Mar 4, 2023

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!

    “நமக்கு பொறக்கப்போற புள்ள மேல சத்தியமா நா இனிமே குடிக்க மாட்டேன் டீ!”.... 


    ஒவ்வொரு வார்த்தையும் மென்மெதுவாக காதினில் கேட்டுக்கொண்டே இருக்கிறது அவளுக்கு. கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருப்பதை விழி மூடிய இமைகள் அப்பட்டமாய் காட்டிக்கொண்டிருந்தன. உடல் மட்டும் அசைவற்று கிடந்தது. முந்தைய இரவு நடந்ததை மனம் மென்று கொண்டே இருக்கிறது. 


     யாரோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டு மெல்ல நடந்து போய் திறந்தாள். நிறைமாதம்! குப்பையை அள்ளிக் மொண்டு வந்து கொட்டுவதைப் போல அவனை யாரோ இரண்டு பேர் கொண்டு வந்து கதவுக்குள்ளே தள்ளிவிட்டுச் சென்றனர். அவன் இரையை விழுங்கிய பாம்பு போல மது போதையில் நெளிந்து கொண்டிருந்தான். 


    பயத்தில் முகம் வெளிரியவளாய் மெல்ல அவனைப் பார்த்தாள்! தன்னால் அவனை தூக்கிச் செல்ல முடியாது என்று உணர்ந்தவளாய் அவனை அங்கேயே விட்டுச் செல்ல முனைந்தவளுக்கு வலி தெரிய தொடங்கி விட்டது. தானே நேரம் வந்துவிட்டதை அறிந்து அண்டை வீட்டு தோழியின் உதவியுடன் மருத்துவமனைக்குச் செல்ல தயாராகிவிட்டாள்! 


    விடிகாலையில் பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்றறியாத வண்ணம் குலைந்து போயிருந்தது! ஆம்! அவளுக்கு அழ கூட திராணி இல்லை. மயக்கம் இன்னும் தெளியவில்லை. 

    போதை தெளிந்து எழுந்தவன் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு ஓடினான். மருத்துவமனை அறையில் அவள் மட்டும் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் தொட்டில் காலியாக இருந்தது. அவன் மெல்ல அவளின் பக்கத்தில் குனிந்து அவள் கையைத் தொட்டான். மது வாடை மெலிதாக வீசியது. அவன் ஸ்பரிசம் கண்டதும் அவளின் கை விரல்கள் மெதுவாக அசைந்தன. மெல்ல கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். விழிகளின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. அவனும் அழுதான்! 


    கண்ணீரினூடே அவன் மீண்டும் சொன்னான்,... “நமக்கு பொறக்கப்போற புள்ள மேல சத்தியமா நா இனிமே குடிக்க மாட்டேன் டீ!”....

0 comments: