் காட்டுவாங்க. உருவ அமைப்பிலேயே இத்தனை வித்தியாசங்கள் கொண்ட இந்த சீன மக்களின், இவர்களின் தேசத்தின் வரலாறும் கூட ரொம்ப வித்தியாசமானது மட்டுமில்லாமல், மிகப் பெரியதும், புகழ் பெற்றதும், சுவையானதும் கூட!

பண்டைய வரலாறு

சீனா, உலகின் பழமையான நாகரிகங்கள் தோன்றிய நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. சீனாவின் வரலாறு சுமார் பத்தாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது. ஆனால், இதில் சீனப் பேரரசாக ஒருங்கிணைக்கப் பட்டதற்கு பின் வந்த ஐயாயிரம் ஆண்டுகளையே வரலாற்றிஞர்கள் கணக்கில் கொள்கிறார்கள்.


சீன இதிகாசங்களின்படி, சீன மக்கள் அனைவரும் மனித குலத்தின் உண்மையான முன்னோர் எனக் குறிக்கப்படும் பேரன்னை Nv Wa என்பவரால் படைக்கப்பட்டவர்கள் என நம்புகிறார்கள். Pan Gu என்னும் கடவுள் சுவர்க்கத்தையும் பூமியையும் பிரித்ததாகவும், அதனால் அவர் தனியனாக விடப்பட்டு இறந்ததாகவும், அவரின் உடலே புதிய ஓர் உலகமாக உருவானது என்றொரு சீன புராணக் கதையுண்டு. இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பேரன்னை Nv Wa உலகில் தோன்றி, மஞ்சள் நிறமான வண்டல் மண்ணைக் கொண்டு தன்னைப் போலவே ‘மண் பொம்மை’களைச் செய்து, அவற்றை நிலத்தின் மீது வைக்க, அவை உயிர்பெற்று மனிதர்களாகி உலகம் முழுவதும் பரவினர் என்று இவர்களின் பண்டைய புராணங்கள் கூறுகின்றன.

சீன நாகரிகம் ஹுவாங் டி மற்றும் யான் டி என்னும் சமயம் சார்ந்த பேரரசர்களால், மஞ்சள் நதிக்கரையில் தோற்றுவிக்கப் பட்டது என சீன வரலாறு கூறுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்த இரு பேரரசுகளும் ஜியா பேரரசின் காலத்தில் ஒன்றிணைக்கப்பட்டன. இதன்படி சீன மக்கள் தங்களை யான், ஹுவாங் –இந்த இருவரின் வம்சாவழியினராகவே கருதி, ஹுவா மக்கள் அல்லது ஜியா மக்கள் எனக் குறிக்கின்றனர். இம்மக்களே பிற்காலத்தில், பூமியின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் மஞ்சள் நதிப் படுகையில் ஒரு நகரத்தை நிறுவினர்.

சீனப் பேரரசுகள்!

ஜியா பேரரசின் காலத்தில் இருந்து தான் சீன வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. அதாவது கி.மு. 21-ஆம் நூற்றாண்டில்! ஜியா ஆட்சியைத் தொடர்ந்து ஷாங் பேரரசு, சௌ பேரரசு, ஃவின் பேரரசு, ஹான் பேரரசு, முப்பெரும் இராஜ்ஜியங்கள், சூ(ய்) பேரரசு, ஸாங் பேரரசு, யுஆன் பேரரசு, மிங் பேரரசு, ஃக்யிங் பேரரசு போன்ற பேரரசுகள் சீனா-வை ஆண்டு வந்தன. இறுதியாக சொன்ன ஃக்யிங் பேரரசின் ஆட்சிக்காலத்தில் தான் புகழ்ப்பெற்ற 'முதல் அபின் போர்' (The Opium Wars) நடக்கிறது.

அதாவது, 1839-இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் இருந்து பிரித்தானிய அரசு அபின் கடத்தி, சீனாவிற்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது ஃக்யிங் பேரரசாங்கம் அவர்களின் போதைப் பொருள்களுக்கு எதிரான சட்டங்களை செயல்படுத்தி, பிரித்தானியர்களின் முயற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பிரித்தானியர்களின் அபின் வர்த்தகத்தை ஒழித்துவிட எண்ணிய ஃக்யிங் பேரரசின் ஆளுநர், 1,700 அபின் வர்த்தகர்களை கைது செய்து, சுமார் 2.6 மில்லியன் பவுண்டு அபினை நீர், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றில் கலந்து கடலில் கொட்டியும், எரித்தும் அழித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கோபமுற்ற பிரித்தானிய அரசு, 1840-ல் ஹாங்-காங் –ஐ கைப்பற்றி, பின் மிகப் பெரும் படையை அனுப்பி கான்டான் நகரின் மீது போர் தொடுக்கிறது. அப்போது திங்காய், ஜென்ஹாய், நிங்போ, ஷாங்காய் ஆகிய நகரங்களை ஆக்கிரமிப்பு செய்து அங்கிருந்து யாங்ட்ஸ் நதி வழியாக 1842-இல் ஜியாங்நிங் (நான்ஜிங்) நகரை அடைகிறது. ஃக்யிங் பேரரசின் சமாதான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இந்தப் போர் 'நான்ஜிங் ஒப்பந்தம்' செய்யப்பட்டு முடிவுக்கு வருகிறது. இதன்மூலம் மீண்டும் பிரித்தானிய அரசு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அபின் வர்த்தகத்தை முறையாக 5 துறைமுகங்களின் வழியாகத் தொடர்ந்தது. இது தான் முதலாம் அபின் போர்! (?!?!?!... அப்படினா இரண்டாவது போர் வேற இருக்கா-னு கேக்கறிங்களா? ஆமாம்! அப்போ அபின் உற்பத்தி அமோகமா இருந்துருக்கு நம்ம நாட்டுல!)

இரண்டாம் அபின் போர் 1856-இல் தொடங்கி 1860-இல் முடிந்தது. இந்த இரண்டு அபின் போர்களும் சீன தேசத்துக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து, சீனாவை அரை காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றம் பெறச் செய்தது.

ஒருவழியாக அபின் யுத்தங்கள் எல்லாம் முடிந்து கொஞ்ச காலம் சீனா-வில் அமைதியான முறையில் ஆட்சி நடந்து கொண்டிருந்தாலும், சீன மக்களால் ஃக்யிங் பேரரசு விதித்த கடுமையான சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே 1912-இல் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கிறது.

ஃக்யிங் பேரரசை ஆட்சியிலிருந்து விளக்க, டாக்டர்.சூன் யாட்-சென் என்பவரின் தலைமையில், “தேசியவாதம், ஜனநாயகம், மக்களின் வாழ்வாதாரம்” என்னும் மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சீனப் புரட்சி தொடங்கியது. இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனா-வில் இருந்து வந்த ‘முடியாட்சி’ முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது. (இருங்க, இன்னும் முடியல!!!)

இதற்கு பின், 1919-இல் மே-4 இயக்கம், (May 4th Movement) ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுகிறது. இது 1921-இல் சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தோற்றுவித்து, சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை விளைவிக்கிறது. இச்சமயத்தில் சீனாவைத் தாக்கிய ஜப்பானிய வீரர்களை எதிர்த்து சீனர்கள் புதிய வேகத்துடன் செயல்படுகிறார்கள். இந்த ஜப்பானுக்கு எதிரான போர் கம்யூனிச சீனா-வின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைகிறது.

1949-இல் தான் சீனா-வை குடியாட்சி (மக்களாட்சி) நாடாகவும், பீஜிங் நகரை சீனா-வின் புதிய தலைநகரமாகவும் அதிகாரப்பூர்வமாக சேர்மன் மாவோ ஜெடாங் (Chairman Mao Zedong) அறிவித்து வழி நடத்திச் சென்றார்.

ஒருவழியாக சீனா-வை பற்றிய முக்கியமான செய்திகளை சொல்லியாச்சு. இனி அடுத்த பதிவுல இன்னும் சுவாரசியமான சீனா-வின் மக்கள், மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை, முக்கியமாக ‘உணவு’ இந்த மாதிரி விஷயங்களைப் பார்ப்போம்!

0 comments: