Apr 25, 2014
எழுத்தாளர்
பிரபஞ்சன் அவர்கள் ஏப்ரல் 27,
1945-ல்
புதுச்சேரியில் பிறந்தார். தமிழ் வித்வான் பட்டம் பெற்ற இவர், தமிழ் ஆசிரியராய்ப்
பணியாற்றி, பின் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய இதழ்களிலும்
பணியாற்றினார். 1961-ல் பிரபஞ்சன்-இன் முதல் சிறுகதையான
‘என்ன உலகமடா’ பரணி இதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கதைகளும்,
கட்டுரைகளும் தாமரை, தீபம், கண்ணதாசன், கணையாழி போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. 1982-ல் வெளியிடப்பட்ட இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’
தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
1995-ல் ‘வானம் வசப்படும்’ நாவலுக்காக
சாகித்திய அகாதமி விருது பெற்றார். மேலும், புதுச்சேரி அரசு விருது, பாரதீய பாஷா
பரிஷத் விருது, கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது (மகாநதி), இலக்கியச் சிந்தனை
விருது (மானுடம் வெல்லும்), ஆதித்தனார் விருது (சந்தியா) போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பிரபஞ்சன்
அவர்களின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடா, ஆங்கிலம், ஜெர்மனி, பிரெஞ்சு
மற்றும் சுவீடிஷ் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில சிறுகதைகளும், நாடகங்களும் பல்வேறு பல்கலைக்கழகப்
பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர்
நீல.பத்மநாபன் அவர்கள் ஏப்ரல் 26,
1938-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். தமிழில்
குறிப்பிடத்தக்க இலக்கியவாதிகளில் ஒருவரான இவர், 20 நாவல்கள், 170 சிறுகதைகள், 160
கவிதைகள், மற்றும் 150 கட்டுரைகளையும் இதுவரை எழுதியுள்ளார். இவரது முதல் நாவலான
“தலைமுறைகள்”, எழுத்தாளர் க.நா.சு. அவர்களால் ‘இந்தியாவின் சிறந்த பத்து
நாவல்களில் ஒன்று’ எனப் பாராட்டப்பட்ட நூலாகும்.
நீல.பத்மநாபன் அவர்கள் சாகித்திய அகாதமி விருது (இலை உதிர் காலம்), ராஜா
சர் அண்ணாமலைச் செட்டியார் விருது (உறவுகள்), தமிழ்நாடு அரசு மாநில விருது
(தேரோடும் வீதி), தமிழ் அன்னை விருது, பாரதீய பாஷா விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க
விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு இவரின்
பங்களிப்பைப் பாராட்டி ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பு சிறப்பு செய்துள்ளது.
இளம்
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நீல.பத்மநாபன் அவர்கள், ‘நீல பத்மம்’ என்னும்
சிறந்த கவிதைக்கான விருதையும், ‘தலைமுறைகள்’ என்னும் சிறந்த சிறுகதைக்கான
விருதையும் நிறுவி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் வாயிலாக ஆண்டு தோறும் வழங்கி
வருகிறார்.
Subscribe to:
Comments (Atom)

