Apr 2, 2014

உப்பு, புளி, மிளகாய்! - ‘பிட்சா’

‘உணவு’ –மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே மனித குலத்தின் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் உணவின் தாக்கம் மிகுதியாக இருந்து வந்துள்ளது. மனிதன் உயிர் வாழத் தேவையான அடிப்படை இந்த உணவு. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு இடத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றார்போல மனிதர்களுடைய உணவும், வாழ்க்கைமுறையும் வேறுபடுகிறது. அதை பொறுத்தே வெவ்வேறு உணவின் சுவைகளுக்கு அடிமையாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரி! இப்படி நமக்குப் பிடித்த உணவு வகைகளைத் எங்கு சென்றாலும் தேடித் பிடித்து உண்கிறோம். ஆனால், என்றாவது அவ்வுணவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள எண்ணியிருக்கிறோமா? உண்ணும் உணவோடு, அது தோன்றிய கதையையும் தெரிந்து சாப்பிட்டால் இன்னும் ருசிக்குமே! எனவே, உலக உணவு வகைகள் பற்றிய கதைகளை இந்த ‘உப்பு, புளி, மிளகாய்’ பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்வோம்!

‘உப்பு, புளி, மிளகாய்’ வரிசையில் முதலில் உலக மக்கள் எல்லோரின் விருப்பமாக இருக்கும் ‘பிட்சா’ [PIZZA] உணவு வகை!

இப்போது அமெரிக்கர்களின் விருப்ப உணவாக விளங்கும் இந்த ‘பிட்சா’ –க்களுக்கு மிகப் பழமையான வரலாறு ஒன்று உண்டென்றால், ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆம்! பொதுவாகவே ‘பிட்சா’ என்பது இத்தாலிய உணவு என்று பரவலாக அரியப் படுகிறது. ‘Pizza’ என்னும் பதம் ‘ரொட்டி’ எனப் பொருள்படும், லத்தீன் மொழியான ‘Pinsa’ என்னும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள். பண்டைய இத்தாலியில் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆவணங்களில் ‘பிட்சா’ பற்றிய குறிப்புகள் பதியப் பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும் ஒருசாரார், ‘பிட்சா’-வுக்கு கி.மு. முதலாம் நூற்றாண்டு தொட்டே வரலாறு இருப்பதாகக் கூறுகின்றனர். சரி! இனி ‘பிட்சா’-வுக்கு பரவலாக இருக்கும் வரலாற்றினைக் காண்போம்!


பழமையான வரலாற்றினைக் கொண்ட இந்த ‘பிட்சா’–வை இத்தாலியர்கள் அறிமுகம் செய்தனர் எனக் குறிக்கப்படுகிறார்கள். பழங்கால பாபிலோனியர்கள், இசுரேலியர்கள், எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்தவர்கள் சுடுமண் அடுப்புகளில் சமைக்கப்பட்ட, தட்டையான ரொட்டி போன்ற ஒரு உணவை உண்டு வந்துள்ளனர். பண்டைய கிரேக்க, ரோமானிய மக்களும் இவ்வகையான ரொட்டிகளின் மீது ஆலிவ் எண்ணெய் மற்றும் அங்கே கிடைக்கக் கூடிய மூலிகைகளையும் சமமாக அடுக்கி உண்டு வந்துள்ளனர்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் ‘மார்கஸ் போர்சியஸ் கேதோ’ (Marcus Porcius Cato) என்பவர் ரோம்-ன் வரலாற்றினை முதன்முதலாக எழுதுகையில் அவர் ‘தட்டையான வட்ட வடிவ திட மாவின் மீது ஆலிவ் எண்ணெய், மூலிகைகள் மற்றும் தேன் போன்றவற்றை வைத்து, கற்களால் செய்யப்பட அடுப்பில்’ சமைக்கும் ஒரு உணவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் பாரசீக மன்னரான ‘மாவீரன் டாரியஸ்’ –ன் (Darius the Great) படைவீரர்கள் போரின்பொருட்டு தொலை தூரங்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அச்சமயத்தில் அவர்களிடமிருந்த தட்டையான பாதுகாப்புக் கருவிகளின் மீது தட்டையான ரொட்டிகளை சுட்டு, அதன்மீது பாலடைக் கட்டிகளையும், பேரீச்சம்பழங்களையும் வைத்து உண்டதாகவும் ‘பிட்சா’-வுக்கு ஒரு வரலாறு உண்டு.

கி.மு. போதும்! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என கி.மு.-விலேயே அறிந்தவர்கள் பாதுகாப்பு கவசத்தில் பிட்சா சுட்டிருக்கிறார்கள்! துப்பாக்கிகள் இல்லாத காலத்திலும் சுட்டுக்காட்டியவர்கள் (பிட்சா-வை) இவர்கள்! இனி கி.பி.-களுக்கு வருவோம்!

கி.பி. முதலாம் நூற்றாண்டில் ரோம்-ல் ‘மார்கஸ் கேவியஸ் அபிசியஸ்’ என்பவரால் எழுதப்பட்ட (Marcus Gavius Apicius) “De Re Coquinaria" என்னும் புத்தகத்திலும், சற்றே குழைவான தட்டை ரொட்டியின் மீது சிக்கன், பாலடைக்கட்டி, பூண்டு, புதினா, மிளகு, எண்ணெய் போன்றவற்றை பரவச்செய்து சுடப்படும் உணவின் செய்முறை குறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இப்போதைய பிட்சா-வில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டுள்ள உணவாக இருந்தது!

16-ஆம் நூற்றாண்டுகளில் தக்காளிகள் ‘பெரு’ நாட்டிலிருந்து ஐரோப்பா-விற்கு அறிமுகமாகிறது. இவற்றை முதலில் விஷத்தன்மையுள்ள பழம் என்று ஐரோப்பியர்கள் கருதினர். பின்னர் அங்கிருந்த பழங்குடியின மக்கள் இவற்றை தங்கள் ரொட்டி போன்ற உணவுப்பொருட்களில் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

17-ஆம் நூற்றாண்டில் இந்த ரொட்டி வகை உணவு இத்தாலியில் பிரபலமடையத் தொடங்கியது.

1800–களின் தொடக்கத்தில், தென்-மேற்கு இத்தாலியின் ‘நேப்பிள்கள்’ (Naples) எனப்படுபவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்களாகவும், வறுமையில் உழல்பவர்களாகவும் இருந்தனர். எனவே இவர்களுக்கு விலை அதிகமில்லாத ஆனால் விரைவில் பசியை போக்கக் கூடிய ஒரு உணவு வகை அவசியப்பட்டது. இவர்களின் இந்த கோரப்பசியை சாலையோரக் கடைகளில் விற்கப்பட்ட, பல சுவைகளோடு கூடிய தட்டையான ரொட்டிகளால் சுலபமாகத் தீர்க்க முடிந்தது. இந்த பிற்படுத்தப்பட்ட ‘நேப்பிள்’-களால் அக்காலத்தில் விரும்பி உண்ணப்பட்ட சுவையான தட்டை ரொட்டிகள் தான், இன்று நாம் சுவைத்து உண்ணும் ‘பிட்சா’-கள்!

பின், 1889-ல் இத்தாலியின் முதலாம் அம்பர்டோ அரசரும், ராணி மார்கரீட்டா-வும் (King Umberto-I and Queen Margherita Di Savoia) இந்த நேப்பிள் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். முந்தைய பயணத்தில் பிரெஞ்சு உணவு வகைகளை உண்டு அலுத்துப் போயிருந்த இவர்கள் இத்தாலியின் பிரபலமான சமையற்காரரான ‘ரஃபேல் எஸ்போசிடோ’ (Raffaele Esposito) என்பவரிடம் தங்களுக்கு சுவையான இத்தாலிய உணவைச் சமைத்துத் தருமாறு கூறினார்கள்.


விருந்தினர்களை மகிழ்விக்க எண்ணிய ரஃபேல், நேப்பிள்களால் விரும்பி உண்ணப்பட்ட தட்டையான ரொட்டியின் மீது பன்றி இறைச்சியை தூவி ஒரு வகையும், பாலாடைக்கட்டி மற்றும் துளசியை தூவி ஒரு வகையும், மூன்றாவதாக தக்காளி, மொசரெல்லா பாலடைக்கட்டி (எருதின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவது), பச்சை துளசி ஆகியவற்றை பயன்படுத்தியும், 3 வகை பிட்சா-க்களை புதிய உணவாகக் கொடுத்தார். இதில் மூன்றாவது வகை ‘பிட்சா’-வின் சுவையில் மயங்கிய ராணி மார்கரீட்டா, பெரிதும் பாராட்டினார். ராணியே பிட்சா-வை விரும்பி உண்ட செய்தி இத்தாலி முழுதும் பரவ, இத்தாலியைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பிட்சா-விற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இது பிட்சா-களின் பொற்காலம் என்றே குறிப்பிடலாம். அன்றிலிருந்து, இவ்வகையான பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பிட்சா, ‘மார்கரீட்டா பிட்சா’ (Pizza Margherita) என அழைக்கபடுகிறது. (அடடே!!! நல்ல விஷயம் தானே!!!...)

19-ஆம் நூற்றாண்டில் நேப்பிள்-ல் இருந்து அமெரிக்கா-விற்கு குடியேறிய இத்தாலியர்கள் அங்கும் தங்களின் உணவான பிட்சா-வையே சமைத்து உண்டனர். இவ்வாறு, வெகு விரைவிலேயே பிட்சா-கள் அமெரிக்கா முழுதும் பரவின. மேலும் நேப்பிள்-ல் இருந்தது போலவே சிறுசிறு கடைகளிலும் பிட்சா-கள் மத்திய தர மக்களை குறிவைத்து, குறைந்த விலையில் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இவை அதிவேகமாக உலகம் முழுதும் பரவின. இவ்வாறுதான் ‘பிட்சா’ உணவு பிரபலமடைந்தது.

அமெரிக்கா-வில் தொடங்கப்பட்ட ‘பிட்சா கபே’-கள் (Pizza Café) தங்களுடைய கிளைகளை வெவ்வேறு நாடுகளில் அமைத்து அந்த நாட்டவர்களுக்கேற்ப பிட்சா சேவை (!!!...) செய்து வருகின்றனர். இப்படித்தான் பாலடைக்கட்டியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மார்கரீட்டா பிட்சா’ –விலிருந்து பல்வேறு வகையான பிட்சா-கள் உருவாகி உலகத்தாரின் சுவை மொட்டுகளை உயிர்பெறச் செய்து கொண்டிருக்கிறது.

“அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”

-என ‘வள்ளுவம்’ கூறுவது போல, எந்த வகை உணவானாலும் சரி! அவை அளவோடு உட்கொள்ளப்படும் போது, மனித உடலியக்கத்திற்கு எந்தவித ஊறும் விளைவிக்காது. கொழுப்பு சத்துகள் அதிகமுள்ள பிட்சா-களையும் அளவோடு சுவைத்து உண்டால் தீங்கு ஏதுமின்றி நீண்ட நாள் பிட்சா-களை சுவைக்கலாம்!

Apr 1, 2014

சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்! [ஏப்ரல் 2]

உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்-எஸ்.ராமகிருஷ்ணன்

சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் துடிப்பான, எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய இளம் மனங்களில் எது சரி, எது தவறு என்றுணரும் பக்குவத்தையும் எழுத்து வடிவில் விதைக்கின்றன.

குழந்தைகளானவர்கள் தாங்கள் எவற்றைப் பார்க்கிறார்களோ, படிக்கிறார்களோ அவற்றையே தங்களின் முன்-மாதியாகக் கொள்கிறார்கள். புத்தகங்கள், சிறுவர்களுக்கு எவ்வாறு வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திப்பதெனக் கற்றுக் கொடுக்கின்றன; அவை அவர்களுக்கு வாழ்வியல் சாத்தியங்களை பற்றிச் சிந்திக்க ஒரு களமாக அமைகின்றன; மட்டுமல்லாமல், புத்தகங்கள் நம் முன்னோர்களின் சேகரிக்கப்பட்ட அறிவையும், அதன் மூலமாக பண்பாட்டையும், சமூக மதிப்பீடுகளையும் சிறுவர்களுக்குள்ளே புகுத்துகின்றன.

சிறுவர்களின் புலனுணர்வு வளர்ச்சி, வார்த்தைகளை வெளிப்படுத்தும் திறன், கல்வி வளர்ச்சி -இவற்றிற்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய குழந்தை தெளிவான வார்த்தை உச்சரிப்பை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்ற குழந்தைகளை விட அதிகமாக பகுத்தறியும் திறன், எழுத்தாற்றல் மற்றும் விமர்சிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
இப்படியாக நம்மை நல்ல வாசிப்பாளர்களாக வார்த்தெடுத்த சிறுவர் இலக்கிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. இப்போது நாம் இருக்கின்ற இந்த இணைய உலகில், முன்பிருந்ததை விட மிக அதிகமான அளவில் சிறுவர் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. எண்ணிலடங்கா மின்-நூல்களும், இணைய நூல்களும் உள்ளன. வெவ்வேறு சிறுவர் இலக்கிய நூலாசிரியர்கள், வெவ்வேறு கதைக்களங்கள், வெவ்வேறு விதமான கதை சொல்லும் யுக்திகள், வெவ்வேறு வாசகர்கள், வெவ்வேறு வடிவங்கள் -என காலங்கள் மாற மாற, வளர்ந்து வரும் சமூகச் சூழல்களுக்கு ஏற்ப சிறுவர் நூல்களும் பல தலைமுறைகளாக, பல மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளன. இருப்பினும் எல்லா காலத்திலும், எல்லா தலைமுறையினரும் விரும்பி வாசித்த நூல்கள் எனச் சில நூல்கள் காலத்தால் அழியா புகழோடு உள்ளன. அவற்றை நாம் Classic Children’s Literature என்கிறோம்.

எத்தனை நவீன கதைகள் பல்வேறு காலங்களில் வெளிவந்திருந்தாலும், அவை ஒருபோதும் ‘ஹக்ல்பெரி ஃபின்’–ன் சாகசங்களுக்கும், கட்டை விரல் அளவு குட்டையான ‘தம்பலீனா’-வுக்கும், வெவ்வேறு உலகங்களில் பயணித்து வந்த ‘ஆலீஸ்’-கும் ஈடாகாது. இந்த பட்டியலில் இன்னும் பல தேவதைகளும், இளவரசிகளும், சில குட்டி முயல்களும், கரடிகளும் கூட அடங்கும். இவ்வகையான போற்றத்தக்க சிறுவர்களுக்கான நூல்களைப் படைத்தவர்களில் ‘ரால்ட் டால்’, ‘எனிட் பிளைடன்’, ‘சி.எஸ்.லூயிஸ்’, ‘பீட்ரிக்ஸ் பாட்டர்’, ‘சார்லஸ் டிக்கன்ஸ்’, ‘ஆண்டர்சென்’, ‘A.A.மில்னே’, ‘மைக்கேல் பாண்ட்’, ‘E.B.வைட்’, ‘மார்க் ட்வைன்’ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


இவர்களில் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ அவர்களுக்கு இந்நாளுக்குரிய தனிச் சிறப்பு உண்டு! அவரைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்!

நம்முடைய சுய சிந்தனைகளையும், உணர்வுகளையும், நெறிமுறைகளையும், நம் இயல்புநிலை பாதிக்காமல் பாதுகாப்பான முறையில் அந்த சிறுவர் நூல்கள் நம்முள்ளே வளர்த்தது போல வேறெந்தவொரு நிகழ்வும் செய்திருக்க முடியாது.  ஆனால் இன்றிருக்கும் சூழலில் "சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்" போல ஏதாவதொரு தினத்தில் தான் இது போன்று சிறுவர் நூல்களைப் பற்றி விவாதிக்க முடிகிறது.  வருடங்கள் இத்தனை கடந்த பின்னும், எங்காவது நூலகங்களிலோ, புத்தகக் கடைகளிலோ சிறுவயதில் வாசிக்காத ஏதேனும் சிறுவர் இலக்கிய நூல்களைக் காண நேர்ந்தால், அந்தப் புத்தகங்களை இழந்து விட்ட இளம்பருவத்தினை எண்ணி மனம் கசந்து போகிறது.

சர்வதேச சிறுவர் நூல்கள் தினம் (International Children's Book Day)

InternationalBoard on Books for Young People [IBBY]ன் ஆலோசனைப்படி ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ (International Children’s Book Day) 1967 முதல் டானிஷ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ (Hans Christian Andersen) அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 2-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புத்தக வாசித்தலை ஊக்குவிக்க, மற்றும் சிறுவர் நூல்கள் மீதான கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் IBBY-யின் ஒரு தேசியப் பிரிவுக்கு இந்த சர்வதேசக் கொண்டாட்ட நிகழ்வினை அமைக்கும் வாய்ப்புக் கொடுக்க படுகிறது. அதுபோலவே, ஒவ்வொரு ஆண்டும் சிறுவர் இலக்கிய நூல்கள் சார்ந்த ஒரு பொதுவான கருத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி அமைக்கப்படுகிறது. இந்த சிறுவர் நூல்கள் தினத்தன்று IBBY, சிறுவர் இலக்கியங்கள், சிறுவர் நூல் எழுத்தாளர்கள், ஓவியர்கள் (Illustrator) -இவர்களை மையமாகக் கொண்ட ஓவியப் போட்டி, சிறுவர்களுக்கான எழுத்துப் போட்டி, போன்ற பல போட்டிகள் மற்றும் அந்த ஆண்டின் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும் அறிவிக்கின்றது.

தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் சிறுவர் நூல்கள் தினம்!??!..

நாம் தென்-கிழக்கு நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வசிப்பதினால், நம்முடைய பக்கங்களில் இந்த ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ எவ்வாறு கொண்டாடப்படுகிறது என ஆராய்ந்தோமானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம் மக்களிடையே இந்தத் தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமைக்கு காரணம் என்ன? எழுத்தாளர் சு.சி. கூறுகிறார்: “நாம் வசிக்கும் தென்-கிழக்கு நாடுகளில் பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளும், வறுமையுள்ள நாடுகளுமே அதிகம். இந்தியா, வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் -இது போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படையான உணவு, கல்வி குறித்த பிரச்சனைகளே இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது. எனவே இந்த அரசாங்கங்கள் இவற்றை முழுமைப் படுத்துவதற்கான முயற்சிகளிலேயே இன்னும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் விழிபிதுங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் குறிப்பாக சிறுவர் இலக்கியங்களின் மீது கவனம் செலுத்தி, அந்தச் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, இந்தச் சிறுவர்களுக்கு அடிப்படைக் கல்வியை மையப்படுத்தி செயல்படுத்தும் போது, அக்கல்வியோடு சார்ந்த சிறுவர் இலக்கியங்களை அவர்களிடையே புகுத்தினால் தான் அவர்களுக்கும் விழிப்புணர்வும், ஆர்வமும் உண்டாகும். இங்கிருக்கக் கூடிய நூலகங்களும் வெறும் இயக்கங்களாகவும், கட்டிட அளவிலேயும் நில்லாமல், பிற்படுத்தப்பட்டப் பகுதிகளிலுள்ளச் சிறுவர்களை நாடி ‘நடமாடும் நூலகங்களாக’ (Mobile Libraries) வரவேண்டும். இப்படி சாதாரண மக்களிடமும் நூல்களை அறிமுகப்படுத்தினால் தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் சிறுவர் இலக்கிய நூல்கள் வளம் பெறும். பத்து ஆண்டுகளில் இன்றைய சிறுவர்கள் எதிர்காலத்தின் சிக்கல்களைச் சமாளிக்கக் கூடிய சிந்தனையுடைய இளைஞர்களாக மாறுவதற்கு இதன் மூலம் வாய்ப்பு உள்ளது.”


இவ்வாறாக தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ மற்றும் இன்னபிற புத்தகம் சார்ந்த நிகழ்வுகளின் பால் விழிப்புணர்வு ஏற்படாமல் இருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி வருகிறது. ஆம்! புதிது புதிதான பதிப்பாளர்கள் இளம் எழுத்தாளர்கலை ஊக்குவித்து நல்ல நூல்களை நம்முடைய பகுதிகளில் வெளிவரச் செய்கிறார்கள். மேலும் பள்ளி-கல்வி இயக்கங்களும் இப்போது புத்தகங்கள் மீதாக மாணவர் கவனத்தை செலுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நூலகங்களும் எழுத்தாளர் சொன்னது போல மக்களை நாடி வீதிகளுக்கு வரத் தலைப்பட்டுவிட்டன. வளர்ந்து வரும் நாடான இந்தியா-வில், குறிப்பாக தமிழகத்தில் இந்த முன்னேற்றம் பாராட்டத் தக்கதே!

சரி, ஏன் இந்த சர்வதேச சிறுவர் நூல்கள் தினம் ஆண்டர்சென் பிறந்தநாளின் போது கொண்டாடப்படுகிறது? யார் இவர்?

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென் (Hans Christian Andersen)

இலக்கிய உலகில், குறிப்பாக ‘தேவதைக் கதை’ எழுத்தாளர்களில் மிகவும் போற்றத்தக்கவர் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ (Hans Christian Andersen). இவரைத் தவிர்த்து பார்த்தால் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் வெகு சிலரே உள்ளனர். ஆண்டர்சென்-ன் படைப்புகள் பெரும்பான்மையான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், உலக இலக்கிய அரங்குகளில் மிகப் பரவலாக வாசிக்கப்படும் படைப்புகளும் இவையே.

எச்.சி.ஆண்டர்சென் அவர்கள் டென்மார்க்-ல் உள்ள 'ஓடென்ஸ்' என்னும் சிறிய நகரில் 1805-இல் ஏப்ரல் 2-ஆம் நாள் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழலில் இருந்த இவர் டேனிஷ் அரசின் உதவியால் கல்வி கற்க நேர்ந்தது. ஆண்டர்சென் சிறுவயதியே புத்திசாலியாகவும், நல்ல கற்பனை வளம் மிக்கவராகவும், நிறைய புத்தகம் படிப்பவராகவும் இருந்தார். சிறுவயதில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை இவர் மிக விரும்பிப் படிப்பவராயிருந்தார்.

இலக்கியம் மற்றும் நாடகங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்த ஆண்டர்சென் தனது 14-வது வயதில் [1816] ‘டென்மார்க் தலைநகரான கோப்பென்ஹாகன் சென்று தன் திறமையை வளர்க்க முயன்றார். அங்கு இவரின் குரல் வளத்தினால் ‘ராயல் டானிஷ் தியேட்டர்’-ல் வாய்ப்பு கிட்டியது. ஆனால், சில காலங்களிலேயே அவரின் குரல் உடையத் தொடங்கியதும் அந்த வாய்ப்பும் போய்விட்டது.

1822-ல் ஒரு நலம் விரும்பியின் உதவியினால் ஆண்டர்சென்-க்கு Slagelse பள்ளியில் இலக்கணம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. இச்சமயத்தில் அவர் தனது முதல் கதையான ‘The Ghost at Palnatoke's Grave’ –ஐ வெளியிட்டார். பின், 1827 வரை ‘எல்சிநோர்’-ல் தங்கிப் படித்தார்.

A Journey on Foot from Holmen's Canal to the East Point of Amager’ என்னும் சிறுகதையின் மூலம் 1829-ல் ஆண்டர்சென் மிகப்பெரும் வெற்றியை அடைந்தார். அதேநேரத்தில் அவரின் முதல் நாடகமான ‘A Farce’ மற்றும் முதல் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். 1833-ல் டானிஷ் அரசவையிலிருந்து கிடைத்த மானியத்தின் உதவியால் மேற்கொண்ட பயணங்களின் போது புகழ்பெற்ற 'Agnete and the Merman'-யும், 1834-ல் அவரது முதல் நாவலான 'The Improvisatore'-யும் எழுதிமுடித்தார்.

1835-ல் எழுத்தாளர் ஆண்டர்சென்-ன் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி, இலக்கிய வரலாற்றில் அவரது பெயரை ஆழப்பதித்த பெரும்படைப்பான ‘தேவதைக் கதைகள்’ ['Fairy Tales] வெளியிடப்பட்டது. மேலும் இவரின் குறிப்பிடத்தக்கப் படைப்பாகப் போற்றப்படும் 'The Ugly Duckling' என்னும் சிறுவர் கதையை 1837-ல் வெளியிட்டார். இவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.


ஆண்டர்சென் எழுதிய, திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் மிகப் புகழ்பெற்ற படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. அவரின் 'The Ugly Duckling', 'The Snow Queen', 'Thumbelina', 'The Emperors New Clothes', 'The Princess and the Pea' and 'The Little Mermaid' போன்றவை காலத்தினால் அழிக்க முடியாத படைப்புகளாக இலக்கிய உலகில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றன.

சிறுவர் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் படைப்புகளை இயற்றிய ஆண்டர்சென்-ஐ சிறப்பு செய்யும் விதமாக கோப்பென்ஹாகன் துறைமுகப் பகுதியில் அவருடைய சிலையை நிறுவியுள்ளது டென்மார்க் அரசு. மேலும் இவரின் பிறந்தநாள் “சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்” எனக் கொண்டாடப்படுகிறது.

[பல்வேறு மொழிகளில் ஆண்டர்சென்-ன் கதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. Blog-லாம் வெச்சு நடத்துறோம்; நாமளும் கொஞ்சம் மொழிபெயர்ப்போமே-னு எழுந்த விபரீத ஆசை-யின் (??!!??) விளைவாக இதோ 'கதை சொல்லிகளின்' மொழிபெயர்ப்பில் ஆண்டர்சென்-ன் ‘இளவரசியும் குட்டிப் பட்டாணியும்!' நல்ல வேள, ஆண்டர்சென் இப்ப இல்ல!...ஹீ..ஹீ..ஹீ... ஏதோ நம்மால முடிஞ்சது!]

சிறுவர் இலக்கியங்களோடு தொடர்புடைய தளங்கள்:

சிறுவர்களுக்கான பயனுள்ள இணைய-நூலகம்


சிறுவர் நூல்களுக்கான பயனுள்ள தளங்கள்:

7. Storynory