Apr 23, 2014

மெசபொடேமியா முதல் யுனெஸ்கோ வரை!

"There is no friend as loyal as a Book." 
-Ernest Hemingway


“உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்” [ஏப்ரல் 23] சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாக இன்றைய சமூகத்தில் புதிய ஒரு அங்கீகாரம் பெற்றுள்ளது உலக புத்தக ஆர்வலர்களுக்கு பேருவகையான செய்தியாகும். என்ன விசேஷம் இந்த நாளுக்கு? ஏப்ரல் 23-இந்த நாளை உலக இலக்கியத்திற்கான நாள் எனப் பொதுவாகச் சொல்லலாம். ஆம்! இங்கிலாந்தின் தேசியக்கவி வில்லியம் ஷேக்ஸ்பியர், ஸ்பெயின் நாட்டின் செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா போன்ற உலகப் பெரும் இலக்கியவாதிகளின் நினைவுநாள் இன்று தான். இதன் நிமித்தமாக 1995-ஆம் ஆண்டு பாரிஸ்-ல் நடந்த யுனெஸ்கோ (UNESCO) மாநாட்டில் இத்தினத்தை ஓர் இலக்கியச் சிறப்புமிக்க நாளாக அனுசரிக்க உத்தேசித்து, புத்தகங்களையும் நூலாசிரியர்களையும் சிறப்பிக்கும் வகையில் ‘உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தின’ மாக (World Books and Copyright Day) அறிவிப்பு செய்யப்பட்டது.

அன்று தொட்டு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலக நாடுகளில் புத்தகங்கள் தொடர்பான இலக்கியக் கூட்டங்கள், போட்டிகள், புத்தகத் திருவிழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நூலாசிரியர்கள் நம் சமூகத்திற்கு ஆற்றும் அளப்பரிய சேவைகளையும், புத்தகங்களின் சமூகப் பங்கையும் போற்றி, புத்தக ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் இத்தினம் யுனெஸ்கோ அமைப்பினால் தொடங்கப்பட்டது.

அது சரி! அது என்ன புத்தகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் என்ற கேள்வி புத்தக ஆர்வலர் அல்லாதோருக்கு எழலாம். ஆம்! புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது நம்முடைய மற்றும் நாம் சார்ந்த சமூகத்தின் பெருங்கடமை! நாகரிகம் தோன்றிய காலம் தொட்டே மனிதர்களுடைய எண்ணங்களையும், தகவல்களையும் வெளிப்படுத்தக் கூடிய முக்கியமான தொடர்பு கருவிகளாக புத்தகங்கள் இருந்து வந்துள்ளன. இப்போது இருப்பது போல இணையம் இல்லாத அந்த கால கட்டத்தில், முன்னோர்கள் செய்து வைத்த தகவல் களஞ்சியங்கள் இந்தப் புத்தகங்கள். நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு சமூகத்தின், ஒரு இனத்தின் செயல்பாடுகள், அவர்களின் வாழ்வின் முறைகள் குறித்த தகவல்களை புத்தகங்கள் வாயிலாகத் தான் நாம் அறிய முடிந்தது.

மனிதனின் சிந்தனை வளர்ச்சி எவ்வாறு காலம் காலமாக மாறி வந்திருக்கிறது என்பதை அறிய புத்தகங்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்திருக்கின்றன. இத்தகைய புத்தகங்களைச் சிறப்பிப்பதற்காக இந்த நாளினை அனுசரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டுள்ளோம்; குறிப்பாக புத்தக ஆர்வலர்கள்! பிற நாடுகள் தவிர்த்து, பல்வேறு வகையான மதம் மற்றும் பண்பாட்டு விழாக்களுக்கு பெயர்பெற்ற தென்-கிழக்கு ஆசிய நாடுகளிலும் கூட புத்தகத்திற்கென ஒரு நாள் வைத்து கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தி! இந்த அளவிற்கு புத்தகங்களின் ஆதிக்கம் நம்மிடையே கூடியிருக்கிறது! 

“உலகின் பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப் பட்டபோது புத்தகங்கள் தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்!”  ஆம்! உண்மையில் இந்த உலகம் இவ்வாறான பண்புகளைக் கொண்டிருக்க அடிப்படைக் காரணம் புத்தகங்கள் வாயிலாக நாம் பெற்ற செய்திகளே!

இத்தகைய புத்தகங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களையும், மாறுதல்களையும் கடந்து வந்திருக்கின்றன. கி.மு. 3500-ல் மெசபொடேமிய சமவெளிகளில் வாழ்ந்த சுமேரியர்களே முதன்முதலில் எழுத்தின் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். மெசபொடேமிய நாகரிக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மற்றவர்க்கு சைகைகள் மூலமாகத் தெரிவிக்கத் தொடங்கி, பின்னர் அது மொழியென வளர்ச்சி பெற்றது. அறிவின் வளர்ச்சியால் மனிதன் தன்னுடைய எண்ணங்களை, தனக்குப் பின் வரும் சந்ததியினருக்கும் தெரிவிக்க எண்ணி கோடுகள் போன்ற குறியீடுகளைக் கண்டுபிடித்தான். இதுவே பண்டைய நாகரிக மேம்பாட்டின் முக்கிய காரணமாய் அமைந்த எழுத்தின் பரிணாம வளர்ச்சி!

பண்டைய மனிதர்கள், அவர்கள் கண்டுபிடித்த கோடுகளையும், வளைவுகளையும் தாங்கள் வாழ்ந்த குகைகளிலும், பாறைகளிலும் பதிவு செய்தனர். ஆனால், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அவர்கள் புலம் பெயரும் பொழுது இந்த செய்திகளை அவர்களால் தங்களுடனேயே கொண்டு செல்ல இயலவில்லை. எனவே பயணப்படும்போது எளிதில் கொண்டு செல்லும் வகையில் பெரிய கற்கள், ஓடுகள் போன்றவற்றில் செய்திகளைப் பதிவு செய்தார்கள். இவ்வகையான பொருட்களும் எளிதில் பயன்படுத்தக் கூடியதாய் இல்லாமல் போகவே, மீண்டும் அவர்கள் எளிதில் கிடைக்கக் கூடியதும், சிரமமின்றி எழுதக் கூடியதுமாகிய பொருட்களை உபயோகித்தனர். அவ்வகையில் மெசபொடேமிய சமவெளிகளில் அதிகம் கிடைக்கக் கூடியதான களிமண்ணைக் கொண்டு வில்லைகள் (Clay Tablets) செய்து, அதில் எழுத்துக்களைப் பதித்து அவற்றை நெருப்பில் சுட்டுப் பாதுகாத்தனர். சுமேரியர்களின் Cuneiform என்னும் இந்த எழுத்து முறையே உலகின் மிகப் பழமையான எழுத்து முறையாகும்.

காலப்போக்கில் இந்த களிமண் வில்லைகளும் செய்திகளை வேறிடத்திற்குச் சொல்ல வசதியாக அமையாததால், கி.மு. 3000-ல் ‘பாப்பிரஸ்’ (Papyrus) எனப்படும் ஒரு வகை நீர்த் தாவரத்தைப் பயன்படுத்தினர். இவற்றை அதன் தன்மைக்கேற்றவாறு பதப்படுத்தி, சுருல்களாகவோ, பட்டைகளாகவோ (Scrolls & Stripes) வடிவமைத்து எழுதினர். பண்டைய நாகரிகங்களில் பெரும்பாலான புத்தகங்கள் இந்த ‘பாப்பிரஸ்’ கொண்டே எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில புகழ்ப்பெற்ற ‘அலெக்ஸாந்திரியா நூலக’த்தில் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

எகிப்த்தியர்கள் பாப்பிரஸ் பயன்படுத்தியது போல, கி.மு. 1500-களில் சீனாவில் மூங்கில் பட்டைகள் (Bamboo Stripes) புத்தகங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இவ்வகைப் புத்தகங்கள் கி.மு. 500 வரை பரவலாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. பின், கி.மு.400 காலகட்டத்தில் ஆடுகளின் தோள்களைப் பதப்படுத்தி ‘பார்ச்மெண்ட்’ (Parchment) எனப்படும் எழுதும் ஏட்டினைக் மீண்டும் எகிப்தியர்களே கண்டுபிடித்தனர். பாப்பிரஸ்-ன் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், அதன் தட்டுப்பாட்டினை சமாளிக்கவும் ஒரு மாற்றாகவே இந்த ‘பார்ச்மெண்ட்’-கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அக்காலத்தில் வாழ்ந்த எகிப்திய பண்டிதர் ரோமன் வாரோ குறிப்பிடுகிறார். இவை தரமான எழுது பொருளாக இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. மேலும் ‘பார்ச்மெண்ட்’-களில் சிறந்த தரமானவை ‘வெல்லம்’ (Vellum) எனக் குறிக்கப்பட்டன.

கி.மு. 200 காலத்தில் இந்த எழுத்து உபகரணங்கள் மேலும் பல வடிவங்கள் பெறுகின்றன. அந்த சமயத்தில் கிரேக்க மற்றும் ரோம் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் மெழுகை பயன்படுத்தி எழுதும் முறை (Wax Tablets). சிறிய மரப்பலகைகளின் மீது மெழுகை பரப்பி, அதன் மீது ‘Stylus’ எனப்படும் கூர்மையான எழுதுபொருள் கொண்டு எழுதுவது இதன் பண்பாகும். இதன் மூலம் மக்கள் ஒருமுறை எழுதியதை (மெழுகின் உருகும் தன்மையால்) மீண்டும் எளிதில் அழித்து எழுதும் முறையைக் கற்றனர். இவ்வகை மெழுகு வில்லைகளை ஒன்றுசேர்த்து அவற்றை வட்டமான உலோகம் கொண்டு இணைத்து (இன்றைய spiral பைண்டிங் போல) ஒரு முழுப் புத்தகமாக உருவாக்கினர். ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ‘Codex’ என அழைக்கப்பட்ட இவ்வகைப் புத்தகங்கள் சுருள் வடிவ புத்தகங்களுக்கு ஒரு மாற்றாக அமைந்தன.


மேலும் இதே கி.மு.200-களில் இந்தியாவில் பூர்ஜ் மரப்பட்டைகள் எழுதுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பழங்கால புத்தமத உரைகள் இவ்வகை ‘Birch Bark’ –களிலேயே எழுதப்பட்டன. இவை தவிர இந்தியாவில் கற்கள், உலோகத் தகடுகள், பனை ஓலைகள், துணிகள் ஆகியவை முக்கியமான எழுது பொருள்களாக பயன்பட்டன.

இப்படியாக வடிவங்கள் மாறி மாறி புத்தகங்கள் மக்களிடையே தங்களைப் புகுத்திக் கொண்டிருந்த காலத்தில் கி.பி.105-ல், சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த பேப்பர் கண்டுபிடிப்புக்கு சுவையான ஒரு கதையும் உள்ளது. சீனாவில் சாங் மன்னர் அரசவையில் பணிபுரிந்த ‘சை லூன்’ (Cai Lun) என்பவர் எழுதுவதற்கு துணிகளைத் துவைத்து கஞ்சிபோடும் போது கொஞ்சம் கீழே சிந்தி விட்டதாம்! அப்படி சிந்திய கஞ்சி, கீழே கிடந்த நார்ப்பொருட்களின் மீது விழுந்து, அது காய்ந்ததும் தட்டையான, வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருந்தது. இதைக் கண்டதும் அதிகாரி ‘லூன்’-ன் மூலையில் பொறி தட்டுகிறது. உடனே அவர் மல்பெரிச் செடி, மரப்பட்டைகள், நார்ப்பொருட்கள், மீன் வலை மற்றும் கஞ்சி சேர்த்து காகிதம் தயாரிக்கிறார். இவருடைய இந்த முயற்சி வெற்றி பெறவே, அந்த காகிதங்களை மன்னருக்கு அவர் அன்பளிப்பாகத் தருகிறார். இந்த மன்னர் இறந்தபோது அவருடன் சேர்த்து அவர் பயன்படுத்திய பொருட்களும் புதைக்கப்பட்டன. இதுவே காகிதம் பிறந்த கதை எனச் சொல்லப்படுகிறது. அக்காலம் முதலே சீனாவில் காகிதம் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் சீனாவில் நடந்த தொல்பொருள் ஆய்வுகளில், சாங் மன்னரின் கல்லறையில் இந்த பண்டைய காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் பயன்பாட்டுக் காலம் வரலாற்றறிஞர் டாக்டர்.கோல்டுஸ்டெயின் என்பவரால் கணிக்கப்பட்டது.


பல ஆண்டுகாலமாக இந்த காகிதம் தயாரிக்கும் முறையை சீனர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர் (பட்டுத் தயாரிக்கும் முறை போலவே). சீன நாகரிகம் பரவத் தொடங்கியதும், கூடவே இந்த காகித தயாரிப்பின் ரகசியமும் கி.பி. 345-ல் கொரியாவிற்கும், கி.பி.610-ல் ஜப்பானுக்கும் பரவியது. பின்னர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் நடந்த ‘சமர்கந்த்’ போருக்குப் பின் அரேபியாவிற்கும், அங்கிருந்து கி.பி.793-ல் பாக்தாது, கி.பி.900-ல் எகிப்து, கி.பி.1100-ல் மொராக்கோ, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கும், 1200-ல் இத்தாலி, கி.பி.1312-ல் ஜெர்மனி மற்றும் கி.பி.1328-ல் ஹாலாந்து நாட்டிற்கும் காகித தயாரிப்பு முறை பரவியது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இம்முறை கி.பி.15 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் பரவியது.

இவ்வளவு பெரிய வரலாறு கொண்ட காகிதங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் பேப்பர் பயன்பாடு இருந்ததாக கி.மு. 327-ல் இந்தியாவிற்கு அலேக்ஸாந்தரின் படையெடுப்பின் போதுவந்த, அவரது தளபதிகளில் ஒருவரான ‘நிர்சஸ்’ (Nearchus) என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பூனா பேராசிரியர் ஒருவர் தனது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார்.

பின்வந்த காலங்களில், எழுத ‘மை’-யும் (Ink) கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மக்கள் காகிதத்தில் எழுதத் தொடங்கினர். ஆயினும், பெரும்பாலான மக்கள் ‘பார்ச்மெண்ட்’-களிலேயே பரவலாக எழுதி வந்தனர். வெறும் கோடுகள், வளைவுகள், மற்றும் எழுத்து வடிவங்களாக இது வரை எழுதப்பட்டு வந்த புத்தகங்களில் மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி வண்ண ஓவியங்களும் (Illustrations) இடம் பெறத் தொடங்கின.

இதற்குப் பின்னர் கைகளால் எழுதும் முறை தவிர்த்து சீனாவில் ‘அச்சு முறை’ (Block Printing) பயன்பாட்டிற்கு வந்தது. இது கி.பி.220-களில் மரக்கட்டைகளில் உருவங்களைச் செதுக்கி, மையில் தோய்த்து, துணிகளில் அச்சு எடுக்கப் பயன்படுத்தப்பட்ட முறையாகும். இம்முறையைப் பயன்படுத்தி கி.பி.868-ல், முதல் ‘காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகம்’ (1st paper printed book) வெளிவந்தது.


ஒருவழியாக காகிதம் கண்டுபிடித்தாயிற்று! மை-யும் கண்டுபிடித்தாயிற்று! ஒருபடி மேலே போய் கைகளால் செய்யப்பட அச்சுகளும் கண்டுபிடித்தனர். ஆயினும் மனிதனின் இந்த அதிவேக அறிவு வளர்ச்சி தடைப்பட்டு ஒரு புள்ளியில் நிற்காமல், 1440-ல் ஜெர்மனி-யைச் சேர்ந்த Johannes Gutenberg என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். மேலும் 1798-ல் Nicholas Louis Robert என்பவரால் காகிதம் தயாரிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப் படுகிறது. பின்னர், 1476-ல் William Caxton என்பவரால் Westminister நகரில் அச்சகம் ஒன்று தொடங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து 16-ஆம் நூற்றாண்டுகளில் மேலும் பல அச்சகங்கள் பல்வேறு நாடுகளிலும் இயக்கப்பட்டன. இப்போது புத்தகங்கள் சிரமமின்றி, எளிதில் அச்சிடப்பட்டு வெளிவர ஆயத்தமாகின்றன.

இதைப் போலவே இந்தியாவிலும் போர்த்துகீசியர்களால் கோவா-வில் அச்சகம் தொடங்கப்பட்டது. அதில் முதல் நூலாக இந்த இயந்திர முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் 1578-ல் ‘DOCTRINA CHRISTAM’ என்ற நூல் தமிழில் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற பெயருடன் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. இதற்கு முன்பே 1554-ல் லிஸ்பன் நகரில் ‘கார்டிலா’ என்ற நூல் தமிழ்மொழியில் அச்சிடப்பட்டது. ஆயினும் ‘DOCTRINA CHRISTAM’ நூலே இந்திய மொழியில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது.

பின்னர் தென் இந்தியாவிற்கு வந்த Bartholomäus Ziegenbalg (சீகன் பால்க் ஐயர்) 1714-ல் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பை அச்சிட்டு வெளியிடுகிறார். இதைபோலவே உலகின் பல்வேறு நாடுகளிலும் நூல்கள் அச்சிடப்பட்டு மக்களைச் சென்று சேர்ந்தன. இப்படியாக அச்சுப் புரட்சி நடந்து கொண்டிருந்த வேளையில், இத்தாலியைச் சேர்ந்த Aldo Manuzio il Vecchio என்பவர் வெனீஸ் நகரில் Aldine அச்சுக்கூடத்தை நிறுவுகிறார். இவர்தான் எழுத்துருவில் சிறிய மாற்றமொன்ரைப் புகுத்த எண்ணி Italian Typeface என்னும் சாய்வாக எழுதும் முறையையும், அரைப்புள்ளிகளின் (Semi-colon) பயன்பாட்டையும் அச்சுகளில் புகுத்துகிறார். மேலும் இவர் சிறிய அளவிலான கையடக்கப் புத்தகங்களை (Pocket Books) கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் அச்சிட்டு வெளியிடுகிறார். இவ்வாறு இவரின் கையடக்க சாய்வெழுத்து நூலாக Virgil எழுதிய "Opera" 1501-ல் வெளிவந்தது.

இதற்குப்பின்னர், 1832-ல் Walter Scott என்பவர் எழுதிய கதைகளின் தொகுப்பு நூல் "The Keepsake" அல்லது  “The Annual" என்னும் பெயரில் நூல் அட்டைக்கு மேலே பாதுகாப்புடன் கழற்றி பொருத்தும் வகையில் காகித மேலட்டைகளுடன் (Paper Jackets) வெளிவந்தன. பிற்பாடு தோல் மற்றும் துணிகளும் பயன்படுத்தப்பட்டன. 1832 தொடங்கி கதை மற்றும் நாவல்கள் அதிகமாக அச்சிடப்பட்டு மக்கள் வாங்கும் வகையில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.


இவ்வாறுதான் புத்தகங்கள் மக்களைத் தேடி படையெடுத்து வரத்தொடங்கின. மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மனித அறிவின் அபரிமித வளர்ச்சியாலும் இப்புத்தகங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வடிவங்களைத் தாங்கி நம்மிடையே பரவியுள்ளன. மெதுவாக, 2000 ஆண்டுகளில், அச்சு நூல்களில் இருந்து மின் நூல்கள் வெளிவரத் தொடங்கின. பின்னர் குறுந்தகடு நூல்களும், இணைய நூல்களும் வெகுவாக மக்களைக் கவரத் தொடங்கின. இவற்றின் காரணமாக புத்தகங்களை தரவிறக்கம் செய்து, மக்கள் செல்லும் இடமெல்லாம் படிக்கும் வகையில் இணையம் உறுதுணையாக இருந்து வருகிறது. இதுவே புத்தகங்களின் நீண்ட வரலாறு.

எவ்வாறாயினும், எவ்வடிவில் இருந்தாலும் மனிதனின் உற்ற தோழனாக புத்தகங்கள் எக்காலத்திலும் இருந்துவந்துள்ளன. ஒரு நாட்டின் சக்தியை புத்தகங்களைக் கொண்டே தீர்மானிக்கும் காலத்தில் நாமிருக்கிறோம். ஏனெனில் இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் ஆதாரமாக புத்தகங்களே நிலைத்திருக்கின்றன!

புத்தகங்களை வாசிப்போம்! நேசிப்போம்!

“உலக புத்தக தின வாழ்த்துகள்!” – கதைசொல்லிகள் 

குறிப்புதவி நூல்: 'நூல்கள்: பயன்பாடும், பாதுகாப்பும்',
ஆசிரியர்: முனைவர்.ப.பெருமாள்

0 comments: