Dec 15, 2019

சென்னையின் சின்னம் - 'ஸ்பென்ஸர் பிளாசா'!

மெட்ராஸ் மவுண்ட் ரோடு, 1863 - மாட்டு வண்டிகளும், ட்ராம்-களும் ரோட்டின் குறுக்கே ஊர்ந்து சென்று கொண்டிருக்க, மிகப் பிரம்மாண்டமானதொரு கட்டடம் சிவப்பு வண்ணம் பூசி 'ஸ்பென்ஸர் பிளாசா' எனும் பெயருடன் புதிதாய் கட்டிமுடிக்கப்பட்டு மெட்ராஸ் மக்களின் பார்வைக்கு விருந்து படைத்து கொண்டிருந்தது

சென்னை அண்ணா சாலை, 2019 - காலை வேளையில் அவசர கதியில் ஓடியாடி தத்தம் வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் மக்கள் கூட்ட நெரிசலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் வெளுத்ததொரு கட்டடம் தனிமையின் சாயலை போர்த்தியபடி நின்று கொண்டிருக்கிறது. அதுவே நாம் முன்பு பார்த்த 'ஸ்பென்சர்'ஸ் கட்டடம்


சமூகத்தின் இரு வேறு கால கட்ட மக்களையும் தன்னுள்ளே ஈர்த்து தனது இரு வேறு முகங்களையும் மக்களுக்கு காட்டி சென்னையின் மிக முக்கிய சாலையில் அமைந்துள்ள இந்த 'ஸ்பென்சர் மால்' 1863-ல் சார்லஸ் டூரன்ட் மற்றும் J.W.ஸ்பென்சர் என்பவர்களால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்ஸி-இல் தொடங்கப்பட்டது. இது ஸ்பென்சர் & கம்பெனி என்ற குழுமத்திற்கு உரிமையாக இருந்தபோது, 1895-இல் இந்திய துணை கண்டத்தின் முதல் பல்பொருள் அங்காடியாகத் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான ஷாப்பிங் மால் ஆகவும், ஆசியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஆகவும் இக்காலக்கட்டத்தில் பெருமை பூண்டிருந்தது.

1983-இல் இந்த ஸ்பென்சர்ஸ் கட்டடம் தீ விபத்து ஒன்றில் சிக்கியது. அதன் பிறகு இக்கட்டிடம், புகழ்பெற்ற இந்தோ-சர்சானிக் கட்டிட அமைப்பு முறைப்படி கட்டப்பட்டது


தற்போது இருக்கும் ஸ்பென்சர் கட்டடம் 1991-இல் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டது. பின்பு வந்த நாட்களில், சென்னையை ஆக்கிரமித்துக் கொண்ட பல பெரிய ஷாப்பிங் மால்-களின் வரவால், ஸ்பென்சர் சற்றே பின்னடைவு கண்டு, தற்போது கேட்பாரற்ற 'லேண்ட் மார்க்'-ஆக உள்ளது. என்றாலும், ஸ்பென்சர்ஸ் பற்றி அறிந்த மக்கள் இன்னமும் அதனை வியப்பு மிக கண்களோடு அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சின்னமாக விளங்கிய 'மூர் அங்காடி' எவ்வாறு சிதிலமடைந்த பின்பும் மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே இந்த 'ஸ்பென்சர் பிளாசா'-வும் சென்னையின் சின்னமாக இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மனத்தில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பதிவில் பேசுவோம்!  

உப்பு, புளி, மிளகாய்! - 'கேசரி'

‘கேசரி’ – பேர கேட்டதும் சும்மா நெய்யும் முந்திரியும் நாவில் நாட்டியம் ஆடும் அந்த வஸ்து நினைவில் வந்து போகிறதா?!!!.... பெரும்பாலான தமிழகத் திருமண பந்திகள்-ல முக்கிய ஐட்டமா இடம் பெரும் பண்டம்-னு இதுக்கு ஒரு அவார்டே தரலாம்ங்க. அட,..ஆமாங்க, இந்த பதிவுல நாம பாக்கப் போறது கேசரி-யோட கதையைத்தான்.

மேலோட்டமா பார்த்தால் இந்த கேசரி வகையறா தென் இந்திய இனிப்பு வகையில தான் சேர்த்தி ஆகுது-ங்க. அதிலும் முக்கியமா கர்நாடகா பகுதிகள்-ல இந்த கேசரி ஒரு பொது உணவு.

கேசரி என்றால் வட மொழியில் 'அரசன்' என்று பொருள். இனிப்புகளுக்கெல்லாம் அரசனாக விளங்குவது போல் உள்ளதால் இதற்கும் கேசரி எனப் பெயரிட்டனர் என்றும் ஒரு விளக்கம் உண்டு.


கேசரி பெரும்பாலும் ரவை அல்லது செமோலினா (அதாவது ‘சேமியா’) கொண்டு சமைக்கப்படுகிறது. ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சூடானதும், அதில் நாலு கரண்டி பசும் நெய் விட்டு, அதில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும்; அதே நெய்யில் தண்ணீர் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறி அவ்வப்போது நெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும். ரவை லேசாக வேக ஆரம்பிக்கும்போது அந்த கலவையில் சர்க்கரை-ஐ கொட்டிக் கிளறி மூடி வைத்து இறக்கவும். மேலே சேர்க்கைக்கு வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சை, கூடவே கொஞ்சம் தூக்கலாக குங்குமப்பூ-வை சேர்த்து....சேர்த்து...சேர்த்து... அடேயப்பா... நாவில் எச்சில் ஊறுகிறது...

இவ்வளவு தாங்க கேசரி. வெரி சிம்பிள்! அப்படியே ஸ்பூனில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்தால், நாவில் வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்கும் இதன் சுவை, ஏப்பம் விடும் வரை அப்படியே இருக்கும்.

இதனுடைய 'கார version' தான் உப்புமா என்றும் சொல்வார்கள். இதே ரவா கேசரியை சேமியாவிலும் செய்யப்படும் இந்த இனிப்பு உணவு 12-ஆம் நூற்றாண்டிலேயே சாளுக்கிய வம்ச மன்னர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டுள்ளது.


இது தாங்க நம்ம கேசரியோட மிகக் குறுகிய சுவையான கதை. உடனே போய் கேசரியை செய்து சாப்பிட்டு இந்த ஜன்ம பிராபல்யத்தை முடிச்சு வைங்க. அடுத்த ‘உப்பு, புளி, மிளகாய்!’ பதிவில் சந்திப்போம். விரைவில்!