Nov 10, 2023
வணக்கம் நண்பர்களே!... இத்தனை நாள் வரை சாப்பாடு
மற்றும் வாழ்விடங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாம் இப்போது கொஞ்சம்
கலைப் பண்பாடு பற்றியும் கதைப்போம். ஆம்...இன்று நாம் இந்தியாவின் மிக மிகப்
புகழ்ப்பெற்ற கலை வடிவமான “Record Dance” மற்றும்
“தேவதாசி நடனம்” பற்றிப் பார்ப்போம்.
இந்திய நடன வடிவங்கள் பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. இது பண்டைய காலத்திலிருந்து நவீன காலம் வரை ஒரு பெரிய பரிணாமத்தை கொண்டுள்ளது. மொழி உருவாவதற்கு முன்பே நடனக்கலை உருவாகி, பரிணாம வளர்ச்சியில் பெரும்பங்கு வகுத்துள்ளது.
பொதுவாக பல கலை நிகழ்ச்சிகளில் பரதம், குச்சிப்புடி போன்ற நடன நிகழ்வுகளே நிகழ்த்தப்
படுகின்றன. ஆனால், எண்ணிப் பார்த்தால் இது என்ன புது வகை ரெகார்ட் டான்ஸ் என்று
நமக்குத் தோணலாம். அந்த அளவுக்குப் பின்தங்கிய இடத்தில் இருக்கிறது இந்த கலை
வடிவம்.
அது என்ன ரெகார்ட் டான்ஸ்? இது எங்கிருந்து வந்தது? இதன் பின்னணி என்ன? வாங்க பார்க்கலாம்!
ரெகார்ட் டான்ஸ்... இது பொதுவாக இந்தியாவின் தென்
பகுதிகள்-ல பெரும்பாலும் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பகுதிகளில்
திருவிழாக்களின் போது நடத்தப் படுகிறது. பொதுவாக பாமர மக்கள் அதிகம் வசிக்கும்
இடங்களிலும் கிராமங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கலைஞர்கள் நாடகம்
மற்றும் திரைப்படங்களில் வரும் நடிகர்களைப் போல் வேடமிட்டு அவர்களைப் போலவே ஆட்டம்
ஆடிக் காண்பிப்பார்கள். பண்டைய காலங்களில் மாட்டு வண்டிகளில் கூட்டம் சேரும்
இடங்களுக்கும், கோயில் திருவிழாக்களுக்கும் சென்று ரெகார்ட் நடனம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள்
சுற்றி நின்று ரசித்து தங்களால் இயன்ற அளவு சன்மானம் வழங்கிச் செல்வர். இந்த நடனம்
இன்றும் வாடா மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது. தெற்கே இது காலப் போக்கில் நெளிந்தும்
அழிந்தும் போயிவிட்டது.
அடுத்து,...தேவதாசி முறை நடனம்!... யார் இந்த
தேவதாசிகள்!?...
பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் வறுமை தாங்காமல்
கோயில்களுக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டனர். அவர்களை ‘தேவதாசிகள்’ என்று அழைத்தனர்.
இவர்கள் கோவில்களில் இறைவனுக்காக நடனமாடி பாடினர். இவர்கள் தங்கள் வாழ்நாளை இறைப்
பணிக்காக அர்பணித்து பெரிய தனக்காரர்களுக்கு தாசியாக வேலைப் பார்ப்பார்கள்.
இந்த தேவதாசிகள் தான் தென்னிந்தியாவில் ‘பரதம்’ என்ற நடனக் கலையை
தோற்றுவித்தார்கள். கோயில்களில் அவர்கள் ஆடும் ஆட்டத்தை “சதிர் ஆட்டம்” என்று
விளித்துத் தங்கள் வாழ்நாளை அற்பனித்தாலும் அவர்களை தாசிகள் என்றே இந்தச் சமூகம் இழிச்சொல்லால்
குறிக்கப்பட்டனர்.
பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் தேவதாசிகளின் நடன வடிவத்தைப் பற்றிய
குறிப்புகளும் உள்ளன. இவை தவிர பண்டைய நூல்களிலும், சிற்பங்களிலும் தேவதாசிகளின்
நடன வடிவங்கள் காணப்படுகின்றன.
தேவதாசி முறை மற்றும் அதன் சதிர் நடன வடிவும் அழிந்து போனதற்கு வரலாறு இரண்டு காரணங்களை
சொல்கிறது. முதலாவதாக, பெர்சியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் வந்தபோது; இரண்டாவதாக, காலனித்துவத்தின் வருகையால். பிற்காலத்தில் இந்த சதிர் நடனம் பரதக்கலையாக
மற்றம் பெற்று இன்று பிரபலமடைந்திருக்கிறது.
மற்றவை... அடுத்தப் பதிவில்!...
Oct 31, 2023
பிச்..சைக்...கா...ரன்ன்ன்.....என்னடா இது! தொடக்கமே பயங்கரமா இருக்கே-னு பாக்குறிங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. வழக்கம் போல தான்... ரொம்ப நாளைக்கு அப்புறம் blog பக்கம் வரோமே... அதுனால ஒரு மாஸ் entry குடுக்கலாம்-னு தான்!
பகுதி 1:
கார் அடையார் சிக்னலில் நின்றது! ச்சை! என்ன கஷ்டம் டா இதுங்களோட போராடுறது! வரிசையா
வந்து நிக்குதுங்க. இந்த சிக்னல்-ல மாட்டினாலே இது ஒரு பிரச்சனை. அநியாயத்துக்கு
பதினஞ்சு நிமிஷம் நிக்க வெக்குறான்! தலையில் அடித்துக்கொண்டேன்! எம்மா...துட்டு
இல்ல அப்டி போமா...போ... கார் கண்ணாடியை இறக்காமலே கத்தினேன். அடுத்து ஒரு நொண்டி
பரதேசி வந்தான். கார் கதவை தன் தடியினால் மெல்லத் தட்டினான்...நான் வேறு பக்கம்
திரும்பி கொண்டேன். பின்னர் ஒரு பெண் கையில் பேனாக்களோடு வந்து யாசகம் கேட்டாள்.
பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அந்தப் பெண் காசை வாங்கிக் கொண்டு பேனாவைக்
கொடுக்காமலே வேறு வண்டியைப் பார்த்துக் கொண்டு போய் விட்டது. எனக்குக் பத்து
ரூபாய் போய் விட்டதே என்ற ஏக்கம் தீருவதற்குள் அடுத்தவள்,....என் கார் கண்ணாடியின் மேல் சோப்பு நீரைத்
தெளித்து சுத்தம் செய்தாள்! நான் சிக்னலுக்காக கோவமாய் காத்திருந்தேன். அந்தப்
பெண்ணுக்கு பணம் கொடுக்க மனம் வரவில்லை... பத்து ரூபாய் பரிபோனதன் விளைவு. அவள்
என் காரின் பின் பக்க கண்ணாடியின் மேல் துப்பிவிட்டு ஓடிவிட்டாள்! சிக்னல்
விழுந்தது.... விர்ரென்று காரை எடுத்துகொண்டு நகர்ந்து விட்டேன். ச்சை... நாட்டில்
பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகி விட்டது... இதுகள் ஒழிந்தால் தான் நாடு
முன்னேறும்!...
பகுதி 2:
சிக்னல் விழுந்ததும் அரக்கப் பறக்க ஓடிய வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக
கடந்து ஒன்று சேர்ந்தது ஒரு சிறிய பரதேசிக் கூட்டம். “எக்கா...உனுக்கு எவ்ளோ
கட்சிது இந்தக் கூட்டத்துல...? ஒரு பரதேசி பய கூட பிச்ச போட மற்றானுங்ககா”... “ஏண்டி
ராணி...உன் கொயந்தய பாத்து கூடவா போடல...?” “அட போக்கா... இப்போ எல்லா பயலுகளும்
முழுச்சிக்கினானுங்கோ... அதான் ஒரு பைசா பெர்ல...” “இந்த நொண்டி காலோட எவ்ளோ நேரம்
தான் நடிக்குறது.... பேமானி பயலுங்க..துட்டு இல்லாம எதுக்கு வெளிய வரானுங்க!!...” “வூடு
தாத்தா...அத்த சிக்குனலுல பாத்துக்கலாம்....”
பகுதி 3:
மஞ்சள் விளக்கு எரிந்தது! (இவர்களின் வயிற்றுக்குள்ளும்!!)
இத பாத்தா எனக்கு கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருதுங்க!
“அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி,
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
Mar 22, 2023
வையத்து மாந்தரெல்லாம்
வளமுடனே வாழுதற்கு
நலமான சிந்தனை வேண்டும்...
சிந்தனைக்கேற்ற செயலும் வேண்டும்!
நாட்டுநலனும் வீட்டுநலனும்
நன்றாய் ஓங்கிச் செழித்திடவே
நல்லோர் வாக்கைத் தொழுதிடல் வேண்டும்...
நாளும் அதன்வழி நடந்திடல் வேண்டும்!
பெண்கள் உயர்வதை உலகுக்குக் காட்டிய
பெரியோர் மண்ணில் பலருண்டு...
இதை உணர்ந்து நடந்தால்
பெண்கள் வாழ்வில் ஒளியுண்டு!
அகிலம் போற்றும் அன்னை தெரசா
அருள்நெறி வழியைக் காட்டியவர்!
இருட்டு வாழ்வில் மூழ்கிடுவோர்க்கு
புது வாழ்வாம் ஒளியைக் கூட்டியவர்!
வீரமும் அறிவும் பெண்கள் பெற்றால்
தீரமும் உயர்வும் ஓங்கிடுமே!
நல்ல சேவையும் பெருகித் தழைத்திடுமே!
மேத்தா பட்கர், நம் கிரண்பேடி
நாட்டுக் குழைக்கும் நங்கையராம்
நம் பாரதம் போற்றும் தனி மங்கையராம்!
பாரதி சொன்ன புதுமைப் பெண்ணாய்
பாரின் மீதில் வலம்வர வேண்டும்!
நாளும் நாளும் நாம் கற்று
நாட்டை உயர்த்தி நலம் தர வேண்டும்!
பெண்ணின் பெருமை உயர்ந்து நின்றால்
நம் மண்ணின் பெருமையும் உயர்ந்திடுமே!
இதை எண்ணத்தில் கொள்வோம்...
பொது நெறி சொல்வோம்...
பெண் உரிமை தன்னையே காத்திடுவோம்!
வள்ளுவன் வழியில் சமநெறி பாடி
அகமோடு அன்புஅதை, புறமோடு வீரமதை
நெகிழ்வோடு தந்த தமிழாம்!
முப்பாலை குறளிலே முறையாகக் கூறியே – முன்
நிற்கும் மூத்த மறையாம்!
பண்டுபுகழ் நாடெலாம் பணிவோடு நாடியே
பல்வளம் பாடும் மொழியாம்!
அன்புநெறி வாழ்வின்பொருள் எடுத்துச்சொல்லியம்பிடும்
காப்பியம் தந்த தமிழாம்! – தொல்
காப்பியம் தந்த தமிழாம்!
இனிமையால் எளிமையால் இளகிடும் தன்மையால்
ஈர்த்திடும் திறன் கொண்டதால்...
தனித்ததாய், சுவைத்ததாய், ஆய்வினுக்கருமையாய்,
இலக்கியம் சொன்ன தமிழாம்!
மன்னர்தம் கொடைத்திறம், களம்கண்ட படைத்திறம்
பாடிடும் பண்டு தமிழாம்!...
இன்னருள் இறைபுகழ் இதையத்தில் ஏற்றிடும்
இணையிலா மறையின் தமிழாம்!
அறிவியல், பொறியியல், ஆகாயவெளியியல்
ஆற்றலை ஆய்ந்த தமிழாம்!...
அப்துல் கலாமெனும் இணையிலா மனிதனை
உலகுக்கு தந்த தமிழாம்!
நீதிநெறி பாடியே நிலையாமை கூறியே
வாழ்வின் பொருளான தமிழாம்!
தமிழ்விடு தூதெனும் தனிநிகர் பாட்டுக்கு
பாடு பொருளான தமிழாம்!
இயல், இசை, கூத்தெனும் முத்தமிழ்
வடிவினில் மூன்று தமிழான தமிழாம்...
அயலாரின் ஆட்சியில் அவலங்கள் போக்கியே
தேசியம் காத்த தமிழாம்!
கம்பனை பாரதியை பொதுமறைதந்த வள்ளுவனை
உலகுக்கு தந்த தமிழாம்! – புது
அறிஞரை, ஆன்றோரை, அறிவியல் சான்றோரை
இனியும் தந்திடும் எங்கள் தமிழாம்!